காலையா, மாலையா? எப்போது நடப்பது சிறந்த பலன் தரும் தெரியுமா?
Morning vs Evening Walking : காலை அல்லது மாலை எந்த நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது என இந்த பதிவில் காணலாம்.
Morning vs Evening Walking : காலை அல்லது மாலை எந்த நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது என இந்த பதிவில் காணலாம்.
நடைப்பயிற்சி மிகவும் எளிமையானது. இதற்கான சிறப்பான உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. உங்களிடம் 30 நிமிடங்கள் இருந்தால் போதுமானது. சுறுசுறுப்பாக நடந்தாலும், மிதமான வேகத்தில் நடந்தாலும், மிகவும் மெதுவாக நடந்தாலும் சரி எப்படி நடந்தாலும் உங்களுக்கு பலன் அளிக்கக்கூடிய பயிற்சியாக இருக்கும். அனைத்து வயதினரும் செய்யக்கூடிய உடற்பயிற்சி ஆகும். நாள்தோறும் நடைபயிற்சி செய்பவர்கள் உடல் எடை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். அவர்களுடைய இதயம் வலுவாகும். இதனால் இதய நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். இது தவிர உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்யக்கூடியது நடைப்பயிற்சியாகும். ஆனால் காலை அல்லது மாலை எந்த நேரத்தில் நடப்பது உடலுக்கு சிறப்பான பலன்களை தரும் என தெரியுமா? இந்த பதிவில் எப்போது நடப்பது உடலுக்கு ஆரோக்கியம் என காணலாம்.
காலை அல்லது மாலை ஆகிய இரண்டு நேரங்களிலும் எதை நடைபயிற்சிக்காக தேர்ந்தெடுப்பது என்பது ஒவ்வொருவரின் தேவையும், நோக்கத்தையும் பொறுத்தது. உடற்பயிற்சி செய்வதற்கான நேரத்தை ஒதுக்குவது தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கை முறையை சார்ந்துள்ளது. இங்கு காலை மற்றும் மாலை ஆகிய நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வதன் நன்மைகள் விளக்கப்பட்டுள்ளது. இதில் உங்களுடைய தேவைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: இப்படி 'வாக்கிங்' போறது தெரியுமா? உடலை இரும்பாக்கும் '4' முறைகள்!!
காலையில் எழுந்து உடலின் இயக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் நடைபயிற்சி செய்வது நேர்மறையான மாற்றத்தை உண்டு செய்யும். உங்களுக்கு உற்சாகத்தையும் நாள் முழுக்க இயங்கும் சுறுசுறுப்பையும் காலை நேர நடைபயிற்சி கொடுக்கும். மனநிலையை மேம்படுத்துவதோடு ஆற்றலையும் அதிகரிக்கும். காலையில் நடைபயிற்சி செய்வதால் உங்களுடைய வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. இதனால் உடலின் அதிகமான ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் அதிக ஆற்றலை பயன்படுத்தும் போது கலோரிகளும் விரைவாக எரிக்கப்படுகின்றன. இதனால் எடை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. காலையில் உடலில் சூரிய ஒளிபடுவதால் வைட்டமின் டி கிடைக்கிறது. இது உங்களுடைய எலும்புகள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது. காலையில் நடப்பது உங்களுடைய மனநிலையை சீராக்கும் எண்டோர்பின்(Endorphin) ஹார்மோன்களை வெளியிடுவதாக சொல்லப்படுகிறது. இதனால் மனச்சோர்வு நீங்கி மனத்தெளிவும், கவனமும் அதிகரிக்கும். தூக்கம், விழிப்பு சுழற்சியை சரியாக நிர்வகிக்க காலை நடை உதவியாக இருக்கும். இதனால் இரவில் ஆழ்ந்த உறக்கம் வரும்.
இதையும் படிங்க: வாழ்க்கையை மாற்றும் '10' நிமிட வாக்கிங்.. பலர் அறியாத சூப்பர் ட்ரிக்!!
காலை நேர நடைபயிற்சி போலவே மாலை நேரத்தில் நடப்பதும் உடலுக்கு நன்மைகளைத் தருகிறது. காலையில் அலுவலகம், கல்லூரி, பள்ளி என முக்கிய வேலைகள் இருப்பவர்கள் மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம். மாலை நடையானது பகல் முழுக்க அவர்களுக்கு இருந்த சோர்வு, மன அழுத்தத்தை நீக்கி புத்துணர்வை தரும். மாலை நேரங்களில் நடப்பது தசைகளில் செயல்பாட்டை அதிகரித்து வலிமை அடைய செய்கின்றன. உடலில் செயல் திறன் அதிகமாக மாலை நேரத்தில் நடக்கலாம். நீங்கள் உங்களுடைய நண்பர் அல்லது குடும்பத்தில் உள்ளவர்களுடன் உரையாடியபடி மாலை நேரத்தில் நடைபயிற்சி செய்தால் மனநிலையும் மேம்படும். அதே நேரம் மனம் விரும்பியவுடன் நேரத்தை செலவிட்ட திருப்தியும் கிடைக்கும். காலையில் உங்களுக்கு போதுமான நேரம் இல்லாத பட்சத்தில் உடற்பயிற்சிக்கான நேரம் செலவிடுவது சிரமமாக இருக்கும். ஆனால் நீங்கள் மாலை நேரத்தை நடைபயிற்சிக்காக ஒதுக்கிவிட்டால் தொடர்ந்து அதை தவறாமல் செய்ய வசதியாக இருக்கும். இதனால் உடலும் ஆரோக்கியமாக மாறும்.
- காலை நேரத்தில் நீங்கள் நடைபெற்று செய்தால் உங்களுடைய உடலில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருப்பீர்கள் உற்சாகத்தை தரவும், வளர்சிதை மாற்றத்தை தூண்டவும் காலை நேர உடற்பயிற்சியை தேர்வு செய்யலாம். அதிலும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் நடந்தால் அதிகப்படியான கொழுப்புகள் எரிக்கப்படும். எடை கட்டுக்குள் இருக்கும். செரிமான மேம்பட, மன அழுத்தத்தை குறைக்க மாலை நேர நடைபயிற்சியை தேர்வு செய்யலாம்.
- உங்களுக்கு நாள் முழுக்க இருந்த பதற்றம், மனச்சோர்வு ஆகியவற்றை தனித்து மன தெளிவை ஏற்படுத்த மாலை நேர நடை பயிற்சி உதவுகிறது. உங்களுடைய வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு காலை மற்றும் மாலை நேர நடைபயிற்சி வெவ்வேறு பலன்களைத் தரும். கொழுப்பினை குறைப்பது உங்களுடைய குறிக்கோளாக இருந்தால் காலை நேர நடைபயிற்சி அதற்கு சிறப்பான தேர்வாக இருக்கும்.
- உங்களுடைய முழு உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மனதை இலகுவாக வைத்திருப்பதற்கும் நீங்கள் மாலை நேரத்தில் நடைபயிற்சி செய்யலாம். உங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப காலை அல்லது மாலை என எந்த நேரத்திலும் நீங்கள் நடக்கலாம் நடப்பது உங்களுடைய ஆரோக்கியத்திற்கு சிறந்த பயிற்சியாக இருக்கும்.