முடி வளர்ச்சி துவங்கி, கண்கள் ஆரோக்கியம் வரை முருங்கை இலை பல்வேறு நோய்களுக்கு தீர்வு தருகிறது. ‘சூப்பர் ஃபுட்’ என்று அழைக்கப்படும் முருங்கை இலை பொடியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
முருங்கை இலையில் பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள், அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இதில் கேரட்டை விட நான்கு மடங்கு அதிகமான வைட்டமின் ஏவும், ஆரஞ்சு பழத்தை விட ஏழு மடங்கு அதிகமான வைட்டமின் சியும், வைட்டமின் பி1, பி2, பி3 பி6, ஃபோலேட், வைட்டமின் இ மற்றும் வைட்டமின் கே உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. பசும்பாலை விட நான்கு மடங்கு கால்சியமும், வாழைப்பழத்தை விட மூன்று மடங்கு பொட்டாசியமும், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், மாங்கனீசு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. அதேபோல் தயிரை விட இரண்டு மடங்கு புரதச்சத்து முருங்கை இலையில் உள்ளது. இது சிறந்த புரத ஆதாரமாக விளங்குகிறது.
25
முருங்கை இலையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
இதில் இருக்கும் குளோரோஜெனிக் அமிலம், குவர்செடின், பீட்டா கரோட்டின் போன்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட்கள் செல்களில் ஏற்படும் சேதத்தை தடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. மேலும் செரிமான மண்டலத்திற்கு தேவையான நார்ச்சத்தை முருங்கை இலை வழங்குகிறது முருங்கை இலை பொடியை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். நீரிழிவு நோயாளிகள் தினமும் காலை அல்லது இரவு வேளையில் முருங்கை இலை பொடியை சாதத்துடனோ அல்லது வெந்நீரில் கலந்தோ குடித்து வரலாம். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் ஏற்படும் நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் காரணமாக ஆஸ்துமா, கீல்வாதம் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
35
உடலுக்கு ஆரோக்கியம் தரும் முருங்கை இலை
முருங்கை இலை பொடியை தொடர்ந்து எடுத்து வருபவர்களுக்கு கல்லீரல் செல்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. இதனால் கல்லீரல் செயல்பாடு மேம்படுகிறது. ஃபேட்டி லிவர், கல்லீரல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது. கெட்ட கொழுப்பு குறைக்கப்பட்டு நல்ல கொழுப்பை அதிகரிக்க முருங்கை இலை பொடி உதவுகிறது. இதன் காரணமாக இதய நோய் அபாயம் வெகுவாக குறைகிறது. முருங்கை இலை பொடி உடலில் உள்ள மெட்டபாலிசத்தை மேம்படுத்தி கொழுப்பை எரிக்கும் செயல்முறையை விரைவுப்படுத்துகிறது. இதனால் உடல் எடை அதிகரிக்காமல் வெகுவாக குறைகிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலை நீக்கி செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நரம்பு மண்டலத்தை பாதுகாப்பதால் நரம்புகள் மற்றும் மூளை செயல்பாடுகள் மேம்படுகின்றன.
வைட்டமின் ஏ சத்து நிறைந்து இருப்பதால் கண்களுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கிறது. மேலும் வைட்டமின்கள் தாதுக்கள் மிகுந்து இருப்பதால் சருமம் கூந்தல் ஆகியவை ஊட்டமளிக்கப்பட்டு ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்க உதவுகிறது. இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் ரத்த சோகை உள்ளவர்களுக்கு இது சிறந்த தீர்வாக அமைகிறது. சில ஆய்வுகளின் படி முருங்கை இலை பொடி சில புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது. முருங்கை இலை பொடி தோலில் ஏற்படும் காயங்களை விரைவாக குணப்படுத்துகிறது. முருங்கை இலை பொடியை பல்வேறு வழிகளில் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கப் வெந்நீரில் ஒரு ஸ்பூன் முருங்கை இலை பொடியை சேர்த்து தேநீர் போல் ஆக்கி குடிக்கலாம் அல்லது சூடான சாதத்தில் முருங்கை இலை பருப்பு சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிடலாம்.
55
மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளலாம்
சூப் தயாரிக்கும் பொழுது சிறிதளவு முருங்கைப் பொடியை சேர்த்து தயாரிக்கலாம். சப்பாத்தி மாவு, தோசை மாவு, பொரியல், சாம்பார் உள்ளிட்ட உணவுகளில் சிறிதளவு முருங்கைப்பொடியை சேர்த்துக் கொள்ளலாம். முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் முருங்கை இலை பொடியை தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டருடன் கலந்து ஃபேஸ் பேக் போல பயன்படுத்தலாம். தற்போது சந்தைகளில் முருங்கை இலையை பொடி செய்து மாத்திரை வடிவிலும் விற்பனை செய்யப்படுகிறது. சரியான மருத்துவரின் ஆலோசனையுடன் சப்ளிமெண்ட்ஸ் ஆகவும் எடுத்துக் கொள்ளலாம். முருங்கை இலை எந்த பின் விளைவுகளையும் ஏற்படுத்தாது என்ற போதிலும் உங்களது உடல் நலனை பொறுத்து விளைவுகள் மாறுபடலாம். எனவே மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற்று அதன் பின்னர் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.