
தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கமும் நிறைந்துள்ளது. உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் விஷயத்தை, நாம் உட்கார்ந்த இடத்திலிருந்தே அறிந்து கொள்ள முடியும். சமூக வலைதளங்களை பயன்படுத்தாத ஒருவர் கூட இல்லை என்கிற நிலைமை தற்போது உருவாகி உள்ளது. நாம் அனைவரும் ஏதாவது ஒரு சமூக வலைதளத்தில், நமது பங்களிப்பை அளித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் சிலர் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி பல மணி நேரம் அதிலேயே நேரத்தை செலவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவ்வாறு நீண்ட நேரம் சமூக வலைதளத்தை பயன்படுத்துவதால் என்ன விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது என்பது பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா.? குறிப்பாக குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சிந்தித்து இருக்கிறீர்களா.?
குழந்தைகளின் 10 வயது முதல் அவர்களின் மூளையானது சில மாற்றங்களை தானே செய்து கொள்ளும். மற்றவர்கள் தன்னை கவனிக்க வேண்டும் என்ற எண்ணமும், தனக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணமும் குழந்தைகளுக்கு அந்த சமயத்தில் மேலோங்கி இருக்கும். அப்போது குழந்தைகள் தான் எதிர்பார்க்கும் அனைத்தையும் சமூக வலைதளங்கள் மூலம் பெற முடியும் என்கிற எண்ணத்தை உருவாக்கி கொள்கின்றனர். அவர்கள் எதிர்பார்க்கும் அங்கீகாரமும், கவனமும் பெற்றோர்களிடமிருந்து கிடைக்காத பட்சத்தில், அவர்கள் தன்னைத்தானே குறைவாக நினைத்துக் கொள்கின்றனர். இதனால் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. இதை தவிர்க்க நீண்ட நேரம் சமூக வலைதளங்களில் செலவழிக்க தொடங்குகின்றனர். இதனால் ஆன்லைன் தாக்குதல்கள் மற்றும் பார்னோகிராஃபி ஆகியவற்றிற்கும் அவர்கள் அடிமையாகும் சூழல் உருவாகிறது.
நீண்ட நேரம் சமூக வலைதளங்களில் நேரம் செலவழிக்கும் பொழுது, அது நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. இதனால் மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவை உண்டாகிறது. தேவையற்ற வீடியோக்களை பார்க்கும் பொழுது நிறைய விஷயங்கள் மூளையில் சேர்க்கிறது. இதனால் குழந்தைகளின் சிந்தனை திறன் குறையத் தொடங்குகிறது. மேலும் நீண்ட நேர செல்போன் பயன்பாடு கண் பார்வை மங்குதல், கண்களில் பாதிப்பு, ஞாபக மறதி, மூளைக் கோளாறுகள் போன்றவற்றையும் ஏற்படுத்துகிறது. சமூக வலைதளத்திற்கு அடிமையான குழந்தைகளின் சுபாவம், நடத்தையில் பெருமளவில் மாற்றம் ஏற்படுகிறது. ஒரே இடத்தில் அமர்ந்து மொபைல் பார்ப்பதன் மூலமாக அவர்களுக்கு உடல் ஆரோக்கியம் கெடுகிறது. சிறு வயதிலேயே உடல் பருமன், நீரிழிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, குழந்தைகளிடமிருந்து ஸ்மார்ட் ஃபோன் உபயோகத்தை முற்றிலும் குறைக்க வேண்டும்.
ஸ்மார்ட் ஃபோனுக்கு பாஸ்வேர்டு போட வேண்டும். குழந்தைகள் மொபைல் பயன்படுத்தும் நேரத்தை உடனடியாக குறைக்க முடியாவிட்டாலும் மெல்ல, மெல்ல குறைக்க வேண்டும். குழந்தைகள் வெளியில் சென்று விளையாடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறமை இருக்கும். அதை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும். ஓவியம், கலைப் பொருட்கள் உருவாக்குதல், நடனம், பாட்டு போன்ற பிற விஷயங்களில் கவனம் செலுத்த வைக்க வேண்டும். வயதில் பெரிய குழந்தைகளாக இருந்தால் கிரிக்கெட், யோகா, பரதம், மாடித்தோட்டம், பேட்மிண்ட்டன், இசைக்கருவிகள் கற்க வைத்தல், செஸ், கேரம், ரோபோடிக்ஸ், சைக்கிளிங், ஸ்கேட்டிங், ஸ்கிப்பிங், நீச்சல் என நூற்றுக்கணக்கான மாற்று வழிகள் கொட்டி கிடக்கின்றன. இதைத்தான் செய்ய வேண்டும் என வலிய திணிக்காமல், குழந்தைகளுக்கு எது வருகிறதோ, அதில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.
குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது என்றால் நீங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு குறைவாக ஃபோனை பயன்படுத்துகிறீர்களோ, அதை பார்த்து பிள்ளைகளும் கற்றுக் கொள்ளும். காலை பள்ளி சென்று, மாலை வீடு திரும்பும் குழந்தைகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், அவர்கள் ஸ்மார்ட் ஃபோன், டிவிகளை நாடி ஓடத் தொடங்கிவிடுவர். எனவே குழந்தைகள் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமானால், நீங்கள் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். பிள்ளைகளிடம் சமூக வலைத்தளங்களைப் பற்றியும் அதனால் விளையும் நன்மை, தீமைகள் பற்றியும் பேச வேண்டும். வயது வரம்பு உடைய சமூக வலைதளங்களை தான் குழந்தைகள் பயன்படுத்துகிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நாளைய இந்தியாவின் தூண்களான அவர்களை வலிமை உள்ளவர்களாக கட்டமைக்க வேண்டுமானால் ஸ்மார்ட் ஃபோன் மற்றும் சமூக வலைதளத்தின் பிடியிலிருந்து அவர்களை மீட்க வேண்டியது நமது கடமையாகும்.