
உலகின் மிகவும் கொடூரமான பாடிபில்டர் என்று அழைக்கப்படும் இல்லியா 'கோலெம்' யெஃபிம்ச்சிக், மாரடைப்பால் தனது 36 வயதில் இறந்தார். நெஞ்சு வலி காரணமாக செப்டம்பர் 6 ஆம் தேதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் கோமா நிலைக்குச் சென்றார். சில நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 11 அன்று, அவர் இறந்தார்.
பெலாரஸ் நாட்டை சேர்ந்த பாடிபில்டர், தொழில்முறை நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என்றாலும், சமூக ஊடகங்களில் தனது வொர்க்அவுட்டைப் பற்றிய வீடியோக்களைப் பகிர்ந்து, மிகவும் பிரபலமானார். தினமும் 16,500 கலோரிகள் என்ற அளவில் அவர் 7 முறை உணவு சாப்பிட்டு வந்துள்ளார். .
பாடிபில்டர்களுக்கு ஏன் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகம்?
சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, இளைஞர்களுக்கு அதிக மாரடைப்பு ஏற்படுகிறது. உடற்பயிற்சி செய்யும் போது, அல்லது டிரெட்மில்லில் ஓடும் போது திடீரென மயங்கி விழும் தொடர்ச்சியான போக்கை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
ஆனால் உடற்பயிற்சி மற்றும் வொர்க்அவுட் செய்யும் போது இளைஞர்களுக்கு ஏன் மாரடைப்பு ஏற்படுகிறது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் இருக்கும்.
அதாவது "பளு தூக்குதல் மற்றும் ஜிம் உடற்பயிற்சிகள் இருதய ஆரோக்கியம், தசை வலிமை மற்றும் ஒட்டுமொத்த உடற்தகுதிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அதை சரியாகவும் அளவாகவும் செய்தால் மட்டுமே நன்மை கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்தச் செயல்பாடுகளைச் சமன் செய்வதும், "உடலில் அதிக அழுத்தத்தைத் தவிர்ப்பதும் அவசியம் என்று கூறும் மருத்துவர்கள் அதீத உடற்கட்டமைப்பு அல்லது பளு தூக்குதல் போன்றவற்றில் ஈடுபடும் நபர்களுக்கு, இதய ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதும், செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகளின் பயன்பாட்டைத் தவிர்ப்பதும் முக்கியம் என்றும் தெரிவிக்கின்றனர்.
மிதமான, முறையான நுட்பம் மற்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் ஆகியவை ஜிம் உடற்பயிற்சிகள் ஆபத்தை ஏற்படுத்துவதை விட நீண்ட கால ஆரோக்கியத்திற்கு சாதகமாக பங்களிக்கின்றன என்பதை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
மாரடைப்பு எப்படி ஏற்படுகிறது?
இதயத்தின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் தடைபடும் போது மாரடைப்பு ஏற்படுகிறது, பொதுவாக கரோனரி தமனிகளில் ழுப்பு மற்றும் பிற பொருட்களின் கவலைகள் சேர்வதால் அடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பு இதயத்திற்கு ரத்தம் செல்வதை தடுக்கிறது. அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், புகைபிடித்தல், உடல் பருமன் மற்றும் செயலற்ற வாழ்க்கை முறை ஆகியவை மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணிகள் ஆகும்.
ஆனால் இளம் வயதினர் மற்றும் ஆரோக்கியமான நபர்கள் கூட ஆபத்தில் இருக்கக்கூடும், குறிப்பாக இதய நிலைகள் அல்லது அனபோலிக் ஸ்டெராய்டுகள் போன்ற ஆரோக்கியமற்ற பொருட்களைப் பயன்படுத்தினால் அவர்களுக்கு ஆபத்து அதிகம்., இலியா யெஃபிம்ச்சிக்கின் மறைவுக்கு பல காரணிகள் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உடல் கட்டமைப்பில் தீவிர கவனம் செலுத்துவதன் மூலம், சில சாத்தியமான காரணங்களில் அதிகப்படியான உடல் உழைப்பு, செயல்திறனை மேம்படுத்தும் பொருட்களின் தவறான பயன்பாடு, அடிப்படை இருதய பிரச்சினைகள் அல்லது மரபணு முன்கணிப்புகள் ஆகியவை அடங்கும். இது அரித்மியா அல்லது திடீர் இதய நிகழ்வுகளை விளைவிக்கலாம்.
தங்களின் உடல் வலிமையால் பாடி பில்டர்கள் பெரும்பாலும் இதயப் பிரச்சனைகளின் அறிகுறிகளை நிராகரிக்கலாம், சாதாரண தசை வலி அல்லது சோர்வு என்று தவறாக நினைத்துக்கொள்ளக்கூடும் என்றும் நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
உங்களை எப்படி பாதுகாப்பது?
பாதுகாப்பான மற்றும் பயனுள்ள உடற்பயிற்சிகளை உறுதிப்படுத்த சில வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது முக்கியம்.
ஜிம் செஷனுக்கு முன்னும் பின்னும் குறைந்தது 20 நிமிடங்களுக்கு வார்ம்-அப் மற்றும் கூல்-டவுன் பயிற்சிகளுடன் தொடங்கவும்.
உடற்பயிற்சியின் பின் உங்கள் உடலின் எதிர்வினைகளைக் கவனியுங்கள், இடது பக்கத்தில் மார்பு வலி அல்லது மூட்டுகளில் அசௌகரியம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
இதேபோல், உங்களுக்கு தலைச்சுற்றல், இதயத்துடிப்பு, மூச்சு விடுவதில் சிரமம், படபடப்பு அல்லது மயக்கம் ஏற்பட்டால், உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.
நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் அதிக உழைப்பைத் தவிர்க்கவும், இது உங்கள் இதயத்தை கஷ்டப்படுத்தும்.
ஃபிட்னஸ் டிரெண்டுகள் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பதால் கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டாம்.
தீவிர உடற்பயிற்சிகளை தொடங்குவதற்கு முன், இதய பரிசோதனைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏனெனில் இது சாத்தியமான இதய பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிய உதவும்.
சத்தான உணவுகளை உண்பது, நீரேற்றத்துடன் இருப்பது மற்றும் போதுமான தூக்கத்தைப் பெறுவதன் மூலம் ஒட்டுமொத்த நல்வாழ்வில் கவனம் செலுத்துங்கள்.
விறுவிறுப்பான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் அல்லது நீச்சல் போன்ற குறைந்த தாக்க உடற்பயிற்சிகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
உரிமம் பெற்ற மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமல், சப்ளிமெண்ட்ஸ் அல்லது செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.