
ஸ்கூல் லீவ் விட்டாச்சு..பேமிலியோடு எங்கையவது டூர் போகணும்னு ஆசையா? ஆனால் பட்ஜெட் அதிகமாகிடுமோ என்ற கவலை இருக்கா? பட்ஜெட்டைப் பற்றி கவலைப்படாமல் குறைந்த செலவிலேயே குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து இயற்கை, கோயில், மலை, கடற்கரை என விதவிதமான இடங்களை ரசிக்க முடியும்.
குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் பெரிய தொகை செலவாகும் என்ற அவசியமே இல்லை. சரியான இடத்தை தேர்வு செய்து, பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, தங்குமிடம் மற்றும் போக்குவரவு செலவை சரியாக தேர்வு செய்தல் போன்ற சிக்கனமான வழிகளை பின்பற்றினால் பாக்கெட்டுக்கு பாரமாக இல்லாமல் குறைந்த செலவிலேயே நிறைவான பேமிலி டூரை முடித்துவிட்டு வரலாம்.
பணம் அதிகம் செலவாகுமே என்ற கவலையை ஓரமாக வைத்துவிட்டு, ஒரு சின்ன பிளானுடன் பயணத்தை தொடங்குங்கள். அந்த வகையில், குறைந்த பட்ஜெட்டில் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல உதவும் 10 சூப்பர் வழிகள் இதோ.
டிப் 1: சுற்றுலா என்றால் வெகு தூரம் செல்ல வேண்டும் என்று நினைக்க வேண்டியதில்லை. உங்கள் ஊரிலிருந்து சில மணி நேர பயணத்தில் இருக்கும் அழகான சுற்றுலா தலங்களையே தேர்வு செய்தால், குடும்பத்துடன் ஜாலியாக ஒரு ட்ரிப் சென்று வரலாம்.
இதன் மூலம் பெட்ரோல், டீசல் மற்றும் போக்குவரத்து செலவை கணிசமாக குறைக்க முடியும். குறிப்பாக ஒரே நாளில் சென்று திரும்பக்கூடிய இடங்களை தேர்வு செய்தால், ஹோட்டல் செலவையும் தவிர்க்கலாம்.
குழந்தைகளுடன் காலையில் கிளம்பி, வழியில் இயற்கை காட்சிகளை ரசித்து, பிடித்த இடங்களில் நேரத்தை செலவிட்டு, மாலைக்குள் வீடு திரும்பலாம். குறைந்த செலவு.. நிறைய சந்தோஷம். குடும்பத்துடன் மறக்க முடியாத ஒரு நாள்.
டிப் 2 : குடும்பத்துடன் நீண்ட தூரம் சுற்றுலா செல்ல பிளான் பண்றீங்களா? அப்படியென்றால், ரயில் பயணத்தையும் உங்கள் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். காரில் செல்வதைவிட சில பயணங்களுக்கு ரயில் வசதியாக இருப்பதுடன், குடும்பமாக ஒன்றாக பயணிக்கும் அனுபவமும் கிடைக்கும்.
குறிப்பாக முன்கூட்டியே ரயில் டிக்கெட்டுகளை திட்டமிட்டு முன்பதிவு செய்வது, பயணச் செலவை கட்டுப்படுத்த உதவும். மேலும், குழந்தைகளுடன் ரயிலில் பயணிப்பது அவர்களுக்கும் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். ஜன்னல் வழியாக மாறி மாறி வரும் இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு செல்லலாம். பயணமும் ஒரு அனுபவம்தான்.
டிப் 3 : சொந்த கார் இல்லையே என்று சுற்றுலா ஆசையை தள்ளிப்போட வேண்டாம். குடும்பத்துடன் ஜாலியாக டூர் செல்ல பேருந்து சேவைகளை பயன்படுத்தலாம்.
குறிப்பாக அருகிலுள்ள அல்லது நடுத்தர தொலைவு சுற்றுலா தலங்களுக்கு செல்லும்போது, கார் வாடகைக்கு எடுப்பதைவிட பேருந்தில் செல்வது சில நேரங்களில் சிக்கனமானதாக இருக்கலாம். குடும்பத்தில் எத்தனை பேர் செல்கிறார்கள், பயணிக்கும் தூரம் மற்றும் பேருந்து கட்டணம் ஆகியவற்றை முன்கூட்டியே கணக்கிட்டு தேர்வு செய்யலாம்.
மேலும், டிரைவிங் டென்ஷன் இல்லாமல் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டும், சுற்றுப்புறக் காட்சிகளை ரசித்துக்கொண்டும் பயணிக்கலாம். பட்ஜெட்டும் கையில், சுற்றுலா சந்தோஷமும் மனதில். கார் இல்லையே என்ற கவலை வேண்டாம். பஸ் பிடித்து பேமிலியுடன் டூர் கிளம்பலாம்.
டிப் 4 : விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் பிரபலமான இடங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதுடன், தங்குமிடம் உள்ளிட்ட சில செலவுகளும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அதனால், முடிந்தால் வார நாட்களில் அல்லது அதிக கூட்டம் இல்லாத காலகட்டத்தில் குடும்ப சுற்றுலாவை திட்டமிடலாம். இதனால் சுற்றுலா தலங்களில் நெரிசலை தவிர்த்து, குழந்தைகளுடன் நிதானமாக இடங்களை ரசிக்க முடியும்.
மேலும், பயண தேதியை முன்கூட்டியே திட்டமிட்டு தங்குமிடங்களை ஒப்பிட்டு தேர்வு செய்வதன் மூலம் பட்ஜெட்டையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். கூட்டம் குறைவு, செலவு குறைவு, குடும்பத்துடன் சந்தோஷம் அதிகம். இந்த விடுமுறைக்கு கொஞ்சம் வித்தியாசமாக டூர் பிளான் பண்ணிப் பாருங்க.
டிப் 5 : பயண தேதியை முன்கூட்டியே முடிவு செய்து ஹோட்டல், லாட்ஜ் அல்லது குடும்பத்துக்கு ஏற்ற தங்குமிடங்களை ஒப்பிட்டு முன்பதிவு செய்தால், கடைசி நேர அலைச்சலை தவிர்க்கலாம்.
ஹோட்டல் அறைகளின் விலை, இருப்பிடம், குடும்பத்துக்கு தேவையான வசதிகள் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே பார்த்து தேர்வு செய்வது பயண பட்ஜெட்டை திட்டமிட உதவும்.
சுற்றுலா தலத்துக்கு அருகிலேயே தங்க வேண்டும் என்ற அவசியமில்லை. சற்று தூரத்தில் உள்ள நல்ல தங்குமிடங்களையும் ஒப்பிட்டு பாருங்கள். குறைந்த செலவில் வசதியான அறை கிடைத்தால், அந்த சேமிப்பை குடும்பத்துடன் இன்னும் ஒரு ஸ்பெஷல் அனுபவத்துக்கு பயன்படுத்தலாம்.டிப் 1:
டிப் 6 : சுற்றுலா என்றாலே ஹோட்டல் சாப்பாடு, அதிக பில் என்ற நிலை வேண்டாமே. குடும்பத்துடன் வெளியூர் செல்லும்போது, வீட்டிலேயே சில எளிய உணவுகளை தயாரித்து எடுத்துச் சென்றால், பயணச் செலவில் கணிசமான தொகையை சேமிக்க முடியும்.
இட்லி, சப்பாத்தி, எலுமிச்சை சாதம், புளியோதரை போன்ற எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய உணவுகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பயணத்தின்போது கைகொடுக்கும். அதேபோல் பிஸ்கட், பழங்கள் போன்ற தேவையான சிற்றுண்டிகளையும் தேவைக்கேற்ப எடுத்துச் செல்லலாம்.
இதனால் வழியில் பசி எடுக்கும்போதெல்லாம் ஹோட்டலைத் தேடி செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் உணவை சுத்தமாகவும், சரியான முறையில் பேக் செய்தும் எடுத்துச் செல்வது மிகவும் முக்கியம். நீண்ட நேரம் கெட்டுப்போகக்கூடிய உணவுகளை தவிர்த்து, பாதுகாப்பான உணவுகளைத் தேர்வு செய்யுங்கள்.
டிப் 7 : சுற்றுலா என்றாலே நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அவசியமே இல்லை. குடும்பத்துடன் வெளியூர் செல்லும்போது, இயற்கை அழகை இலவசமாக ரசிக்கக்கூடிய இடங்களையும் உங்கள் டூர் பிளானில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பூங்காக்கள், கடற்கரைகள், இயற்கைக் காட்சிகள், சில கோயில் வளாகங்கள் உள்ளிட்ட இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் பார்க்கக்கூடிய இடங்களை தேர்வு செய்யலாம். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடவும், குடும்பமாக புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவும் இத்தகைய இடங்கள் நல்ல வாய்ப்பாக இருக்கும்.
மேலும், ஒரே நாளில் பல கட்டண இடங்களை சுற்றிப் பார்ப்பதற்குப் பதிலாக, இலவச இடங்களையும் கட்டண இடங்களையும் கலந்து திட்டமிடலாம். இதனால் நுழைவுக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை ஓரளவு குறைத்து, பட்ஜெட்டுக்குள் சுற்றுலாவை முடிக்க முடியும்.
டிப் 8 : ஒரே ஒரு இடத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பணுமா? கொஞ்சம் பிளான் பண்ணினால் ஒரே பயணத்தில் இன்னும் பல இடங்களை ரசிக்கலாம். நீங்கள் செல்லும் முக்கிய சுற்றுலா தலத்தைச் சுற்றியுள்ள அருகிலுள்ள இடங்களையும் முன்கூட்டியே பட்டியலிட்டு, ஒரே பயணத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இதனால் தனித்தனியாக பல நாட்களில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல், ஒரே போக்குவரத்து செலவில் பல இடங்களை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இயற்கை, கோயில், அருவி, பூங்கா என வெவ்வேறு அனுபவங்களையும் ஒரே டூரில் குடும்பத்துடன் ரசிக்கலாம்.
டிப் 9 : சுற்றுலா போனால் அங்கே கிடைக்கும் பொருட்களை எல்லாம் வாங்கணும்னு ஆசை வருவது இயல்புதான். நினைவுப் பொருட்கள், ஆடைகள், உள்ளூர் ஸ்பெஷல் பொருட்கள், தின்பண்டங்கள் என ஒவ்வொன்றாக வாங்கத் தொடங்கினால், தெரியாமலேயே பட்ஜெட்டைத் தாண்டிவிடலாம்.
அதனால், சுற்றுலா கிளம்புவதற்கு முன்பே ஷாப்பிங்கிற்கென ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைத்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு செலவு செய்யலாம் என்பதையும் முன்கூட்டியே முடிவு செய்தால், தேவையில்லாத பொருட்களை வாங்குவதை கட்டுப்படுத்த முடியும்.
டிப் 10 : சுற்றுலா போகும்போது செலவு எவ்வளவு ஆகிறது என்று தெரியாமலேயே பணம் செலவழிப்பது வழக்கம். ஆனால் பயணத்திற்கு முன்பே ஒரு சின்ன பட்ஜெட் போட்டுவிட்டால், குடும்பத்துடன் சந்தோஷமாக சுற்றிவிட்டு வந்த பிறகும் பணம் பற்றிய கவலை இருக்காது.
பயணத்திற்கு முன்பே போக்குவரத்து, உணவு, தங்குமிடம், நுழைவுக் கட்டணம், ஷாப்பிங் என ஒவ்வொரு செலவுக்கும் தனித்தனியாக ஒரு தொகையை ஒதுக்குங்கள். தினமும் அதிகபட்சம் எவ்வளவு செலவு செய்யலாம் என்பதையும் குடும்பமாக முடிவு செய்து வைத்துக்கொள்ளலாம்.
அதேபோல், எதிர்பாராத மருத்துவச் செலவு, கூடுதல் பயணச் செலவு அல்லது வேறு அவசரத் தேவைகள் ஏற்பட்டால் பயன்படுத்துவதற்காக ஒரு சிறிய தொகையை தனியாக வைத்திருப்பதும் நல்லது.
குறைந்த பட்ஜெட்டில் சுற்றுலா செல்கிறோம் என்பதற்காக மகிழ்ச்சியையும் குறைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. பெரிய செலவுகள் இல்லாமலேயே குடும்பத்துடன் மறக்க முடியாத தருணங்களை உருவாக்க முடியும்.
குழந்தைகள் ரசிக்கும் இயற்கை இடங்கள், பூங்காக்கள், விளையாடும் இடங்கள், அழகான காட்சிகள் போன்றவற்றை பயணத் திட்டத்தில் சேர்க்கலாம். செல்லும் ஊரின் பிரபலமான உள்ளூர் உணவுகளை அளவோடு சுவைத்து, புதிய அனுபவங்களையும் குடும்பத்துடன் பகிர்ந்துகொள்ளலாம்.
அதேபோல், சுற்றுலாவில் ஒவ்வொரு இடத்தையும் அவசரமாக சுற்றிப் பார்ப்பதைவிட, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசுவது, புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது, குழந்தைகளுடன் விளையாடுவது போன்ற எளிய தருணங்களே நீண்ட நாட்களுக்கு நினைவில் நிற்கும்.
செலவை குறைப்பது மட்டும் இலக்கு அல்ல, குடும்பமாக மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் நேரத்தை செலவிடுவதுதான் இந்த டூரின் உண்மையான வெற்றி.
எனவே, இந்த விடுமுறையில் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் ஒரு சின்ன பிளான் போட்டு, குடும்பத்துடன் ஜாலியாக கிளம்புங்கள். அழகான நினைவுகளுடன் திரும்பி வாருங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.