மெய்வழி சாலை
சாதி, மதங்களைக் கடந்து மனிதர்கள் அனைவரும் மனிதர்களாகவே இருக்க வேண்டும் என்ற மேண்மையான நோக்கத்தையே கோட்பாடாகக் கொண்டு செயல்படுவது தான் மெய்வழி மதம். இந்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் தமிழகம் முழுவதும் பரவலாகக் காணப்படுகின்றனர். இம்மதத்தை பின்பற்றுபவர்கள் அனைவரும் தங்கள் பெயருக்கு முன்னாள் மெய்வழிச்சாலை அல்லது சாலை என்ற அடைமொழியுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
மெய்வழி சாலை
தலைப்பாகை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்த இம்மதத்தைச் சேர்ந்த ஆண்கள் அந்தனர்கள் என்றும், பெண்கள் அனந்தாதிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். தமிழகம் முழுவதும் இவர்கள் பரவலாகக் காணப்பட்டாலும் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே, ஊறல்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மெய்வழி சாலை கிராமம் தான் இதன் தலைமை இடமாக உணரப்படுகிறது. இக்கிராமத்தில் வாழும் மக்களிடம் கோடிகளில் சொத்து இருந்தாலும் அனைவரும் எளி்மையின் அடையாளமாக குடிசை வீடுகளிலேயே தற்போதும் வாழ்ந்து வருகின்றனர். இயற்கையோடு எளிமையாக ஒன்றி வாழவேண்டும் என்ற கருத்தை இம்மதம் எடுத்துறைப்பதால் இவர்கள் அனைவரும் அதனை தீர்க்கமாக பின்பற்றுகின்றனர்.
மெய்வழி சாலை
இக்கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்திலும் மின்சாரம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு மண்ணென்ணை மற்றும் சூரிய ஒளி விளக்குகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்திற்கும் உச்சமாக கிராமத்தில் மது, பீடி, சிகரெட், சினிமா, டிவி ஆகியவை முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழும் மக்கள் அனைவரும் மெய்வழி மதத்தைத் தழுவிய நிலையில் தீபாவளி, ரம்ஜான், கிருஸ்துமஸ் என எந்த பண்டிகையையும் கொண்டாடுவது கிடையாது. இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகையை மட்டும் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
மெய்வழி சாலை
கார்த்திகை தீபமும் இங்கு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒரே நேரத்தில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான நெய்விளக்குகள் ஏற்றப்பட்டு ஒட்டுமொத்த கிராமமும் ஒளி வெள்ளத்தில் பிரகாசிக்கும். இதற்கு அடுத்தபடியாக வைகாசி மாத பௌர்ணமி அன்று நடைபெறும் வைகாசி திருவிழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. புத்தாடை உடுத்தி, கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
மெய்வழி சாலை
இம்மதத்தில் உருவ வழிபாடு இல்லை என்றபோதிலும் இவர்கள் சாலை ஆண்டவரை தெய்வமாக வணங்குகின்றனர். இவரது ஜீவ சமாதியின் மீது தான்பொன்னரங்க தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இவர் மதுரை மாவட்டம் மார்க்கம்பட்டி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் காதர் பாட்சா என்றும், இவர் 131 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவர் தான் மெய்வழி மதத்தை முதன்முதலாக தோற்றுவித்துள்ளார்.