
இன்றைய தினம் என்னுடைய தோழியிடம் போன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது எதேச்சையாக நான் கொட்டாவி விடவும், அடுத்த நொடியிலேயே அவரும் கொட்டாவி விட்டார். அது எப்படி ஒரே நேரத்தில் நிகழ்கிறது என சிந்திக்க தொடங்கினேன். அதற்கான பதிலையும் தேடினேன்.
அன்றாடம் நாம் செய்யக்கூடிய அனிச்சையான நிகழ்வில் கொட்டாவியும் ஒன்று. வாயை நன்கு திறந்து, மூச்சை உள்ளிழுத்து மெல்ல வெளியிடுவதே கொட்டாவியாகும். கொட்டாவி பெரும்பாலும் நாம் சோர்வடையும்போது, சலிப்பாக உணரும்போது, மற்றொருவர் கொட்டாவி விடும்போது வரக்கூடியது.
கொட்டாவி விடும் போது வாயைத் திறப்பதோடு மட்டுமல்லாமல் நம்முடைய தொண்டை, முகம் உள்ளிட்ட பல்வேறு தசைகளும் இயங்க காரணமாகிறது. நம்முடைய சோர்வு, தூக்க உணர்வு போன்றவற்றுடன் கொட்டாவி தொடர்புடையது என சொல்லப்பட்டாலும் உடலின் மற்ற பல விஷயங்களோடு கொட்டாவி தொடர்புடையது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஏன் கொட்டாவி வருகிறது?
கொட்டாவி என்பது வெறுமனே ஒரு ஆழமான சுவாசம் வெளியிடும் நிகழ்வு மட்டும் அல்ல. நம்முடைய மூளையில் வெப்பநிலையை கட்டுப்படுத்த, ஆக்சிஜன் தேவையை அதிகரிக்க, விழிப்புணர்வு உணர்வை மேம்படுத்த என பல காரணங்களுக்காக கொட்டாவி நிகழ்கிறது.
தொடர் கொட்டாவி ஏற்பட மூளை சம்பந்தப்பட்ட பகுதிகள் தான் காரணமாக உள்ளது. சிறப்பு மூளை செல்களான மிரர் நியூரான் அமைப்பு மற்றவர்கள் செயல்களை பிரதிபலிக்கும் தன்மை உடையது. இதுவே ஒருவர் கொட்டாவி விடும்போது மற்றொருவரை தூண்டுகிறது.
பரிணாமக் கோட்பாடான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான குழு ஒத்திசைவு தொற்று கொட்டாவி ஏற்படகாரணமாக இருக்கலாம். எல்லாவற்றிற்கும் தலைமையாக செயல்படும் மூளையிலிருந்து தான் கொட்டாவி செயல்முறை ஆரம்பிக்கிறது.
மூளையில் உள்ள ஹைப்போதலாமஸில் வரும் சிக்னல் தான் கொட்டாவி வருவதற்கு முதல் காரணம். ஹைபோதலாமஸில் இருந்து வரக்கூடிய கட்டளையானது ஆழமாக மூச்சை உள்ளே இழுத்து தசை நீட்சியை செயல்படுத்த அறிவுறுத்துகிறது. இந்த செயல்பாட்டால் மூளையில் உள்ள மனநிலையை சீராக்கும் டோபமைன் மாதிரியான ரசாயனங்கள் வெளியிடப்படுகின்றன.
பெரும்பாலும் கொட்டாவி வருவதை தூக்கம் வருவதன் அறிகுறியாகவே எல்லோராலும் சொல்லப்படுகிறது. ஒருவர் சோர்வாக தூக்க நிலைக்கு செல்லும்போது அடிக்கடி கொட்டாவி விடுவதை பார்த்திருப்போம் இதுவே தூக்க செயல்பாடுகளுடன் கொட்டாவியை இணைப்பதற்கு காரணமாக உள்ளது ஆனால் இது மட்டுமின்றி கொட்டாவி பல செயல்பாடுகளை குறிப்பதாக கூறப்படுகிறது. அது சரி இதுயெல்லாம் கொட்டாவியின் பொதுவான காரணங்களாக இருக்கின்றன. ஏன் ஒருவருக்கு வரும்போது இன்னொருவர் கொட்டாவி விடுகிறார் அதற்கான காரணத்தை இப்போது காணலாம்.
கொட்டாவியின் சுவாரசியமான உண்மையே ஒருவர் கொட்டாவி விடும்போது அருகில் இருக்கும் இன்னொருவரும் கொட்டாவி விடுவது தான். யாரேனும் கொட்டாவி விட்டால் அதை பார்ப்பதால் அல்லது கொட்டாவி விடுவதை பற்றி பேசுவதால், அவ்வளவு ஏன் அது குறித்து படிப்பது கூட கொட்டாவி விட நம்மைத் தூண்டும். இதற்கு பச்சாதாபம் ஒரு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இது சமூக தொடர்புடையதும் கூட.
மக்கள் மட்டுமின்றி விலங்குகளும் கொட்டாவி விடுகின்றன. மனிதர்கள், சில விலங்குகள் தாங்கள் யாருடன் நெருக்கமாக உணர்கிறார்களோ அல்லது யாரிடம் பச்சாதாபம் காட்டுகிறார்களோ அவர்கள் அருகாமையில் கொட்டாவி விடுவதற்கான வாய்ப்புகள் ஏராளம் என ஆய்வுகள் கூறுகின்றன.
இது ஒரு தகவல் தொடர்பு வடிவமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த நடத்தை அவர்களுடைய செயல்களை ஒத்திசைக்க உதவும். ஓய்வுக்கான சிக்னலாக தொற்றக்கூடிய கொட்டாவி இருப்பதற்கான காரணங்கள் தெளிவாக விளக்கப்படவில்லை. ஆனால் சமூகப் புரிதல், உணர்ச்சிரீதியான தொடர்புகள் அடிப்படையில் மூளையின் செயல்பாடுகளில் கொட்டாவி சொல்லக்கூடிய வகையில் பங்களிக்கிறது.
கொட்டாவி விடுவது பச்சாதாபத்துடன் தொடர்புடையது. மற்றொருவர் கொட்டாவி விடும் போது நாமும் கொட்டாவி விடுவதால் அவர்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முயல்கிறோம். இது உணர்வுரீதியான புரிதலை உணர்த்துவற்கானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. யாரேனும் கொட்டாவி விடுவதைக் கண்டு நீங்கள் கொட்டாவி விட்டால், உங்களுடைய மூளை பச்சாதாபமாக நடந்து கொள்ள முயல்கிறது.
இதற்கு மிரர் நியூரான்கள் ஒரு காரணமாகவும் இருக்கலாம். இந்த நியூரான்கள் மற்றவர்கள் செய்யும் செயலை கவனிக்கும்போதே செயல்படும். குடும்பத்தில் உள்ளவர்கள், நட்பு வட்டாரம், வளர்ப்பு பிராணிகள் உள்ளிட்டோருடன் பந்தத்தைப் பகிரும்போது கொட்டாவி சங்கிலித்தொடர் போல அன்னிச்சையாக நிகழ்கிறது.
நாம் நமக்கு நெருக்கமான நபர்களுக்கு பதிலாக கூட கொட்டாவி விடுவதற்கான வாய்ப்புகள் கூட அதிகமாக இருக்கின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு குழு ஒற்றுமை, சமூகப் பிணைப்பு போன்றவற்றை வளர்க்கும் காரணங்கள் இருக்கலாம். இது உடல் மற்றும் உணர்வுரீதியான இணக்கத்தை குறிக்கும்.
மனிதர்களிடம் மட்டுமல்ல விலங்குகளிடமும் கொட்டாவி தொடர் நிகழ்ச்சியாக உள்ளது. உதாரணமாக வீட்டு விலங்குகளான நாய், பூனை போன்றவை கொட்டாவி விடுவதையே எடுத்து கொள்ளலாம். நம்முடைய வீட்டில் வளரும் நாய்களும் பூனைகளும் கூட நாம் கொட்டாவி விடுவதை கண்டால் அவைகளும் கொட்டாவி விடும்.
இதையும் படிங்க: அதிகமாக கொட்டாவி விடுவது ஆபத்து.. உடல் பேசும் மொழியை கேளுங்கள்
அவை தங்கள் சொந்த இனத்தில் உள்ள விலங்குகள் கொட்டாவி விடும்போதும் கொட்டாவி விடும். குரங்கு இனங்களான சிம்பன்ஸிகள், போனபோஸ்கள் உள்ளிட்ட சில விலங்குகளும் இப்படியான பழக்கத்தைக் வைத்துள்ளன. இந்த பழக்கம் அந்த இனக்குழுவின் சமூக நடத்தையுடன் தொடர்புடையது. அவற்றுக்குள் இணக்கத்தை உண்டு பண்ணுகிறது.
கொட்டாவியை குறைக்க வாய்ப்புள்ளதா?
சுய விழிப்புணர்வு தான் எளிமையான வழி. மற்றவர் கொட்டாவி விடும்போது கவனமாக அதை நீங்கள் தவிர்க்க நினைக்கலாம். அந்த நேரத்தில் உங்களைத் திசைதிருப்ப மற்ற செயலில் ஈடுபடுங்கள். உங்களுடைய மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகளில் ஈடுபடுங்கள். போதுமான அளவு தூங்குங்கள். இதுவே தொற்று கொட்டாவியை அதிகரிக்கும் காரணியாகும்.
இதையும் படிங்க: Yawning Reason: அடிக்கடி கொட்டாவி வராமல் தடுக்க...இந்த 5 வழிமுறைகளை மட்டும் பின்பற்றுங்கள்....