
பொதுவாக நம்மில் பலர் வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளிப்போம். இன்னும் சிலர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு குளிப்பார்கள். மேலும் சிலரோ தினமும் தலைக்கு குளிப்பதை வழக்கமாக்கி உள்ளனர். தலைக்கு குளிப்பதற்கு ஆற்று நீர், கிணற்றின் நீர், போர்வெல் நீர் அல்லது மாநகராட்சி இணைப்பில் இருந்து வரும் தண்ணீரை தான் பயன்படுத்துவோம். இத்தகைய சூழ்நிலையில், வீட்டில் இருக்கும் போது கிணறு மற்றும் ஆற்று நீரில் குளிக்கும் போது முடி பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். அதுவே நாம் வேலை நிமித்தமாக வெளியூர்களுக்கு சென்றால் ஒரே மாதத்தில் முடி அளவுக்கு அதிகமாக கொட்ட ஆரம்பிக்கும். இதற்கு உப்பு தண்ணீர் தான் காரணம் என்று நம்மில் பலரும் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அது உண்மையா? என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக தலைமுடி கொட்டுவதற்கு முக்கிய காரணம் வேர்களில் உள்ள பிரச்சனைதான். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு வழுக்கை விழுவதற்கு முக்கிய காரணம் ஹார்மோன் குறைபாடு தான். சிலருக்கு பூஞ்சை தொற்று, ஊட்டச்சத்து குறைபாடு, வயது அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்கள் கூட முடி கொட்டுவதற்கு உள்ளன. உங்களுக்கு தெரியுமா.. நம்முடைய தலையின் மேல் பரப்பிலிருந்து முடியின் வேர்ப் பகுதி வரை தண்ணீர் செல்லாது. எனவே உப்பு தண்ணீரில் குளித்தால் கூட வேரின் ஊடுருவி முடி கொட்டுவதற்கான வாய்ப்பு இல்லவே இல்லை.
அதுபோல ஆற்று நீர் மழை நீரை சாஃப்ட் வாட்டர் என்று சொல்லுவார்கள். இவற்றில் கால்சியம் கார்பனேட், மெக்னீசியம், சல்பைட் போன்ற உப்புக்கள் குறைவாகவே இருப்பதால் இவை முடி உதிர்வை ஏற்படுத்தாது என்கின்றனர். அதுவே போர்வெல் தண்ணீரில் கால்சியம், கார்பனேட், மெக்னீசியம், சல்பேட் அதிகமாக இருப்பதால் அந்தத் தண்ணீரில் தலைக்கு குளிக்கும் போது அதில் இருக்கும் உப்பு முடியின் வேரில் படிந்து தலைமுடியின் தன்மையை மாற்றி முடி உதிர்வதற்கு வழிவகுக்கும் என்று சிலர் சொல்லுகின்றனர்.
இதுகுறித்து ஆராய்ச்சியில் ஒன்று நடத்தப்பட்டது. அதில் 20 பெண்கள் பங்கேற்றனர். ஒரு மாதத்திற்குள் முதல் 10 பேர் போர்வெல் தண்ணீரிலும், மற்றொரு 10 பேர் ஆற்றுத் தண்ணீரிலும் குளிக்க வேண்டும். அதன் பிறகு 20 பேரின் தலைமுடியை சோதித்தனர். சோதனையின் முடிவில், அவர்கள் அனைவரது முடியில் எந்தவித வித்தியாசமும் இல்லை. முடியின் வலிமை ஒரே மாதிரியாக தான் இருந்தது. எனவே இனி உப்பு தண்ணீரில் குளித்தால் முடி கொட்டுகிறது என்று சொல்லுவதை நிறுத்துங்கள்.
இதையும் படிங்க: கொத்து கொத்தா முடி கொட்டுதா? நீங்க சாதாரணமா பண்ற இந்த பழக்கத்தை விடுங்க!
முடி கொட்டுவதற்கு ஹார்மோன் அல்லது ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல காரணங்கள் இருக்கலாம். ஒருவேளை உங்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை அதிகமாக இருந்தால் நீங்கள் நல்ல மருத்துவரை அணுகி, அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: முடி உதிர்வுக்கு உணவும் காரணம்.. அடர்த்தியாக முடி வளர '7' உணவுகள்..