
எந்த குழந்தையும் பிறக்கும்போதே புத்திசாலியாக பிறப்பதில்லை. அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இருந்தால் புத்திசாலியாக மாறுகிறார்கள். ஆர்வமும், தேடலும் தான் குழந்தைகளை அறிவாளிகளாக மாற்றுகிறது. இதற்கு பெற்றோரின் வழிகாட்டுதலும் தேவை. சில சரியான பழக்கங்களும், ஊக்கப்படுத்துதலும் இருந்தால் குழந்தைகள் தன்னம்பிக்கை உடையவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இயல்பிலே வளர்வார்கள். கற்பனை திறனை அதிகரிப்பது தொடங்கி என்னென்ன விஷயங்களை பெற்றோர் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
குழந்தைகள் தங்களுடைய தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ள பெற்றோர் மிக முக்கிய காரணம். பெற்றோரிடமிருந்து தான் குழந்தைகள் பல வாழ்க்கை பாடங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் கற்றுக் கொள்கிறார்கள். அதனால் குழந்தைகளுக்கு பிறருடைய வார்த்தைகளை புரிந்து கொள்ள கற்றுக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, உங்களுடைய குழந்தை அணிந்திருக்கும் உடை அவர்களுக்கு பிடித்திருக்க வேண்டியது அவசியம்; ஆனால் அது அவர்களுடைய நண்பர்களுக்கு பிடித்திருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. யாராவது உங்களுடைய குழந்தையின் உடையை கிண்டல் செய்யும்போது அவர்கள் மனம் உடைந்து போகாமல் இருக்க பெற்றோர் சில விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும். பிறர் நம்மிடம் சொல்வது அவர்களுடைய வெறும் கருத்து தானே தவிர, உண்மை அல்ல என்பதை புரிந்து கொள்ளும் திறனை குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். இது குழந்தையை தன்னம்பிக்கையாக வளர வைக்கும்.
குழந்தைகள் அவ்வப்போது சலிப்படைவது இயல்புதான். அவர்களுடைய மூளைக்கு ஓய்வு தேவைப்படுகிறது. எப்போதும் படிப்பு, விளையாட்டு என பிஸியாக இருப்பதை விட எதுவும் செய்யாமல் கொஞ்ச நேரம் ஓய்வும் எடுக்க வேண்டும். டிவி, செல்போன், விளையாட்டு, படிப்பு என எதுவுமே இல்லாமல் அவர்கள் சும்மா இருக்கவும் பழக வேண்டும். இது அவர்களின் சிந்தனையை மேம்படுத்தும். அவர்கள் சுதந்திரமாக யோசிக்க வாய்ப்பளிக்கிறது. இதனால் அவர்களின் கற்பனைத்திறன், பிரச்சினை தீர்க்கும் திறன் மேம்படும்.
மனிதர்கள் தவறு செய்வது இயல்புதான். குழந்தைகள் அதில் விதிவிலக்கல்ல. குழந்தைகள் சில விஷயங்களை தவறுதலாக செய்யும் போது அவர்களை அன்பாக கண்டிக்க வேண்டும். அந்த விஷயத்தில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டி அவர்களுக்கு புரிய வைப்பது பெற்றோருடைய முக்கிய கடமையாகும். இதன் மூலம் அவர்கள் தவறு செய்தால் தன்னம்பிக்கை இழந்து உடைந்து போகாமல் அதிலிருந்து மீண்டு வருவார்கள்.
குழந்தைகளுடன் உரையாட வேண்டும். அவர்களுடன் உரையாடும் போது அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பது போன்ற கேள்விகளை கேட்க வேண்டும். இதன் மூலம் அவர்களுடைய கருத்துக்களை கேட்டறிந்து ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகள் மனம் திறந்து பேசுவதை காது கொடுத்து கேட்க வேண்டும். ஒரு சம்பவத்தை குழந்தைகள் எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்பதை அறிய வேண்டும். சில நல்ல கருத்துக்களை குழந்தைகள் சொல்லும் போது அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். இது அவர்களின் சிந்தனையை மேம்படுத்த உதவும்.
குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பது மூளைக்கு புத்துணர்வை அளிக்கிறது நடைபயிற்சி விளையாட்டுகள் நடனம் யோகா போன்றவை குழந்தைகளின் மூளையில் BDNF எனப்படும் புரதத்தை வெளியிடுமாம். இதுவே நினைவாற்றலையும், மன தைரியத்தையும் அதிகரிக்கும். ஆகவே குழந்தைகள் வெளியே விளையாட சென்றால் அவர்களை தடுக்க வேண்டாம். ஓடியாடி அவர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்துங்கள்.
குழந்தைகளுக்கு புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை தொடங்கி வைக்கலாம். புத்தகம் படிக்க குழந்தைகள் விரும்பாத பட்சத்தில் அவர்களுக்கு கதைகளை சொல்லி வளர்க்கலாம். பேசுதல், கேட்டல், கற்பனை செய்தல் ஆகியவை குழந்தைகளின் சிந்தனையை மேம்படுத்தும். தினம் தூங்கும் முன்பாக குழந்தைகளுக்கு கதை சொல்லி அவர்களுடன் உரையாடுவது மன உறுதியை அதிகரிக்கும்.
குழந்தைகள் ஒரே நாளில் புத்திசாலியாக மாறி விடமாட்டார்கள். தொடர்ச்சியான முயற்சிகளும், பயிற்சிகளுமே அவர்களை புத்திசாலியாக மாற்றும். அதற்கான சூழலையும் அனுபவத்தையும் வழிகாட்டலையும் அளிக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.