Henna paste: மருதாணி கைகளில் நல்லா சிவக்க வேண்டுமா? எப்படி அரைக்க வேண்டும், என்ன சேர்க்கலாம், எவ்வளவு நேரம் கைகளில் வைக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய குறிப்புகள் இதோ!
மருதாணி வைக்க யாருக்குத்தான் பிடிக்காது. கை முழுவதும் சிவப்பாக, அதிலிருந்து வரும் இயற்கையான மணம் என மருதாணி வைப்பதே ஒரு தனி அழகு. குறிப்பாக பெண்களுக்கு மருதாணி என்றாலே திருமணம், பண்டிகை, கொண்டாட்டம் என பல நினைவுகள் வந்து செல்லும். ஆனால், எல்லோருக்கும் மருதாணி வைத்தால் எதிர்பார்த்தபடி சிவப்பாகப் பிடிப்பதில்லை. சிலருக்கு லேசான ஆரஞ்சு நிறமாகவும், சிலருக்கு சிவப்பு-பழுப்பு நிறமாகவும் மட்டுமே இருக்கும்.
மருதாணியை எப்படி அரைத்தால் கைகளில் நல்ல சிவப்பு நிறம் பிடிக்கும்? அரைக்கும் போது என்னென்ன பொருட்களை சேர்க்கலாம், எவ்வளவு நேரம் ஊறவைக்க வேண்டும், கைகளில் எவ்வளவு நேரம் வைத்திருக்க வேண்டும்? மருதாணியின் நிறம் நீண்ட நேரம் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்தத் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
25
மருதாணி வைத்தால் ஏன் கை சிவப்பாக மாறுகிறது?
மருதாணி கைகளில் சிவப்பு நிறம் பிடிப்பதற்கு முக்கிய காரணம் ‘லாஸோன்’ (Lawsone) என்ற இயற்கையான நிறமிப் பொருளாகும். இவை சருமத்தில் உள்ள கெரட்டின் (Keratin) புரதத்துடன் இணைவதன் மூலம் முதலில் ஆரஞ்சு நிறத்திலும், பின்னர் சிவப்பு அல்லது சிவப்பு-பழுப்பு நிறத்திலும் மாறுகிறது.
35
மருதாணியை எப்படி அரைக்க வேண்டும்?
மருதாணி இலையை அரைக்கும் போது ஒரு சிறிய துண்டு புளி கொட்டைப்பாக்கு (பாக்கு), நெல்லிக்காய் சேர்த்து அரைத்தால் நிறம் அடர்த்தியாக இருக்கும்.
மருதாணி அரைக்கும் போது தண்ணீருக்குப் பதிலாக எலுமிச்சை சாறு அல்லது புளித்த தயிரை சேர்த்து அரைக்கலாம். இதில் உள்ள அமிலம் நிறத்தை அதிகரிக்க உதவும்.
அதேபோல், டீத்தூள் அல்லது காபித்தூள் வடிகட்டிய நீரையோ அல்லது கிராம்புகளை கொதிக்க வைத்த நீரை ஊற்றி அரைத்தால் நல்ல சிவப்பு நிறம் பிடிக்கும்.
இலையை அரைக்கும் போது ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்தால், மருதாணியை கைகளில் வைக்கும் போது சீக்கிரம் காய்ந்து உதிர்ந்துவிடாமல், நீண்ட நேரம் ஒட்டியிருக்கும். இதனால் சிவப்பு நிறமாக பிடிக்கும்.
பொதுவாக மருதாணி இலையை மிக்ஸியில் அரைப்பதை விட அம்மியில் அரைத்தால் நன்றாக பிடிக்கும். அரைத்த மருதாணியை உடனே பயன்படுத்தாமல், மூடி வைத்து சில மணி நேரம் வைத்திருந்து கையில் வைக்கவும்.
அப்படி கைகளில் மருதாணி வைக்கும் முன் எண்ணெய், கிரீம், லோஷன் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
55
மருதாணி சிவப்பாக பிடிக்க
மருதாணியை கைகளில் வைத்த பிறகு குறைந்தபட்சம் 4 முதல் 5 மணி நேரம் அப்படியே விடவும். லேசாக காய்ந்ததும், எலுமிச்சை சாற்றில் சர்க்கரை கலந்து மருதாணி மீது தடவவும்.
மருதாணி நன்றாக காய்ந்து உதிர்ந்த உடன், தண்ணீரால் கழுவாமல், தேங்காய் எண்ணெய் அல்லது கிராம்பு எண்ணெய் தடவலாம் அல்லது தோசைக்கல்லில் நான்கு கிராம்புகளை வைத்து சூடானதும், உள்ளங்கை மற்றும் விரல்களை ஆவி படும் படி காட்டினால் மருதாணி சிவப்பாக பிடிக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.