குழந்தைகளின் உலகம் ரொம்ப அழகானது. அவர்களின் கற்பனைத்திறன் அளாதியானது. ஆனால் சில நேரங்களில் குழந்தைகளின் சுயப்பேச்சு எதிர்மறையாகவும் (negative) இருக்கும். "நான் முட்டாள், நான் அசிங்கமா இருக்கேன், நான் குண்டா இருக்கேன், நான் ஒல்லியா இருக்கேன். நான் அழகா இல்லை. என்னை யாருக்கும் புடிக்கல" இப்படி குழந்தைகள் கூறினால் உடனடியாக பெற்றோர் தலையிட்டு அவர்களிடம் பேசவேண்டும். அவர்கள் அதிகமாக நேசிக்கப்படுகிறார்கள், அவர்கள் தன்னியல்பாக இருக்கிறார்கள் என்பதை புரிய வைக்க வேண்டும்.
தங்களை குறித்த குறைந்த சுயமதிப்பு உள்ள குழந்தைகள் இப்படி உணரலாம். இதனால் தங்களுடைய திறன்களை குறித்த சந்தேகம் வரும். அப்படிப்பட்ட சூழலில் குழந்தையை அப்படியே விடக்கூடாது. அவர்களை பேசக் கூடாது என தடுக்க வேண்டாம்.குழந்தைகளுக்காக செவிகளை திறந்து வையுங்கள். குழந்தைக்கு தன்னம்பிக்கை குறையும்போது சுயசந்தேகம் ஏற்படும். அப்போதுதான் சுயப்பேச்சு அதிகமாக இருக்கும். அவர்கள் அப்படி பேசும்போது அவர்களுடைய மனநிலையை புரிந்து கொள்ள முடியும். அதன் பிறகு நீங்கள் அவர்களுக்கு நம்பிக்கையூட்டலாம். அவர்களுடைய சுயமதிப்பை உயர்த்தலாம்.
நீங்கள் பெற்றோராக, உங்கள் குழந்தையின் பேச்சைக் கேட்பது மட்டுமல்லாமல், அவர்களுடைய உணர்வுகளை அங்கீகரிப்பதும் ரொம்ப முக்கியம். குழந்தையின் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் இருந்தால், அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதைச் அவர்களிடம் சொல்லாமல் அதை ஒப்புக்கொள்ளுங்கள். அப்படி ஏன் அவர்கள் உணர்கிறார்கள் என்பதையும் மெல்ல அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மிகுந்த அரவணைபுடன் நேர்மறையான வார்த்தைகளை கூறுங்கள். அவர்களுடைய சுய மதிப்பு அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள அவர்களுக்கு உதவுவதே உங்களுடைய குறிக்கோள் என்பதை மறக்காதீர்கள். அவர்கள் மீது எதையும் திணிக்காதீர்கள்.
குழந்தைகளின் எதிர்மறை சுயப்பேச்சுக்கு அவர்களுடைய பலம் என்ன என்பதை அறியாததும் காரணம். அவர்களுடைய தனித்துவத்தை சுட்டிக்காட்டி அதை அவர்களும் தெரிந்து கொள்ள உதவுவதும் பெற்றோரின் கடமை. தினமும் அவர்களுடைய பலம் குறித்து குழந்தைகளிடம் பேச்சு கொடுங்கள். அதை வளர்ப்பது குறித்து பேசி வழிகாட்டுங்கள். அவர்கள் முயற்சி செய்யும்போதும், வெற்றி பெறும்போதும் பாராட்டத் தயங்கவே கூடாது. உற்சாகப்படுத்தி கொண்டே இருங்கள்.