எல்லோரும் முத்து போல வெண்மையான பற்களை விரும்புகிறார்கள். ஆனால் நாக்கை எப்போதும் வெண்மையாக வைத்திருக்க மறந்துவிடுகிறார்கள். ஆரோக்கியமான நாக்கு இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும். மேற்பரப்பில் கொஞ்சம் வெள்ளையாக இருந்தால் போதும். ஆனால் முழுவதும் வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக இருந்தால் ஆபத்து.
வாய் சுகாதாரத்தை பேணாமல் விடுவது, புகைபிடித்தல், மரபியல் காரணம், காபி, டீ ஆகிய காபின் கலந்த பானங்களை அருந்துவது போன்ற காரணங்களால் நாக்கு வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக மாறும். நாவில் வெள்ளை பூச்சு உணவு துகள்கள், கிருமிகள், இறந்த செல்கள் காரணமாகவும் ஏற்படுகிறது. இதிலிருந்து விடுபட சில எளிய வழிகள் உள்ளன.
அழுக்குபடிந்த நாக்கை சுத்தம் செய்ய நாக்கு வளிப்பானை (tongue cleaner) பயன்படுத்துவதாகும். இவை மெடிக்கல் ஷாப்களில், சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும். இவை உங்கள் நாக்கில் உள்ள பாக்டீரியா மற்றும் கழிவுகளை நீக்கும்.
தயிர் மாதிரியான புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகளை உண்பதும் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை நீக்கும். புரோபயாடிக்குகள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைக்கும் வல்லமை கொண்டவை. இது நாக்கில் வெள்ளை பூச்சு உருவாவதைத் தடுக்கும்.
பூண்டு சாறை நாக்கில் தடவி 5 நிமிடம் கழித்து வாய் கொப்பளிக்கலாம். நாவில் உள்ள பூஞ்சை தொற்று, கிருமிகள் நீங்கும்.
ஒரு டம்பளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி உப்பை சேர்த்து கொள்ளுங்கள். இந்த நீரை சுமார் 30 வினாடிகள் முன்னும் பின்னுமாக வாய்க்குள் கொண்டு சென்று கொப்பளிக்கவும். உப்பு கிருமிகளுக்கு எதிராக செயல்படும் பண்புகளைக் கொண்டுள்ளது. வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிப்பதோடு, உங்கள் நாக்கில் வெள்ளை நிறத்தை மாற்றவும் உதவுகிறது.