
நடைபயிற்சி மேற்கொள்தல் இளையோரையும், முதியோரையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முக்கிய பயிற்சியாகும். அதிலும் பெண்கள் தினமும் நடப்பது அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். முதுமையடையும்போது மக்களின் வாழ்க்கை முறை மாறுபடுகிறது. அப்போது நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருப்பது அவசியமாகிறது. இந்த மாதிரி முதுமை சார்ந்த உடல்நலப் பிரச்சினைகளை தவிர்க்க நடைபயிற்சி சிறந்த தேர்வாகும்.
ஆரோக்கிய பலன்களை பெற ஒருவர் 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும் என சொல்லப்படுகிற நிலையில், 60 வயதை கடந்தவர்கள் இந்த இலக்கை அடைவது எளிதல்ல. அவர்கள் அதை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என புதிய ஆய்வு கூறுகிறது. அதிலும் 60 வயதை கடந்த பெண்கள் 10 ஆயிரம் காலடிகள் நடக்க வேண்டியதில்லை என இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகள் 60 வயது கடந்த பெண்கள் தினம் நடக்க வேண்டும் என தெரிவிக்கின்றன. ஆனால் அது 10 ஆயிரம் காலடிகள் இல்லை. அதை விடவும் குறைவுதான். இந்த பதிவில் 60 வயது கடந்த பெண்கள் எவ்வளவு காலடிகள் நடக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ஜமா கார்டியாலஜியில் வெளியிடப்பட்ட (JAMA cardiology) புதிய ஆய்வில், கிட்டத்தட்ட 6 ஆயிரம் பெண்கள் (63 வயதுக்கு மேற்பட்டவர்கள்) வாழ்க்கை முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இவர்களின் உடல் செயல்பாடு குறித்து டிராக்கர் வைத்து ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்கள் ஒருநாளில் சராசரியாக 3 ஆயிரத்து 600 அடிகள் நடந்தது குறித்துக் கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட 5.5 மணி நேரத்திற்கு மேலாக அப்பெண்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'வாக்கிங்' இப்படி போனா தான் 2 மடங்கு பலன்!!
இந்த ஆய்வில் கலந்து கொண்ட பெண்கள் தலைமுடியை உலர வைப்பது போன்ற தங்களுடைய சுய பராமரிப்பிலும், பாத்திரங்களை கழுவுவது உள்ளிட்ட வீட்டு வேலைகளிலும் கூட தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். ஒரு நாளில் 10 மணி நேரம் 20 நிமிடங்கள் வரை உட்காந்திருந்தனர். இந்த ஆய்வு ஒருநாள் இரண்டு நாள் அல்ல, ஏழரை ஆண்டுகள் செய்யப்பட்டது. ஆய்வில் கலந்துகொண்ட 400 பெண்கள் இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டனர். ஒவ்வொருவரின் உடற்செயல்பாடுகளுடன் ஒப்பிடும்போது, சுறுசுறுப்பாக இருந்த பெண்களை விட, 1 மணிநேரத்திற்கும் மேல் தீவிரமற்ற உடற்செயல்பாடுகளில் ஈடுபட்ட பெண்கள் உடல்நிலை சிறப்பாக இல்லை. அவர்களின் உடலில் இரத்த ஓட்ட அமைப்பு நோய்க்கான அபாயம் 12% குறைவாக இருந்ததாம். அதாவது வீட்டை சுத்தம் செய்வது, படுக்கை விரிப்புகளை மடிப்பது, பாத்திரம் கழுவுவது உள்ளிட்ட சிறுசிறு வீட்டு வேலைகளை செய்யாதவர்கள் உடலில் நோய்க்கான ஆபத்து இருந்துள்ளது. நாள் முழுக்க உடற்செயல்பாடுகளில் ஈடுபட்டு உற்சாகமாக இருந்தவர்கள் உடல் ஆரோக்கியமாக இருந்துள்ளது. ஒரு நாளில் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சிகளை செய்த பெண்களுக்கு 16% குறைவான நோய் அபாயங்களே இருந்துள்ளன. ஆனால் எதையுமே செய்யாதவர்களின் உடல் பலவீனமாக இருந்துள்ளது.
தோட்டத்தை பராமரிப்பது, படியேறுதல், நடைபயிற்சி ஆகியவை தான் உடற்பயிற்சிகளாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடல்ரீதியாக எதையுமே செய்யாத ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு 1/2 மணி நேரமும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை 17% அதிகரிக்குமாம். 60 வயதைக் கடந்த பெண்கள் தினமும் மெதுவாக 3 ஆயிரத்து 600 காலடிகள் நடந்தாலும் அவர்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படும் ஆபத்து 26% குறைவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: வெறும் 15 நிமிட வாக்கிங் அற்புதம்.. சாப்பிட்டதும் நடந்தால் இத்தனை நன்மைகளா?
தினமும் நடப்பதால் உயர் ரத்த அழுத்தம் குறைந்து, இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க நடைபயிற்சி உதவுகிறது. எடையும் கட்டுக்குள் இருக்கும். இது தவிர உங்களுடைய மனநிலையை சீராக்கி மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். நடப்பது உங்களுடைய மகிழ்ச்சியான ஹார்மோன்களை அதிகமாக சுரக்க செய்து, மனச்சோர்வை நீக்குகிறது. மனத்தெளிவு பெற நடைபயிற்சி உதவும். தூக்கமின்மை பிரச்சனையை சரிசெய்து நிம்மதியான தூக்கம் தரும்.