
முடி உதிர்வை குறைத்து அடர்த்தியான கூந்தலை வளர்ப்பது தான் பல பெண்களின் ஆசையாக இருக்கும். பெண்களுக்கு மட்டுமல்லாமல், ஆண்களுக்கும் வழுக்கை விழாமல் தலை முழுக்க முடி இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். இதன் காரணமாக முடி பராமரிப்பிற்கு சிலர் பணத்தை வாரி இறைப்பார்கள். விதவிதமான எண்ணெய்கள், ஷாம்பூ போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவார்கள். இப்படி என்ன செய்தாலும் சிலருக்கு முடி வளரவே வளராது. முடி உதிர்வும் குறையாது.
முடி உதிர்தல் பிரச்சனையை முழுவதுமாக நிறுத்த என்ன செய்வதென்று அவர்களுக்கு தெரியாமல் இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு உடலில் சத்துக் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் உடலுக்கு தேவையான சத்துக்களை உணவின் மூலம் எடுத்துக் கொள்ளும்போது முடி ஆரோக்கியம் மேம்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக, இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு முடி உதிர்வு ஒரு அறிகுறியாக இருக்கலாம்.
பலருக்கும் உடலுக்கு போதுமான சத்துக்கள் கிடைக்காமல் மட்டுமே முடி உதிர்வு ஏற்படுகிறது. நாம் உண்ணும் உணவு சரிவிகித உணவாக இருக்க வேண்டும். அதாவது எல்லாவித சத்துகளும் இருக்கும் உணவு தான் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும். உணவில் எந்தவித சத்துக்களையும் பெறாமல், வெறும் வெளிப்புறமான பராமரிப்பை செய்தால் முடி உதிர்வை நிறுத்த முடியாது.
இன்றைய நவீன உலகில் பலருக்கும் ஆரோக்கியமான உணவுகளை விடவும், கவர்ச்சியான துரித உணவுகள் மீது தான் விருப்பம் அதிகம். அதை போல இயற்கை பானங்களை விட செயற்கை பானங்களையே இளம் தலைமுறை விரும்புகிறது. இருப்பினும் எல்லோருக்கும் பிடித்த ஒரு பானம்தான் மோர்.
தயிரை உணவுடன் நேரடியாக எடுத்துக்கொள்ளும் போதும் அல்லது லஸ்ஸி செய்து குடிப்பதினாலும் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தயிரை மோராக்கி குடிப்பது உடல் எடையை உயர்த்தாது என சொல்லப்படுகிறது. மோர் குடிப்பது உடலை குளிர்ச்சிப்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் செரிமானத்திற்கு உதவுகிறது.
இதையும் படிங்க: முடி கருகருவென வேகமாக வளர.. கருவேப்பிலை எண்ணெய் இப்படி தடவுங்க..
மோர் எப்படி தயாரிக்க வேண்டும்?
வெறும் மோரை குடிக்காமல் அதனுடன் சில பொருட்களை கலந்து குடிக்கும் போது முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். முடி வளர்ச்சிக்கு தேவையான பொருட்களை மோருடன் கலந்து குடிக்கும்போது அடர்த்தியான கூந்தல் கிடைக்கும். அவை என்னென்ன பொருள்கள் என்பதை இங்கு காணலாம்.
ஒரு பெரிய நெல்லிக்காய் விதையை நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு இஞ்ச் அளவில் இஞ்சியும் எடுத்து கொள்ளுங்கள். கொஞ்சம் கருவேப்பிலை, கொஞ்சம் கொத்தமல்லி, ஒரு பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதனுடன் ஒரு கப் தயிரை ஊற்றி ஒருமுறை அடித்து எடுத்து கொள்ளுங்கள். இந்த கலவையுடன் தேவையாண அளவு உப்பு, தண்ணீர் ஆகியவை சேர்த்து கலந்தால் சுவையான ஆரோக்கியமான மோர் தயாராகிவிடும்.
நன்மைகள்:
பெரிய நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்தது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். முடி உதிர்வையும் குறைக்கும் அற்புத கனியாகும். கருவேப்பிலையில் இரும்பு சத்து உள்ளது. இளநரையை போக்கி கருமை நிற கூந்தலை பெற கருவேப்பிலை உதவுகிறது.
கொத்தமல்லி, இஞ்சி ஆகியவையும் முடியை பராமரிக்க உதவும் பொருட்கள்தான். இந்த பொருள்களை தனியாக உண்பதற்கு எவரும் விரும்பமாட்டார்கள். ஆனால் இந்த பொருட்களைக் கொண்டு தயார் செய்யும் மோர், ருசி மிகுந்ததாக இருக்கும். இதை வாரம் மூன்று நாட்களாவது குடிப்பதால் முடி உதிர்வு பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும். ஆரோக்கியமான தலைமுடியை பெறுவீர்கள்.
இதையும் படிங்க: என்ன நெல்லிக்காயை தலைமுடிக்கு யூஸ் பண்ணா முடி கொட்டாதா? வளருமா?!