
ஒருவருடைய அழகில் அவருடைய தலைமுடியும் முக்கிய பங்காற்றுகிறது. முகத் தோற்றத்திற்கு ஏற்றபடி, தலைவாரி கொள்வதால் அழகு சற்று கூடுதலாக தெரியும் என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
நம்முடைய ஆதார் கார்டில் உள்ள வயதை நம்மால் மாற்ற முடியாது. ஆனால் தலைமுடியை நன்றாக பராமரித்தால், காண்பவர்கள் நிச்சயம் நமது வயதை குறைவாகத்தான் மதிப்பிடுவார்கள். இதை நம்மால் செய்ய முடியும் தானே! தலைமுடி வெறும் அழகுக்காக மட்டுமல்லாமல் நமது வயதையும் தீர்மானிக்கும் காரணிகளாகவும் உள்ளன.
ஆகவே தான் சிலர் குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் தொடர்ந்து 'டை' அடிக்க ஆரம்பிக்கின்றனர். இளநரை வந்தாலும் அதை மறைக்க பல வழிகளில் முயற்சி செய்கின்றனர். முடி கொட்டுதல் ஒருவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தவும் இதுவே காரணம்.
இதையும் படிங்க: ஆண்கள் தினமும் ஷாம்பு போட்டு குளிக்கலாமா?
கூந்தல் அடர்த்தியாக அழகாக இருப்பதையே பலரும் விரும்புகின்றனர். இதற்காக பல சிகிச்சைகளையும், ஹேர்கேர் பொருட்களையும் வாங்கி குவிக்கின்றனர். ஆனால் தலை முடிக்கு சரியான ஊட்டச்சத்து இருந்தால்தான் அது உறுதியாகவும் அழகாகவும் இருக்கும் இந்த அவசரமான வாழ்க்கையில் பலருக்கு சரியான உணவு பழக்கம் இருப்பதில்லை. இதனால் அவர்களுடைய தலைமுடியும் அவர்கள் பேச்சை கேட்பதில்லை.
தற்போது வெயிலுக்கு ஏற்படி பலர் முடியை இறுக்கி கட்டிக் கொள்கிறார்கள் அல்லது இறுக்கமாக கொண்டை போட்டுக் கொள்வார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை கொண்டை போட்டுக் கொள்ளும் இல்லத்தரசிகள் இல்லாத வீடுகளே கிடையாது. இப்படி தலை முடியை இறுக்கமாக கட்டுவதால் தலைமுடிக்கு பாதிப்பு உண்டாகும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
முடி உதிர ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதில் இறுக்கமாக தலைமுடியை கட்டுவதையும் ஒரு காரணமாக முன் வைக்கிறார்கள். இப்படி தலைமுடியை இறுக்கமாக கட்டுவதால் உச்சந்தலையில் உள்ள முடி அதன் வேரிலிருந்து இழுபட வழிவகுக்கிறது. இப்படி தலைமுடியை இழுத்து இறுக்கி கட்டுவதால் அவை வேரிலிருந்து உடைந்து உதிர்கின்றன.
தலை முடியை பின்னி போடுவது அதன் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். முடி உதிர்வை தவிர்க்க அதனை சரியான வழியில் பராமரிப்பது அவசியம். இறுக்கமாக தலையமுடியை இழுத்து கட்டுவதற்கு பதிலாக, தளர்வாக அவற்றை வெட்டிக் கொள்ளுங்கள். முடி வெட்ட விரும்பாவிட்டால் தலையை தினமும் பின்னி போட்டு கொள்ளுங்கள்.
எக்காரணம் கொண்டும் வேகமாக சீப்பு வைத்து தலை வாருவதையும் தவிருங்கள். தலைமுடியை தளர்வாக மாற்றுவதும், பின்னுவதும் தான் அதனை வளர வைக்கிறது. இறுக்கமாக பின்னுவதன் மூலமாக தலைமுடி பலவீனம் அடைகின்றன. தொடர்ந்து தலைமுடியை இறுக்கமாக கட்டுவதால் அதனுடைய அமைப்பு படிப்படியாக மாறத் தொடங்குகிறது.
தொடர்ந்து முடி உதிர்வதால் சில நாட்களுக்குப் பின் முடி மல்லிப்பூ சரத்தை விட மெலிந்து தோற்றமளிக்க தொடங்கும். அடிக்கடி தலையை இறுக்கமாக கட்டுவது அதாவது குதிரை வால் என சொல்லப்படும் போனிடைல் மாதிரி போட்டுக் கொள்வது தலைவலியையும் ஏற்படுத்தும்.
இறுக்கமாக தலையை கட்டுவதால் முடி மட்டும் உதிர்வதில்லை; உடல் நல கோளாறுகளும் ஏற்படுகின்றன. இறுக்கமாக தலைமுடியைக் கட்டுவதால் தலைவலி ஏற்படும். உச்சந்தலையில் உள்ள முடியை இழுத்துப் பிடித்து கட்டுவது மன அழுத்தத்திற்கும் வழிவகுக்கும். இறுக்கமாக தலைமுடியைக் கட்டுபவர்கள் அதை கொஞ்சம் தளர்த்தும்போது மிகவும் இலகுவாக உணர்வார்கள்.
உங்களுக்கே அப்படி இருக்கிறது என்றால் உங்களுடைய முடிவுக்கு என்ன மாதிரியான நிலை என்று சிந்தித்துப் பாருங்கள். முடிந்தவரை தலையில் இறுக்கமாக கட்டுவதை தவிருங்கள். முடி உதிர்வை தடுக்க ஊட்டச்சத்தும் அவசியம். அதற்கு என்னென்ன உண்ணலாம் என இங்கு காணலாம்.
முடி உதிர்வை தடுக்கும் உணவுகள்:
புரதச்சத்துள்ள உணவுகள் முடி உதிர்வை தடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. சிக்கன், மீன், முட்டை, பால் உணவு பொருள்கள், பீன்ஸ் போன்ற காய்கறிகள், கீரை, நட்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள தவறாதீர்கள்.
வைட்டமின் பி6, வைட்டமின் பி12, ஃபோலிக் அமிலம் போன்றவை முடி உதிர்வை தடுப்பதில் சிறந்தவை. வாழைப்பழங்கள், உருளைக்கிழங்கு, கீரை போன்றவற்றில் வைட்டமின் பி6 காணப்படுகிறது.
இறைச்சி, மீன், பால் பொருள்களில் வைட்டமின் பி12 மிகுந்து காணப்படுகிறது. பழங்கள், காய்கறிகள், குறிப்பாக ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள், தக்காளி, தானியங்கள் பீன்ஸ் ஆகியவற்றில் போலிக் அமிலம் காணப்படுகிறது. இவை முடி வளர்ச்சியில் உதவக்கூடியது.
முடி கொட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
இன்றைய காலகட்டத்தில் மக்கள் தலைமுடி மீது அக்கறை காட்ட தொடங்கியுள்ளனர். ஆனால் தலைமுடி தான் அவர்கள் மீது அக்கறை காட்ட மறுக்கின்றது. இந்த நிலை மாற வேண்டுமெனில் இரும்புச் சத்து, புரதச்சத்து மற்றும் வைட்டமின்கள் அடங்கிய சரியான உணவு பழக்கத்தை பின்பற்றுங்கள்.
ஒரு நாளைக்கு தேவையான அளவில் தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை இரவில் தூங்க பழகுங்கள். அடிக்கடி தலைமுடிக்கு பயன்படுத்தும் ஷாம்பூ, கண்டிஷ்னர், சீரம் போன்றவற்றின் பிராண்டுகளை மாற்றாமல் ஒரே பிராண்ட் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் ஒவ்வொரு பிராண்டும் ஒவ்வொரு விதமான வேதிப்பொருட்களை உள்ளடக்கியிருக்கும். அடிக்கடி மாற்றும்போது தலைமுடி வலுவிழக்கும்.
முக்கியமாக, தலைமுடியை இறுக்கமாக கட்டுவதை தவிருங்கள். தலை துவட்டும்போது முடியை அடித்து காய விடாதீர்கள். மென்மையான துண்டால் தொட்டு துடைத்தால் போதும். நிச்சயம் முடி கொட்டுதல் குறையும்.
இதையும் படிங்க: முடி கருகருவென வேகமாக வளர.. கருவேப்பிலை எண்ணெய் இப்படி தடவுங்க..