
நம்மில் பெரும்பாலானோர்கள் டீ குடிப்பதற்கு காரணமே புத்துணர்வுடன் இருப்பதற்கே. வேலைக்கு நடுவில் சோர்வாக உணர்ந்தால் உடனே ஒரு டீ குடித்துவிடுவோம். தலைவலிக்கும் டீ தான் பலரின் நிவாரணம். டீயை எல்லோரும் விரும்ப காரணம் சுவை மட்டுமல்ல, அது நம் மனநிலையுடன் தொடர்பு கொண்டுள்ளது. மனதை இலகுவாக்க கூட மக்கள் டீ குடிக்கின்றனர். இந்தப் பதிவில் மனநிலைக்கு ஏற்ற 5 டீ வகைகளை காணலாம்.
கெமோமில் டீயின் சுவை தேன் போல இருக்கும். இவை தேயிலை இலைகளிலிருந்து எடுக்கப்படுவதில்லை. சிறிய டெய்சி போன்ற பூக்களில் எடுக்கும் இந்த டீ தூள் சுவை கொஞ்சம் இனிப்பு கொண்டது. வழக்கமான தேயிலையை போல ஸ்ட்ராங்காக இருக்காது. இரவில் இந்த டீயை குடித்தால் நல்ல தூக்கம் வரும் பகலில் மனநிலையை சீராக வைத்திருக்கவும் மனச்சோர்வை நீக்கவும் உதவுகிறது உங்களை இலகுவாக வைத்திருக்க இந்த டீயை அருந்தலாம்.
கிரீன் டீ லேசான துவர்ப்புத்தன்மை கொண்டது. இந்த டீயில் உள்ள காஃபின், நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவுகிறது. இந்த டீயை குடிப்பதால் மணிக்கணக்கில் புத்துணர்வாக இருக்க முடியும். படிப்பிலும், வேலைகளிலும் கவனத்தை குவிக்க நினைப்பவர்கள் கிரீன் டீ அருந்தலாம். எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது நல்ல தீர்வாகும். தேர்வு நேரங்களில் மாணவர்கள் கிரீன் டீ அருந்துவது அவர்களுடைய விழிப்புணர்வை அதிகமாக்குகிறது. உடலை மந்தமாக வைக்காமல் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
கருப்பு தேநீர் சோம்பலான காலைகளை சுறுசுறுப்பாக மாற்றக்கூடியது. மதிய உணவுக்கு பின்னர் கண்கள் சொருகி சோர்வாக இருக்கும். அப்போது கருப்பு தேநீர் அருந்தலாம். இது உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். உங்களுடைய உடலை ஒரு சுறுசுறுப்பான நிலைக்கு மாற்றி எந்திரன் போல வேலைகளை நொடியில் முடிக்க ஆற்றலை தரும்.
மட்சா வெறும் கிரீன் டீயின் செறிவூட்டப்பட்ட வடிவம். இது கல்லால் அரைத்த இலைகளை பளபளக்கும் பொடியாகும். இதனை நுரை வரும் வரை வெந்நீரில் போட்டு கலக்கவும். அளவாக போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இது தரும் ஆற்றல் சீரானது. எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் போன்ற படைப்பாளிகள் இதை அதிகம் எடுத்துக் கொள்கிறார்கள்.
எல்லோருக்கும் பிடித்தது மசாலா டீதான். சுவை அபாரமாக இருக்கும். இஞ்சி, ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை போன்ற மசாலாபொருள்களுடன், தேநீர், பால், சர்க்கரை கலந்து கொதிக்க விட வேண்டும். இந்த வாசனையே புத்துணர்வை தரும். குடித்தால் இதமாக இருக்கும். இந்த டீ வழங்கும் ஆறுதலை மனிதர்கள் கூட தர முடியாது. உலகை மறந்து ருசிக்க வேண்டிய அற்புதமான டீ!