Diabetes : சர்க்கரை நோயாளிகளுக்கு மகிழ்ச்சி செய்தி.. யூகலிப்டஸால் குறையும் ரத்த சர்க்கரை அளவு.!

Published : Jul 20, 2025, 05:42 PM IST

யூகலிப்டஸ் எண்ணெய் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

PREV
16
யூகலிப்டஸ் கொண்டு ஆய்வு மேற்கொண்ட மருத்துவர்கள்

நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துதல் மற்றும் சிகிச்சை அளிப்பது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு யூகலிப்டஸ் எண்ணெய் மூலம் வயிற்றில் இயற்கை மருத்துவ சிகிச்சை அளித்தால் இரத்த சர்க்கரை அளவு குறையும் என கண்டறியப்பட்டுள்ளது. அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை பேராசிரியர்கள் டாக்டர் ஒய்.தீபா, பி.கீர்த்தி, ஏ.மூவேந்தன், எல் நிவேதிதா, முதல்வர் என்.மணவாளன் ஆகியோர் இது குறித்தான ஆராய்ச்சியை மேற்கொண்டனர். தற்போது அதன் முடிவுகளின் அடிப்படையில் ஆராய்ச்சி கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

26
உலக அளவில் உயர்ந்த டைப் 2 சர்க்கரை நோயாளிகள்

அந்தக் கட்டுரையில் கூறியிருப்பதாவது, பெரியவர்களுக்கு ஏற்படும் டைப் 2 சர்க்கரை நோய் பாதிப்பு சர்வதேச அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 20 வயது முதல் 80 வயது வரையிலுள்ள 53.7 கோடி பேருக்கு உலக அளவில் சர்க்கரை நோய் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை மொத்த மக்கள் தொகையில் 11.4% பேருக்கு டைப் 2 சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் 15.3% பேருக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையான பிரீ டயாபடீஸ் (Pre Diabetes) இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனம் தெரிவிக்கிறது. இதில் 16.4% பாதிப்பு நகர்ப்புற பகுதிகளில் பதிவாகியுள்ளது. இரத்த சர்க்கரை அளவை குறைப்பதற்கு மருத்துவர்களால் ஹைபோகிளைசிமிக் மருந்துகள் வழங்கப்படுகின்றன.

36
யூகலிப்ட்ஸ் எண்ணெய் மூலம் வயிற்றில் மசாஜ்

ஆனால் இந்த மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வரும் பொழுது இரத்தத்தில் அமிலத்தன்மை அதிகரிப்பு, கை கால்களில் வீக்கம், ஜீரண மண்டலம் பாதிப்பு, இதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இது மட்டுமில்லாமல் நீண்ட நாட்களாக சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்து வருபவர்களுக்கு வேறு சில பக்க விளைவுகளும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக சர்க்கரை நோயாளிகளுக்கு யூகலிப்டஸ் எண்ணெய் மூலம் தீர்வு கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு யூகலிப்டஸ் எண்ணெயை வயிற்றில் மசாஜ் செய்யும் ஆய்வை மருத்துவர்கள் முன்னெடுத்தனர். யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த 30 வயது முதல் 70 வயதிலான சர்க்கரை நோயாளிகளில் 50 பேர் இந்த ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

46
மசாஜ்க்குப் பின்னர் குறைந்த சர்க்கரை அளவு

நறுமண எண்ணெய்கள் பூக்கள், தாவரங்கள், வேர்கள், மூலிகைகள், இலைகளின் சாரத்தை தனியாக பிரித்தெடுத்து தயாரிக்கப்படுகின்றன. அதன்படி தயாரிக்கப்பட்ட யூகலிப்டஸ் எண்ணெய் 4 மில்லியுடன் நல்லெண்ணெய் 50 மில்லி சேர்த்து சர்க்கரை நோயாளிகளின் வயிற்றில் 20 நிமிடங்கள் மசாஜ் செய்யப்பட்டது. ஆய்வு தொடங்குவதற்கு முன்னர் அவர்களது இரத்த சர்க்கரை அளவு (ரேண்டம்), நுரையீரல் செயல்திறன், மனநலன் சார்ந்த நரம்பியல் செயல்பாடுகள், இதயத்துடிப்பு ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் பதிவு செய்யப்பட்டன. யூகலிப்டஸ் எண்ணெய் மசாஜுக்குப் பிறகு மீண்டும் அதே பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் இரத்த சர்க்கரை அளவு 4.785% குறைந்து இருப்பதும், இதயத்துடிப்பு, நுரையீரல் செல்கிறன் சீராக இருப்பதற்கு அந்த சிகிச்சை உதவி இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

56
வீட்டில் முயற்சி செய்து பார்க்க வேண்டாம்

இது தவிர ஆரோக்கியமான மனநிலை, சிந்தனை, ஆற்றல் மேம்பாட்டிற்கும் இந்த யூகலிப்டஸ் நறுமண சிகிச்சை எண்ணெய் உறுதுணையாக இருந்ததை ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. இந்த ஆய்வுகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதனை மேலும் விரிவாகவும் நுட்பமாகவும் மேற்கொள்ள நீடித்த ஆய்வுகள் தேவைப்படுவதாக அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது தொடக்க நிலையில் எடுக்கப்பட்டுள்ள ஆய்வுகள் மட்டுமே. இதற்கு மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இது போன்ற மருத்துவத்தை வீட்டில் செய்து பார்ப்பது சில பின் விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே இது போன்ற வைத்தியங்களை யாரும் வீட்டில் முயற்சி செய்து பார்க்க வேண்டாம்.

66
இதை நம்பி மருந்து, மாத்திரைகளை நிறுத்தக் கூடாது

ஆய்வுகள் இன்னும் பலரிடம் நடத்தப்பட்டு அதற்கான துல்லியமான முடிவுகள் வெளியிடப்படும் வரை இதை யாரும் முயற்சி செய்து பார்க்க வேண்டாம். இது ஒரு கை மருத்துவ முறையே ஆகும். மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டியது அவசியம். இன்சுலின் எடுப்பவர்கள் தவறாமல் இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும். மருந்து மாத்திரைகளை ஒருபோதும் புறக்கணிக்க கூடாது. மேற்குறிப்பிட்ட தகவல்கள் யோகா மற்றும் இயற்கை கல்லூரி மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையிலானவை மட்டுமே. இதற்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

Read more Photos on
click me!

Recommended Stories