
நகர்ப்புறமயமாதல் காரணமாக விவசாயம் பெருமளவு குறைந்துவிட்டது. இருப்பினும் நகரங்களில் வீடுகளில் காய்கறிகள் வளர்க்க வேண்டும் என்று மக்கள் ஆசை கொள்கின்றனர். இதற்காக மாடித்தோட்டம் அமைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாடித்தோட்டத்தின் மூலம் நமக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், கீரைகளை நாமே விளைவித்துக் கொள்ளலாம். ஆனால் மாடித்தோட்டத்தை அமைப்பதற்கு முன்பு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் நீங்களும் உங்கள் வீட்டு மாடியில் எளிதாக தோட்டம் அமைக்கலாம்.
மாடித்தோட்டம் அமைப்பதற்கு முதலில் சரியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் தோட்டம் அமையப்போகும் இடத்தில் குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் சூரிய ஒளி படுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் செடிகள் செழித்து வளர்வதற்கு சூரிய ஒளி அவசியம். செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற அருகில் குழாய் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மாடித்தோட்டம் அமையப்போகும் மாடியானது, தொட்டிகளின் எடை, மண், நீர் எடையை தாங்கும் அளவிற்கு உறுதியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும். தண்ணீர் தேங்கத் தொடங்கினால் முழு கட்டிடமும் பாழாகிவிடக்கூடும். எனவே தண்ணீர் செல்வதற்கு தேவையான வடிகால் வசதிகள் இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
செடிகள் வளர்க்க சரியான தொட்டிகள் அல்லது கொள்கலன்களை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். மண் தொட்டிகள், பிளாஸ்டிக் தொட்டிகள், சிமெண்ட் தொட்டிகள், வளரும் பைகள், பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள், டயர்கள், வாளிகள் ஆகியவற்றை பயன்படுத்தலாம். செடிகளின் வேர் வளர்ச்சிக்கு ஏற்ப தொட்டிகளின் அளவை தேர்வு செய்ய வேண்டும் கீரை வகைகளுக்கு ஆழம் குறைவான தொட்டிகள் போதுமானது. ஆனால் தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கறி செடிகளுக்கு சற்று ஆழமான தொட்டிகள் தேவைப்படும். தொட்டிகளின் அடியிலிருந்து நீர் வெளியேறுவதற்கு வடிகால் துளைகள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் நீங்களே துளையிட வேண்டும். செடிகளின் வளர்ச்சிக்கு தரமான மண் கலவை முக்கியம். பொதுவாக ஒரு பங்கு தோட்டத்தில் கிடைக்கும் மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு மண்புழு உரம் என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாம்.
ஆரம்பத்தில் கத்தரி, வெண்டை, தக்காளி, முளைக்கீரை, அரைக்கீரை, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை தேர்வு செய்யலாம். இவை மாடித்தோட்டத்தில் எளிதில் வளரக்கூடியவை. அதன் பின்னர் உங்கள் பகுதிக்கு ஏற்ற பருவகால காய்கறி மற்றும் பழ வகைகளை தேர்வு செய்ய வேண்டும். நல்ல தரமான விதைகளை, நம்பகமான கடைகளில் வாங்க வேண்டும். விதைகளை நேரடியாக தொட்டியில் ஊன்றலாம் அல்லது நாற்றுப் பைகளில் முளைக்கவிட்டு பின்னர் தொட்டிக்கு மாற்றலாம். இளம் நாற்றுகளை வாங்கி நடுவதன் மூலம் விரைவான விளைச்சல் கிடைக்கும். விதைகள் மற்றும் நாற்றுகளை சரியான ஆழத்தில் போதுமான இடைவெளியில் நட வேண்டும். செடிகளுக்கு சரியான அளவில் நீர் ஊற்றுவது அவசியம். மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து நீர் ஊற்றவும். அதிகப்படியான நீர் வேர் அழுகலுக்கு வழி வகுக்கலாம். எனவே காலை அல்லது மாலை வேளைகளில் தண்ணீர் ஊற்றுவது சிறந்தது.
செடிகளுக்கு உரம் இடுதல் என்பது மிகவும் அவசியம். இது செடிகள் செழித்து வளர்வதற்கும், காய்கறிகள் ஊட்டச்சத்தாக வளர்வதற்கும் உதவும். மாடித்தோட்டத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்துவது நல்லது மண்புழு உரம், தொழு உரம், பஞ்சகவ்யம், மீன் அமினோ அமிலங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு வேப்ப எண்ணெய் கரைசல் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தலாம். செடிகளுக்கு போட்டியாக வரும் களைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். காய்ந்த இலைகள் மற்றும் தேவையில்லாத கிளைகளை நீக்கி அவ்வப்போது கவாத்து செய்வது செடியின் ஆரோக்கியத்திற்கு உதவும். காய்கறிகள், பழங்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் சரியான நேரத்தில் அறுவடை செய்ய வேண்டும். இது செடிக்கு மேலும் பூக்கள் மற்றும் காய்களை உற்பத்தி செய்ய உதவும். அறுவடையின்போது செடிகளுக்கு சேதம் ஏற்படாதவாறு கவனமாக செய்யவும்.
இந்த எளிய முறைகளை பின்பற்றினால் நீங்களும் உங்கள் மொட்டை மாடியில் எளிதாக தோட்டம் அமைக்கலாம். மாடித்தோட்டத்தில் இருந்து உங்களுக்கு தேவையான காய்கறிகளை ஆரோக்கியமாகவும் எந்த செயற்கை உரங்களோ, கலப்படமோ இல்லாத வகையில் வீட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளலாம்.