குழந்தைகள் எதிர்காலத்தை பாதிக்கும் '4' விஷயங்கள் - சாணக்கியர் நீதி
பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே உள்ள உறவை பேண செய்யக் கூடாத தவறுகளை இங்கு காணலாம்.
பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே உள்ள உறவை பேண செய்யக் கூடாத தவறுகளை இங்கு காணலாம்.
Chanakya Says 4 Things Parents Should Not Do : பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு மிகச் சிறந்ததை கொடுப்பதற்காக முயற்சிக்கின்றனர். ஆனால் பெற்றோர் எவ்வளவுதான் முயன்றாலும் சில தவறுகளை செய்யும் போது பிள்ளைகளின் மனதில் வில்லன்களைப் போல மாறிவிடுகிறார்கள். இதனால் பெற்றோர், குழந்தை உறவே கசப்பாகி விடுகிறது. வாழ்வியல் கருத்துக்களை சொல்வதில் சிறந்த அறிஞரும், சாதுரியருமான சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள உறவை குறித்து கூறியுள்ளவற்றை இங்கு காணலாம்.
உங்கள் குழந்தைகளை ஒருபோதும் பிறருடன் ஒப்பிடக்கூடாது. பெற்றோர் செய்யும் பெரிய தவறே தங்களுடைய குழந்தைகளை பக்கத்து வீட்டு குழந்தைகளுடன், உறவினருக்கு குழந்தைகளுடன் ஒப்பிடுவது தான். இதனால் குழந்தைகளுக்கு உங்கள் மீது அதிருப்தி ஏற்படும். உங்களுடைய பாராட்டுக்காக குழந்தை போராட தொடங்குகிறது. அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட பெற்றோரை காரணமாகி விடுகின்றனர். இதனால் புதிய முயற்சிகளை எடுக்க குழந்தைகள் தயங்குகின்றனர். அவர்களின் ஆளுமை பாதிப்புக்குள்ளாகும். இது தவிர்ப்பதற்கு குழந்தைகளை பிறர் மீது ஒப்பிடுவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் .
இதையும் படிங்க: பெற்றோரே!! குழந்தைகளுக்கு கட்டாயம் கற்று கொடுக்க வேண்டிய '5' காலைப் பழக்கங்கள் தெரியுமா?
குழந்தைகளின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பெற்றோர் மதிக்காவிட்டால் அது எதிர்காலத்தில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். பெற்றோர் தங்களுடைய குழந்தைகள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். அதை தவிர்க்கக்கூடாது. குழந்தைகள் தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்தும்போது அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகளுடைய உணர்வுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அதை தவிர்க்கும் போது பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையேயான உறவு மோசமாகி விடுகிறது. குழந்தைகளுக்கும் முடிவெடுக்க உரிமை உண்டு என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். சில விஷயங்களில் அவர்கள் தங்களுடைய சுதந்திரமான கருத்துக்களை சொல்லவும் அதை செயல்படுத்தவும் அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஒருவேளை அதில் தவறு இருந்தால் நீங்கள் அவர்களுக்கு சுட்டிக்காட்டலாம். அது குறித்து விளக்கம் அளிக்கலாம்.
உங்கள் குழந்தைகளை அதிகமாக புகழக்கூடாது. குழந்தைகள் உங்களுக்கு எவ்வளவு நல்லவராக தோன்றினாலும், வெற்று புகழ்ச்சியால் குழந்தைகளை ஏமாற்றக்கூடாது. மற்றவர்கள் முன் உங்கள் குழந்தையை புகழும்போது அவர்களின் கெட்ட கண் திருஷ்டி படக்கூடும். அதனால் குழந்தைகளை தேவையான நேரத்தில் சரியான வார்த்தைகளால் உற்சாகப்படுத்தினால் போதும்.
இதையும் படிங்க: குழந்தைகளை பாதிக்கும் கோடைகால நோய்கள்- எப்படி தடுக்கனும் தெரியுமா?
பெற்றோர் தங்களுடைய குழந்தைகளிடம் எதிர்மறையான அணுகுமுறையை கொண்டிருக்கக் கூடாது. அவர்களை ஊக்குவிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகள் எந்த ஒரு காரியத்தை செய்ய தொடங்கும் போதும் இதை உன்னால் செய்ய முடியாது என எதிர்மறையாக சொல்வதை பெற்றோர் தவிர்க்க வேண்டும். இது உங்களுடைய பிள்ளைகளின் மனதை காயப்படுத்தலாம். அவர்களுடைய முன்னேற்றத்தை தடுக்கலாம்.
மேலே சொன்ன விஷயங்களை ஒவ்வொரு பெற்றோரும் பின்பற்றும்போது அவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையேயான உறவு பலப்படும்.