முந்திரி பருப்பு சுவையானது. அதை வெறுமனே சாப்பிட்டாலும் சத்துக்கள் கிடைக்கும். அதன் காரணமாக அனைவரும் விரும்பி உண்பார்கள். இதில் ஆன்டிஆக்ஸிடன்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் காணப்படுகிறது.
முந்திரி பருப்பை பல வழிகளில் எடுத்து கொள்ளலாம். சிலர் தேனில் ஊறவைத்து உண்பர். வெறுமனே உண்பவர்களும் இருக்கின்றனர். சிலர் முந்திரியை பச்சையாக சாப்பிடுவார்கள். வேறு சிலர் இரவில் ஊறவைத்து காலையில் உண்பார்கள். இதையெல்லாம் விட பாலில் ஊறவைத்த முந்திரி பருப்பை உண்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வளவு சத்து?
சுமார் 100 கிராம் முந்திரி பருப்பை சாப்பிட்டால் கிட்டத்தட்ட 18.22 கிராம் புரதச்சத்து கிடைக்கும். இது மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களின் பண்புகளை கொண்டுள்ளது. சர்க்கரை நோயாளிகள் இதை உண்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது எளிமையாகும். முந்திரியை உண்ணும்போது இதய ஆரோக்கியம் மேம்படும்.
இந்த பருப்பை சாப்பிடுவதால் நல்ல கொழுப்பு சத்து உங்களுக்கு கிடைக்கும். இதில் கொழுப்பு அமில வகையைச் சேர்ந்த ஒலிக் அமிலத்தின் அளவும் அதிகமாக காணப்படுகிறது. இதய நோய்களை எதிர்த்துப் போராட வலிமை கிடைக்கும். முந்திரி பருப்பில் உள்ள மக்னீசியம் இரத்த அழுத்தத்தை கூட குறைக்கும்.
எலும்பு ஆரோக்கியம்
பாலில் ஊறவைத்த முந்திரி பருப்பை உண்பதால் எலும்புகள் ஆரோக்கியமாக மாறும். இதனை இரவில் ஊறவைத்து, மறுநாள் காலையில் உண்டால், நம் உடலுக்கு கால்சியம் சத்து மிகுதியாக கிடைக்கும். பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. முந்திரியில் வைட்டமின் கே, மெக்னீசியம், வைட்டமின் பி6, மெக்னீசியம் ஆகியவை காணப்படுகின்றன. இவை அனைத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மலச்சிக்கல்
முந்திரி பருப்பில் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இது மலச்சிக்கலைத் தடுக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் காரணமாக உள்ளது. நாள்தோறும் காலையில் பாலில் ஊற வைத்த முந்திரி பருப்பை சாப்பிடுங்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி
வைட்டமின்கள், தாமிரம், இரும்பு, துத்தநாகம் நிறைந்த முந்திரி, நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். முந்திரியை பாலில் ஊற வைத்து சாப்பிட்டால் அதன் பலன்கள் இரண்டு மடங்காகும். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்கும். முந்திரி பருப்பில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகமாக காணப்படுகின்றன. இவை உடலுக்குள் கிருமிகள் நுழைவதை தடுக்கும்.