
நாம் சாப்பிடும் சில வகையான உணவுகள் நமக்கு ஆரோக்கியத்தை கொடுத்தாலும், அதனை சரியான நேரத்தில் உண்பது மட்டுமே முழு பலன்களை பெற்றுத் தரும். அப்படி இல்லாமல் தவறான நேரங்களில் சரியான உணவுகளை சாப்பிடுவதும் உடலுக்கு பாதிப்பை தான் ஏற்படுத்தும். இதற்கு நீர்ச்சத்துள்ள காய்கறிகளை உதாரணமாக சொல்லலாம்.
நீர்ச்சத்துள்ள சுரைக்காய் போன்ற காய்கறிகளை பகலில் சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இந்த காய்கறிகளில் உள்ள நீர்ச்சத்து நமது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இதே போல கீரையை உண்ணவும் ஏற்ற நேரங்கள் உள்ளன. கீரையை தினமும் சாப்பிடலாம். ஆனால் பகலிலும், காலையிலும் உண்பதே சாலச் சிறந்தது. அதனை இரவில் தவிர்க்க வேண்டும் என பெரியவர்கள் கூறுவார்கள். இது ஏன் என்று எப்போதாவது யோசித்துள்ளீர்களா? அதற்கான பதிலை இங்கு காணலாம்.
கீரை நம் உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின்கள், இரும்புச் சத்து, கால்சியம் போன்ற தாதுக்கள் உள்ளிட்ட பல சத்துக்களை கொடுக்கக்கூடியவை. எல்லா உணவுகளுக்கும் செரிமானம் ஆக குறிப்பிட்ட நேரம் ஆகும். அதில் கீரைக்கு சில வரைமுறைகள் உள்ளன. கீரை அசைவம் போல செரிக்க நேரம் எடுக்கக் கூடியவை.
ஏன் கீரையை இரவில் உண்ணக்கூடாது?
இரவு உணவாக கீரையை எடுத்துக் கொள்வதை முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கீரையில் காணப்படும் பச்சையம், நார்ச்சத்துக்கள் ஆகியவற்றை செரிமானம் செய்யக்கூடிய நொதிகள் இரவு வேளைகளில் குறைந்த அளவிலேயே சுரக்கின்றன. இதன் காரணமாக இரவு நேரத்தில் கீரையை உண்பது ஒரு விதமான மந்த நிலையை வயிற்றுக்குள் ஏற்படுத்திவிடும். செரிமானத்திலும் இடையூறுகள் ஏற்படும்.
சிலருக்கு இரவில் கீரை உண்பதால் செரிமான கோளாறு ஏற்பட்டு வயிற்றுப்போக்கு கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்கவே இரவில் சாப்பிடக்கூடாது என்கிறார்கள் நிபுணர்கள்.
சிலர் புத்திசாலித்தனமாக கீரையை பிரிட்ஜில் எடுத்து வைத்துவிட்டு காலையில் உண்ணுவார்கள். இப்படி சாப்பிடுவதும் மகாதவறு. கீரையை மீண்டும் சூடு செய்து உண்பதும், அதை பிரிட்ஜில் வைப்பதும் உடலுக்கு நல்லதல்ல. கீரைகளை சமைக்கும் போது அதனை மதிய சாப்பாட்டிற்கு மட்டும் சமைத்துக் கொள்ளுங்கள். மாலை 6 மணிக்கு மேல் கீரைகள் சாப்பிடும் பழக்கத்தை கைவிடுங்கள். கீரையை உண்ணும் போது அதை நன்கு மென்று சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவியாக இருக்கும்.
இதையும் படிங்க: கீரை சாப்பிட்டால் சத்துதான்.. ஆனா சமைக்கும் போது 'இப்படி' பண்ணா மட்டும் தான் நன்மை இருக்கு!!
இரவு நேரங்களில் எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளை உண்பதே உடலுக்கு நல்லது. ஒருவேளை நீங்கள் அசைவ உணவுகளை இரவில் சாப்பிட நினைத்தால் 7 மணிக்கு முன்னதாக சாப்பிட்டுவிடுங்கள். பெரும்பாலும் இரவு வேளைகளில் இட்லி போன்ற எளிதில் செரிமான அடையக்கூடிய உணவுகளை உண்பதே சிறந்தது. இது தவிர எப்போதும் இரவு உணவை 8 மணிக்குள் எடுத்துக் கொள்வது உடலுக்கு ஆரோக்கியமாகும்.
இதையும் படிங்க: முட்டையை தனியா சாப்பிடுறீங்களா? கீரையுடன் சேர்த்து சமைத்தால் எவ்ளோ சத்து கிடைக்கும் தெரியுமா?