
பாகற்காயை கண்டால் பலர் தெறித்து ஓடுவார்கள். பாகற்காயை உண்ண குழந்தைகள் மட்டுமல்ல, பெரியோரும் தயக்கம் காட்டுவார்கள். அதன் சுவை கசப்பாக இருந்தாலும், அதில் உள்ள சத்துக்கள் அபாரமானவை. இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் இது முக்கியமான காயாகும்.
பாகற்காய் என்றாலே இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது தான் எல்லார் நினைவுக்கும் வரும். ஆனால் அதைத் தாண்டியும் இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. அந்த சத்துக்கள் என்னென்ன? எவற்றுடன் பாகற்காயை சாப்பிடக் கூடாது உள்ளிட்ட பல தகவல்களை இங்கு காணலாம். பாகற்காயை பச்சையாகவும், சமைத்தும் உண்ணலாம்.
பாகற்காயின் சத்துக்கள்:
பாகற்காயின் சத்துக்கள் அதை பச்சையாக சாப்பிடும்போதும், சமைத்து சாப்பிடும்போதும் வேறுபடும். பாகற்காயில் 32 வகையான வேதி உள்ளடக்கங்கள் உள்ளன. ஒரு கப் அல்லது 130 கிராம் சமைத்த பாகற்காயை உண்பதன் மூலமாக 53.3 கலோரிகள் கிடைக்கும். புரதச்சத்து: 1.07 கிராமும், கொழுப்பு 3.52 கிராமும் காணப்படுகிறது.
கார்போஹைட்ரேட் அளவு 5.45 கிராம், சர்க்கரையின் அளவு 2.46 கிராமாக உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்தில் 2.47 கிராம் கிடைக்கிறது. பாகற்காய் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின் சி அதிகமுள்ள காய். ஒரு கப் பாகற்காயில் 41.5 கிராம் வைட்டமின் சி கிடைக்கிறது. இதில் வைட்டமின் பி9 சத்தின் இயற்கை வடிவமான ஃபோலேட் காணப்படுகிறது. இதுவே நம்முடைய செல்கள் வளர உதவும் வைட்டமினாகும்.
பாகற்காயின் நன்மைகள்:
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த பாகற்காய் உதவும். பாக்டீரியாக்களால் ஏற்படும் சில நோய்த்தொற்றுகளையும் எதிர்த்துப் போராட பாகற்காய் உதவுகிறது .
பாகற்காய் சாற்றை குடிப்பது புற்றுநோய்க்கு எதிராக போராட உதவும். கருப்பை, தோல், எலும்பு மஜ்ஜை, மார்பகம், புரோஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட பாகற்காய் உதவும் என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
பாகற்காயில் உள்ள சில புரதங்கள் வளர்சிதை மாற்றக் கோளாறுகளைத் தடுக்கிறது என சொல்லப்படுகிறது. வளர்சிதை மாற்ற கோளாறுகள் இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றில் ஆரோக்கியமற்ற நிலையை ஏற்படுத்தும். இதை தடுக்க பாகற்காய் உண்ணலாம்.
பாகற்காய் ஜூஸில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமுள்ளது. இது முகப்பருவை நீக்க உதவுகிறது.
இதய நோய்கள், உடல் பருமன், சிறுநீரக பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது .
எந்த உணவுகளுடன் பாகற்காய் உண்ணக் கூடாது?
வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழங்கள் ஆகிய பழங்களுடன் பாகற்காய் சாப்பிடக் கூடாது.
பாகற்காயுடன் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும். பால், தயிர் அல்லது சீஸ் போன்றவையுடன் பாகற்காய் உண்பது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
கிராம்பு, இலவங்கப்பட்டை அல்லது ஜாதிக்காய் மசாலாப் பொருட்களுடன் பாகற்காய் உண்ணக் கூடாது.
மாட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சியுடன் ஒன்றாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
தக்காளி, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் அமில உணவுகளாகும். இதனுடன் பாகற்காய் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
எந்த உணவுகளுடன் பாகற்காய் உண்ணலாம்?
பாகற்காய், நெல்லிக்காய் சாறு இரண்டும் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும். இதனை அவ்வப்போது குடிப்பதால் உடல் சுத்தமாக இருக்கும்.
பாகற்காயின் கசப்பை மட்டுப்படுத்தி இனிப்புச் சுவையைச் சேர்க்க பூசணிக்காயைப் பயன்படுத்தலாம்.
பாகற்காய் கசப்பு நீங்க!
பாகற்காயில் உள்ள கசப்பினை குறைத்தால் சாப்பிட நன்றாக இருக்கும். அதற்கு பாகற்காயை இரவு முழுக்க உப்பு நீரில் ஊறவைக்கலாம். காலையில் அதனை கழுவலாம். இதனை சமைக்கும்போது கசப்பு ரொம்ப தெரியாது.
ஒரு நாளைக்கு எவ்வளவு பாகற்காய் உண்ணலாம்?
பாகற்காயைஉங்களுடைய அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள விரும்பினால் அதற்கென சில வரம்புகள் உண்டு. குறிப்பிட்ட அளவிற்கு மேல் பாகற்காய் உண்பதால் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். சுகர் நோயாளிகள் பாகற்காய் பொடியாக எடுத்தால் ஒரு நாளில் 3 முதல் 15 கிராமுக்கு மேல் உட்கொள்ளக்கூடாது. பாகற்காய் ஜூஸாக அருந்தினால் 100 முதல் 200 மி.லி. தான் ஒரு நாளின் லிமிட்.
பாகற்காயின் பக்க விளைவுகள்:
மருத்துவர் பரிந்துரையின் படி குறிப்பிட்ட அளவு நீங்கள் பாகற்காயை சாப்பிட்டு வந்தால் அதனால் பலன்கள் கிடைக்கும். ஆனால் அளவுக்கு மீறி உட்கொண்டு வந்தால் பக்க விளைவுகள் ஏற்படும். செரிமான கோளாறுகள், அஜீரணம், வயிற்றுப்போக்கு, இரைப்பை புண்கள், சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படலாம். வாரத்தில் ஒரு நாள் சமைத்து சாப்பிடுவது பிரச்சனையில்லை. தினமும் பாகற்காய் எடுத்துக் கொள்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும்.
யார் சாப்பிடக்கூடாது?
பாகற்காய் நல்ல பலன்களை கொண்டிருந்தாலும் சிலருக்கு தீமையை உண்டாக்கலாம். கருவுற நினைக்கும் பெண்கள், பாலூட்டும் பெண்கள் பாகற்காயை தவிர்க்க வேண்டும்.
பி-கிளைகோபுரோட்டீன் மூலக்கூறு மருந்துகளை சாப்பிடுபவர்கள் பாகற்காயை தவிர்க்கலாம்.
விரதம் இருப்பவர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், உடல் பலவீனமானவர்கள் தவிர்க்கலாம். ஏனென்றால் பாகற்காய் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். அதனால் உங்களுக்கு மயக்கம் ஏற்படலாம்.