
காலை எழுந்ததும் காபி அல்லது டீ இதில் ஏதேனும் ஒரு பானத்தை அருந்துவது பெரும்பாலானோருக்கு பழக்கமாக இருக்கும். காபி அல்லது டீ குடிக்காமல் ஒரு நாளை தொடங்குவது பலருக்கும் சிரமமாக இருக்கும். ஆனால் இந்த இரண்டு பானங்களும் உடலுக்கு அந்த அளவுக்கு நன்மையை தராது எனவும் கூறப்படுகிறது.
தினமும் காஃபின் என்ற பொருள் உள்ள காபியை குடிப்பதால் தூக்க கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் நெய் அப்படியல்ல அதில் பல நன்மைகள் உள்ளன. காபி அல்லது டீயில் நெய்யை கலந்து குடிப்பது உடலுக்கு நன்மையை தருவதாக பரவலாக பேசப்படுகிறது. அது உண்மையா? என்பதை இங்கு காணலாம்.
நெய் டீ (Ghee tea) :
வரக்காப்பி என சொல்லப்படும் பிளாக் டீ அல்லது கிரீன் டீயில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடிப்பதை தான் நெய் டீ (Ghee Tea) என்கிறார்கள். இது நம்மூர் கலாச்சாரம் இல்லை. இதனை திபெத்தில் பாரம்பரியமாக தயாரிக்கிறார்கள். அங்கு வெண்ணெய் டீ தயாரிப்பது போல தான் தற்போது நெய் டீயை தயாரிப்பது பிரபலமாகிவருகிறது. திபெத்தியர்கள் டீயில் யோக் வெண்ணெய், கொஞ்சம் உப்பு கலந்து தயாரிப்பார்கள். இதற்கு வெண்ணெய் டீ என பெயர். இந்த டீ நல்ல கிரீமியாக, ஆரோக்கியமான கொழுப்புகளை கொண்டுள்ளது. இந்த மாதிரி காலையில் நெய் டீயை குடிப்பதால் உடலில் பல நல்ல மாற்றங்கள் வருகிறதாம்.
இதையும் படிங்க: தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த ஸ்பெஷல் டீ குடிங்க... எக்கச்சக்கமான நன்மைகள் கிடைக்கும்!!
நெய் டீ நன்மைகள் (Ghee Tea benifits):
காலையில் நெய் கலந்த டீயை குடிப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும். ஏற்கனவே இதய பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த டீ நல்ல தேர்வாக இருக்கும். காயங்கள் விரைவில் குணமாக, சருமம் பளபளப்பாக இந்த டீ குடிப்பது உதவுகிறது. இந்த டீ வெறும் தேநீராக மட்டுமில்லாமல் நல்ல கொழுப்பு, வைட்டமின், உடலுக்கு தேவையான ஆன்ட்டி ஆக்சிடென்ட் போன்றவற்றை கொண்டுள்ளது. இந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மாதவிடாய் கால வலியை குறைக்கும். சீரற்ற மாதவிடாய் சுழற்சிகளை சரிசெய்யும்.
செரிமான பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. ஏனென்றால் நெய்யில் காணப்படும் ப்யூட்ரேட் (Butyrate) குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது. நெய்யில் இருக்கும் பியூட்ரிக் அமிலம், ட்ரைகிளிசரைடுகள் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். நல்ல கொழுப்புகளை அதிகரிக்கும். எலும்பு, தசை ஆகியவற்றுக்கு இயற்கை உயவுப்பொருள் போல நெய் செயல்படுமாம். பிளாக் டீயில் உள்ள பாலிபினால் அழற்சி எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடியது.
நெய் காபி (Ghee Coffee):
பால் கலக்காத கடுங்காபியில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து தயாரிப்பதே நெய் காபி. இதை காலையில் குடிப்பதால் சுறுசுறுப்பு, மன நிறைவாக ஏற்படும். நெய்யில் இருக்கும் நல்ல கொழுப்பு காபியில் உள்ள காஃபின் (Caffeine) உறிந்து உடலுக்கு ஆற்றலை கொடுக்கும்.
நெய் காபி நன்மைகள்:
நெய்யில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்புகள் (Saturated fats) காஃபினுடன் கலக்கும்போது விழிப்புணர்வு, தெளிவு, மனதை ஒருமுகப்படுத்தக் கூடிய ஆற்றல் கிடைக்கும். இதனால் கவனம் சிதறடிக்கப்படாது. நெய்யில் காணப்படும் பியூட்ரிக் அமிலம் குடல் இயக்கத்தை மேம்படுத்தும். நெய்யில் உள்ள நல்ல கொழுப்பு திருப்தியான உணர்வை அளிக்கும் என்பதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும்.
நெய் காபி vs நெய் டீ:
நெய் கலந்த காப்பி அல்லது டீயை அருந்துவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவைகளை பொறுத்து அமைகிறது. காலையில் நெய் காபி அருந்தினால், அதிலுள்ள காஃபின் மூலம் உடல் சுறுசுறுப்பாக இருக்க ஆற்றல் கிடைக்கும். கவனச்சிதறல் இல்லாமல் ஒருமுகமாக செயல்பட உதவும். வயிறு நிரம்பிய உணர்வால் எடைய குறைக்கவும் உதவும்.
நெய் கலந்த டீயை குடிப்பதால் செரிமானம் மேம்பட்டு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். இது உடலை ஈரப்பதமாக வைக்க உதவுவதால் பளபளப்பான சருமம் கிடைக்கும். நீங்கள் எந்த பலனை பெற விரும்புகிறீர்களோ அதற்கு ஏற்றவாறு நெய் கலந்த டீ அல்லது காபியை அருந்துங்கள்.
இதையும் படிங்க: காபி குடிப்பது நல்லது தான்... ஆனால் அதை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் தெரியுமா?