
நடைபயிற்சி உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பெரும் பங்காற்றுகிறது. எந்த நோய் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் நடைபயிற்சி செய்யலாம். இதற்கு விதிவிலக்கு கிடையாது. இதய நோய் உள்ளவர்கள், நீரிழிவு நோய் இருப்பவர்கள், ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரும் நடைபயிற்சி செய்யலாம். இந்த நோய்களால் வரும் எதிர்மறை தாக்கங்களை நடைபயிற்சி குறைக்கும். இது தவிர எடையை குறைக்க நினைப்பவர்களும் நடக்கலாம்.
குளிர்காலத்தில் காலையில் எழுந்து நடைபயிற்சி மேற்கொள்ள சிரமமாக இருக்கும். குளிர் சிலரின் உடலுக்கு ஏற்றதல்ல. அதனால் குளிர்காலத்தில் மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். மாலை நேரம் நடைபயிற்சி செய்வது மோசமானது அல்ல. காலை அல்லது மாலை இரண்டு நேரமும் நடக்கலாம். இரண்டுமே நல்ல பலன்களையே தரும்.
இப்போது சாப்பாட்டிற்கு பின் குறுநடை போடுவதும் மக்களிடையே பரவலாக காணப்படுகிறது. இரவில் உணவுக்கு பின்னர் 15 நிமிடங்கள் நடப்பது உணவு செரிமானமாக உதவியாக இருக்கும். இரவில் உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும்.
இதையும் படிங்க: இந்த ஒரு 'ரூல்ஸ்' கட்டாயம்.. அப்ப தான் 'வாக்கிங்' போறதோட முழுபலன் கிடைக்கும்!!
குளிர்காலத்தில் மாலையில் நடக்கலாமா?
காலையில் அதிக குளிரடிக்கும் என்பது நடப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்தும். அதைப்போல மாலையிலும் குளிர்ந்த காற்று வீசும் வாய்ப்புகள் உள்ளன. வயது முதிர்ந்தவர்கள் மாலையில் நடப்பது அவர்களுக்கு ஏற்றதாக இருக்காது. அதுமட்டுமின்றி குளிர்காலம் என்றாலே காலை, மாலை இரண்டு நேரங்களிலும் மூடுபனி காணப்படும். இந்த மாதிரி மூடுபனியில் நடைபயிற்சி மேற்கொள்வது உங்களுக்கு சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். நீங்கள் மாலையில் தொடர்ந்து நடைபயிற்சி செய்தால் உங்களுக்கு சளி, இருமல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
கடும் குளிரில் நடைபயிற்சி மேற்கொள்வதால் தலைவலி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இது சிலர் சொல்ல கேட்டத் தகவல். உங்களுடைய உடல் நிலை நன்றாக இருந்தால் மாலையில் நீங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். ஆனால் சைனஸ், சளி தொந்தரவு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால் குளிர்காலத்தில் காலையிலோ, மாலையிலோ நடைபயிற்சி மேற்கொள்வது நல்லதல்ல.
குளிர்காலத்தில் நடைப்பயிற்சி செல்லும் முன் என்னென்ன செய்ய வேண்டும்?
உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நன்மைகளை தரும் என்ற நிலையில் குளிரை காரணம் காட்டி அதை தவிர்ப்பது நல்ல விஷயம் அல்ல. குளிர்காலத்தில் நடைபயிற்சி செல்வதற்கு முன்பாக சில விஷயங்களை செய்வதன் மூலம் எதிர்மறையான பாதிப்புகளை தடுக்க முடியும். திறந்தவெளியில் வாக்கிங் செல்வதை தவிர்க்க வேண்டும். இதனால் உங்களுக்கும் மூடுபனிக்கும் நேரடி தொடர்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மற்ற நேரத்தைப் போல குளிர்காலங்களை நீண்ட நேரம் நடை பயிற்சி செய்ய வேணடாம். மாலை நேரத்தில் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை வாக்கிங் செய்தால் போதும். நடைபயிற்சி செய்யும் போது உங்களுடைய உடலை ஸ்வெட்டர் போன்ற ஆடைகளைக் கொண்டு முழுமையாக மூடுவது நல்லது. கம்பளி சாக்ஸ், ஷூ, கையுறைகள் அணிந்து வாக்கிங் செல்வது உடலை கதகதப்பாக வைத்திருக்கும். இதனால் குளிர் காரணமான பிரச்சனைகளிலிருந்து தப்பலாம்.
மாலை நடைபயிற்சியின் நன்மைகள்:
- மாலையில் வாக்கிங் செல்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். உங்களுடைய உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
- உடல் எடையை குறைக்க உதவும் நல்ல பயிற்சியாகும்.
- இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும்.
- இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும்.
- மன அழுத்தம் குறைந்து இலகுவாக உணர்வீர்கள்.
- இதய நோய்க்கான ஆபத்துகள் குறையும்.
வீட்டுக்குள் நடைபயிற்சி:
குளிர்காலத்தில் உங்களால் வெளியில் சென்று நடைபயிற்சி மேற்கொள்ள முடியாவிட்டால் வீட்டிற்குள் நீங்கள் நடக்கலாம். உங்களுடைய வீட்டில் தாராளமான இடவசதி உள்ள இடத்தில் எட்டு வரைந்து அதன் மீது நடப்பது உங்களுக்கு விரைவான பலன்களை தரும். எடை குறைப்புக்கு முயற்சி செய்பவர்களுக்கு இதில் நல்ல பலன்கள் கிடைக்கும். வீட்டின் மாடியில் அல்லது வராண்டாவில் நடப்பது குளிரில் இருந்து உங்களை பாதுகாக்கும்.
இதையும் படிங்க: அதிகாலை நடப்பது நன்மைனு நினைச்சிருப்பீங்க.. ஆனா 'இத்தனை' நிமிஷம் தான் நடக்கனும் தெரியுமா?