கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, தனது இந்திய பயணத்தின் போது ஆனந்த் அம்பானியின் வந்தாரா வனவிலங்கு மையத்திற்குச் சென்றார். அங்கு, ஆனந்த் அம்பானி மெஸ்ஸிக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை பரிசளித்தார்.
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் இந்தியப் பயணம், ரசிகர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றிய ஒன்றாக அமைந்தது. ஜி.ஓ.ஏ.டி. (GOAT) இந்தியா டூர் என்ற பெயரில் நடந்த இந்த சுற்றுப்பயணம், ஆரம்பம் முதலே பெரும் கவனத்தை ஈர்த்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து சில விமர்சனங்கள் இருந்தாலும், மெஸ்ஸி இந்தியாவின் கலாச்சாரம், மக்கள், சூழல் ஆகியவற்றை நேரடியாக அனுபவித்தார் என்றே சொல்லலாம். இதில் சந்தேகம் இல்லை.
25
லியோனல் மெஸ்ஸி
இந்த பயணத்தின் முக்கிய தருணமாக, ஆனந்த் அம்பானியுடன் மெஸ்ஸி சந்தித்த நிகழ்வு பேசுபொருளாக மாறியது. ஆனந்த் அம்பானிக்கு சொந்தமான வந்தாரா என்ற வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்திற்கு மெஸ்ஸி வந்த நிகழ்வில் பல ஆச்சர்யமான சம்பவங்கள் நடைபெற்றது. ஆனந்த் அம்பானி, மெஸ்ஸிக்கு USD 1.2 மில்லியன் (சுமார் ரூ.10.9 கோடி) மதிப்புள்ள மிக அரிய ரிச்சர்ட் மில்லே (Richard Mille) கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கிய தகவல்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
35
உலகப் புகழ்பெற்ற கடிகாரம்
வந்தாராவிற்கு வந்த மெஸ்ஸி, ஆரம்பத்தில் கைக்கடிகாரம் இன்றி வந்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் Richard Mille RM 003-V2 GMT Tourbillon ‘Asia Edition’ என்ற அரிய கைக்கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. உலகம் முழுவதும் வெறும் 12 மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த கடிகாரம், அதன் கருப்பு கார்பன் கேஸ் மற்றும் ஸ்கெலிட்டன் டயல் வடிவமைப்பால் பிரபலமானது.
இந்த சந்திப்பில் ஆனந்த் அம்பானியும் வழக்கம் போல தனது ஆடம்பரத்தை வெளிப்படுத்தினார். அவர் அணிந்திருந்தது USD 5 மில்லியன் (சுமார் ரூ.45.5 கோடி) மதிப்புள்ள Richard Mille RM 056 Sapphire Tourbillon கடிகாரம். ஆனால் மெஸ்ஸியின் வந்தாரா பயணம், வெறும் ஆடம்பரத்துக்கான சந்திப்பாக மட்டுமல்ல. சனாதன தர்ம மரபுகளை பின்பற்றி, அவர் அங்கு பாரம்பரிய இந்து வழிபாடுகளில் கலந்து கொண்டார். அம்மன் பூஜை, கணேச பூஜை, ஹனுமான் பூஜை, சிவ அபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகளில் பங்கேற்று, மகா ஆராதனை செய்து ஆசீர்வாதம் பெற்றார்.
55
வந்தாராவிற்கு வந்த மெஸ்ஸி
அதன்பின், மெஸ்ஸி வந்தாராவின் பரந்த வனவிலங்கு பாதுகாப்பு வளாகத்தை சுற்றிப் பார்த்தார். மீட்கப்பட்ட சிங்கங்கள், புலிகள், யானைகள் உள்ளிட்ட விலங்குகளுடன் நேரம் செலவிட்டார். குறிப்பாக, மாணிக்லால் என்ற யானை குட்டியுடன் மெஸ்ஸி விளையாடிய தருணம் அனைவரையும் நெகிழ வைத்தது. இந்த சந்திப்பின் நினைவாக, அனந்த் மற்றும் ராதிகா அம்பானி ஒரு சிங்கக் குட்டிக்கு ‘லியோனல்’ என பெயர் வைத்தனர். வந்தாராவின் பணிகளை பாராட்டிய மெஸ்ஸி, “இங்கு நடைபெறும் பராமரிப்பு மற்றும் மீட்பு முயற்சிகள் உண்மையிலேயே அழகானவை” என மனதார பாராட்டு தெரிவித்தார்.