
கீரையும் முட்டையும் சிறந்த காலை உணவாக இருக்கும். இதன் மூலம் அன்றைய தினத்திற்கு தேவையான ஊட்டச்சத்தும் ஆற்றலும் பெறலாம். பள்ளி, வேலைக்குச் செல்லும் அவசரத்தில் பெரும்பாலானோர் காலை உணவை தவிர்ப்பார்கள். இந்த மாதிரி நேரத்தில் காலை உணவாக முட்டையை எடுத்து கொள்ளலாம். முட்டையை சமைக்க பெரிய சூத்திரங்கள் இல்லை. புரதம் மற்றும் நல்ல கொழுப்பு அடங்கிய முட்டைகளை கீரையுடன் உண்பதால் இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
முட்டையும் கீரையும் தனித்தனியே பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. இவை இரண்டையும் ஒன்றாக சமைத்து சாப்பிடும்போது இரட்டிப்பான நன்மைகளை பெற முடியும். சிலருக்கு கீரை உண்பது பிடிக்காது. ஆனால் கீரையில் உடலுக்கு தேவையான இரும்புச் சத்து, மஞ்சள் சத்து, கால்சியம் போன்றவை மிகுந்து காணப்படுகிறது. கீரையை எப்படி சமைத்தால் அதை வெறுப்பவர்கள் கூட விரும்பி உண்பார்கள் என்பதை இந்த பதிவில் காணலாம். கீரையின் நன்மைகளையும், அதை முட்டையுடன் சேர்த்து உண்பதன் அவசியத்தையும் கூட தெரிந்து கொள்ளலாம்.
கீரை - முட்டை சத்துக்கள்:
கீரை, முட்டை ஆகிய இரண்டும் தசைகளை வலுவாக்கும் புரதங்கள், வைட்டமின்கள் அதிகமுள்ளவை. இதில் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் தாதுவும் உள்ளது. முழு முட்டையில் நல்ல கொழுப்பு, வைட்டமின் பி-12 மற்றும் வைட்டமின் டி காணப்படுகிறது. இதன் மூலம் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். கீரையில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ ஆகியவை உடலுக்கு தேவையான தாதுக்களாகும். இது ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த மூலமாகவும் உள்ளது.
ஒரு கப் கீரையுடன் ஒரு முட்டை சேர்த்து சமைப்பதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என தெரிந்தால் அசந்துவிடுவீர்கள். ஒரு கப் கீரையுடன் 1 முட்டையை உண்பதால் 140 கலோரிகள் கிடைக்கும். 18 கிராம் புரதம், 8 கிராம் கொழுப்பு, 2 கிராம் நிறைவுற்ற கொழுப்பு, 80மி.கி கொலஸ்ட்ரால், 4 கிராம் நார்ச்சத்து உள்ளது. தினசரி தேவைக்கான வைட்டமின் ஏ-யில் 200%, வைட்டமின் கே 150%, இரும்புச்சத்து 20%, கால்சியம் 10% முட்டை- கீரை உணவில் கிடைக்கும்.
கீரை - முட்டையின் நன்மைகள்:
கீரையுடன் முட்டையை சேர்த்து சமைத்து சாப்பிடுவது உடலிம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதை காலை உணவாக உண்பதால் எடையை குறைக்கலாம். மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் வயது மூப்பு காரணமாக நோய்கள், மூளை பாதிப்புகள் ஏற்படுவது தாமதப்படுத்தப்படுகிறது. அதனால் தான் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக கீரையை சாப்பிட வேண்டும்.
கீரையிலும் முட்டையிலும் எலும்பு, தசைகளை வலுவாக்கும் உள்ளடக்கம் உள்ளது. இந்த உணவு செரிமானம், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கீரையில் உள்ள வைட்டமின் சி, முட்டையில் காணப்படும் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவுகிறது. கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் லுடீன், ஜீயாக்சாண்டின் கீரை, முட்டையை சேர்த்து உண்ணும்போது கிடைக்கும். கீரையில் காணப்படும் ஆக்ஸிஜனேற்றிகள் முட்டையில் உள்ள வைட்டமின் 'ஈ' நிறைவு செய்ய உதவும். முட்டையில் உள்ள புரதம் கீரையின் அமினோ அமிலப் பண்புகளை மேம்படுத்தும்.
ஏன் கீரை - முட்டையை காலை உணவாக சாப்பிட வேண்டும்?
முட்டை பொதுவாக வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும். இதனால் பசியை கட்டுப்படுத்த முடியும். கீரையும் முட்டையும் காலை உணவாக உண்பதால் அன்றைய நாளுக்கான ஆற்றலை பெற முடியும். கீரையை இரவில் உண்பதால் சிலருக்கு செரிமான பிரச்சனை வரலாம். அதனால் தான் மாலை உணவாக பரிந்துரைப்பதில்லை. கீரை நார்ச்சத்து மிகுந்தது. பசியை கட்டுக்குள் வைக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த காலை உணவாக இருக்கும்.
இதையும் படிங்க: கீரை சாப்பிட்டால் சத்துதான்.. ஆனா சமைக்கும் போது 'இப்படி' பண்ணா மட்டும் தான் நன்மை இருக்கு!!
முட்டை - கீரை எளிய ரெசிபி:
கீரையை நன்கு கழுவி அதனை நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இதனை வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் (7 நிமிடங்கள் வரை) ஊறவிடுங்கள். 2 முதல் 3 தக்காளிகளை பொடியாக வெட்டி வையுங்கள். பூண்டு 4 பல், வெங்காயம் 2 ஆகியவற்றை நறுக்கி கொள்ளுங்கள். கீரையில் உள்ள தண்ணீரை வடிகட்டுங்கள். இதனுடன் உப்பு, மிளகு, நறுக்கிய தக்காளி, பூண்டு, வெங்காயம் தேவையான மசாலா கலந்து கொள்ளுங்கள். இன்னொரு பாத்திரத்தில் 4 முட்டைகளை அடித்து எடுத்து கொள்ளுங்கள். இதில் கீரை கலவையை சேர்த்து விடுங்கள். ஒரு வாணலியில் வெண்ணெயை நன்கு சூடாக்கி பின்னர் தயார் செய்த கலவையை ஊற்றுங்கள். இதனை வழக்கமான முட்டை ஆம்லெட் போல இருபுறமும் வேக வைத்தால் போதும். பான் கேக் மாதிரி காலை உணவுக்கு அட்டகாசமாக இருக்கும்.
இதையும் படிங்க: முட்டை அதிகமா சாப்பிட்டா என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?