தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களுடன் இணைந்து பல மறக்க முடியாத காமெடி காட்சிகளில் நடித்தவர் தான் நடிகர் மயில்சாமி. நடிகராக மட்டுமல்ல, மக்களுக்கு உதவுவதிலும் எப்போதும் ஆர்வம் கொண்டவர். பல குரல்களில் பேசும் மிமிக்ரி கலைஞரான மயில்சாமி, காமெடியில் கொடி கட்டி பறந்த வடிவேலு, விவேக் ஆகிய நடிகர்களுடன் சேர்ந்து பல நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார். இவருடைய தங்கபஷ்பம் காமெடி மிகவும் தனித்துவம் கொண்டது.
நடிப்பை தவிர மக்களுக்காக வீதிகளில் இறங்கி உதவிக்கரம் நீட்டுவதிலும் மயில்சாமியை நிகர் செய்ய முடியாது. ஏழை மாணவர்களின் படிப்பு செலவு, மருத்துவ செலவு, ஏழைகளுக்கு தன்னால் முடிந்த நலத்திட்ட உதவி என எந்த உதவியும் மறுக்காமல் செய்து வந்தார்.
சிவனை வழிபட்ட திருப்தியில் அதிகாலை வீடு திரும்பிய மயில்சாமி, அங்கு மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த செய்தி திரையுலகினரை மட்டுமின்றி மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அன்னாரது மறைவுக்கு பின் நடந்த இறுதிச்சடங்கில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினரும், ரசிகர்களும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.