இன்றைய அவசர காலத்தில் பலரும் உடல் எடையை கட்டுக்குள் வைக்காமல் தான்தோன்றித்தனமாக மாறிவிட்டனர். இதில் ஆணோ, பெண்ணோ விதிவிலக்கில்லை. இந்நிலையில் தட்டையான வயிறு இல்லாத பெண்கள் கன்னிப்பெண்கள் அல்ல என்பது போன்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
டுவிட்டரில் 'Ask Aubrey' என்ற பயனர் பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட்டில், தட்டையான வயிறு (flat belly) இல்லாத பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை இழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான அறிக்கையால் நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிலர் 'பெண்களே இன்று உங்கள் கர்ப்பப்பை வெளியே தெரிகிறதா?' என சர்காஸமாக கருத்துகளை பதிவிட்டுள்ளனர். இதை வெறும் கிண்டல் பதிவாக கடந்துவிட முடியாது. பெண்களின் உடலைப் பற்றிய புரிதல் இல்லை என்பதுதான் இதன் மூலம் தெரிய வருகிறது. இது மாதிரியான நிகழ்வுகள் பாலியல் கல்வியின் அவசியத்தை உணர்த்துவதாகவும் அந்த பதிவில் கருத்துக்கள் பதியப்பட்டுள்ளன. உண்மையில் கன்னித்தன்மைக்கும் தொப்பைக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் இந்த பதிவு ராஜஸ்தானில் உள்ள பிற்போக்குத்தனமான கன்னிப்பெண்களுக்கான சடங்கையும் நினைவூட்டுகிறது.
ராஜஸ்தானில் நடைமுறையில் உள்ள பிற்போக்கான ஒரு சடங்கில், மணமகள் குக்டி எனும் முறையில் கன்னித்தன்மை சோதனைக்கு உட்படுத்தப்படுகிறாள். திருமணம் முடிந்த கையோடு கணவனின் அறைக்குச் செல்லும் மணப்பெண்ணின் கன்னித்தன்மை சோதிக்கப்படுகிறது. அவர்கள் முதலிரவில் பயன்படுத்தும் படுக்கையில் இரத்தக் கறைகள் காணப்பட்டால், அவள் சோதனையில் தேர்ச்சி பெற்றதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் இது போன்ற பிற்போக்கான முறை இப்போதும் அமலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலிரவில் மணமகள், கணவனுடன் உடல் ரீதியாக தொடர்பு கொள்ளும்போது வெள்ளை படுக்கையில் (இரத்தம்) கறை படிந்திருக்க வேண்டும். இதை கிராமத்தில் உள்ள அனைவருக்கும் காலையில் காட்ட வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கன்னிப்பெண் என்ற சான்றிதழை வழங்குவதோடு, கணவன் வீட்டில் அவளுக்கு மதிப்பளிக்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க டுவிட்டரில் தொப்பை உள்ள பெண்கள் கன்னித்தன்மை இழந்தவர்கள் என்ற வாதம் சூடுபிடித்துள்ளது. ஆனால் அது அர்த்தமற்றது.