
பெண் பிள்ளைகள் எதிர்பார்ப்பதற்கு முன்னரே பருவமடைவதற்கான அறிகுறிகளுடன் வளரும் போது பெற்றோர்களுக்கு மன சங்கடத்தை தரும். இதுவொரு இயல்பான நடைமுறை தான் என்று பல்வேறு அறிவியல் ஆய்வுகள் கூறினாலும், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் மத்தியில் ஒரு பரபரப்பு இருக்க செய்கிறது. ஆனால் அதேசமயத்தில் சீக்கரம் பெண் குழந்தைகள் பருவமடைந்துவிட்டால், அவர்களுடைய வளர்ச்சி இளம் வயதிலேயே தடைபடுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேசமயத்தில் மிகவும் சிறிய வயதில் பருமடையும் பெண் குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். தங்களுடைய உடலில் ஏற்படும் மாற்றங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போகிறது. இதனால் அவர்களுடைய மனநலன் பாதிப்புக்குள்ளாகிறது. பெண்களில் 8 வயதிற்கு முன்பும், ஆண்களுக்கு 9 வயதுக்கு முன்பும் முன்கூட்டியே பருவமடைதல் செயல்பாடு காணப்படுகிறது.
உடல் பருமன்
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு ஈஸ்ட்ரோஜன் மற்றும் இன்சுலின் அளவை அதிகரித்துவிடுகிறது. இதன்காரணமாக குழந்தைகள் சிறு வயதிலேயே பருவமடைந்து விடுகின்றனர். குழந்தைகளை அதிகமாக வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவிப்பதன் மூலம், உடல் பருமன் பிரச்னையை போக்கலாம். வாரத்திற்கு மூன்று முறையாவது 45 நிமிடங்களுக்கு அவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். கூடுதல் கலோரிகளை எரிக்க உதவும் சில விளையாட்டுகளை அவர்கள் விளையாடுவதும், உடல் பருமன் பிரச்னைக்கு தீர்வாக அமையும்.
பிபிஏ ரசாயனம்
பிளாஸ்டிக் பெட்டிகள், உணவு கேன்கள், தண்ணீர் பாட்டில்கள், டிஃபின்கள் மற்றும் இதர உணவு சேமிப்புக் கொள்கலன்களில் காணப்படும் பிபிஏ என்ற ரசாயனம் உணவில் ஊடுருவி உடலுக்குள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். பெண் குழந்தைகள் சிறிய வயதிலேயே பருவம் அடைவதற்கு இதுவும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். எஃகு, கண்ணாடி அல்லது BPA இல்லாத கொள்கலன்கள் மற்றும் பாட்டில்களை குழந்தைகளுக்கு பயன்படுத்த கொடுங்கள். மாதவிடாய் சுழற்சியில் உள்ள முறைகேடுகள், பலவீனமான கருவுறுதல், PCOS மற்றும் PCOD போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கு பி.பி.ஏ ரசாயனம் முக்கிய காரணமாக உள்ளது.
துரித உணவுகள்
உடல் பருமனுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஜங்க் ஃபுட். அதிக அளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இன்சுலினை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பெண் குழந்தைகள் சீக்கரமே பருவமடைந்து விடுகின்றனர். அதாவது 3 வயது முதல் 7 வயது வரை கொழுப்பு உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் குழந்தைகளிடம் இந்த பிரச்னை பொதுவாக காணப்படுகிறது. அதேசமயத்தில் சைவ உணவு வகைகளில் அதிகளவில் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் சீக்கரமே பருவமடைதலுக்கு வழிவகுக்கிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சி, உறைந்த தின்பண்டங்கள், மற்றும் சிவப்பு இறைச்சி போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு அளவுடன் கொடுங்கள்.
சமூகவலைதளங்கள்
குழந்தைகளின் பருவமடைதல் பிரச்னைக்கு மூகமும் ஊடகங்களும் அடுத்த காரணங்களாக உள்ளன. பதினெட்டு வயதுக்கு அதிகமானோருக்கான உள்ளடக்கத்தை குழந்தைகள் பார்ப்பது பிட்யூட்டரி சுரப்பியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற பாலியல் ஹார்மோன்களை அதிகளவு உற்பத்தி செய்ய தூண்டுகிறது. இதன்காரணமாக குழந்தைகளிடையே சீக்கரமாக பருவமடைதல் செயல்பாடு ஏற்பட்டுவிடுகிறது.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் இளநீரை குடிப்பது நல்லது- ஏன் தெரியுமா?
பசும் பால்
இயற்கையாக நிகழும் புரதத்தின் செயற்கையான பாதிப்பு தான் RSBT என்கிற Recombinant bovine somatotropin. இது பசுக்கள் பால் உற்பத்தி செய்ய உதவுகிறது. இது பெண்களிடையே ஆரம்பகால மார்பக வளர்ச்சி மற்றும் மாதவிடாய் ஏற்பட காரணமாக உள்ளது. அதேபோன்று ஆண் பிள்ளைகளின் அந்தரங்க பகுதிகளில் சீக்கரமே முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. அதனால் முடிந்தவரை குழந்தைகளுக்கு பசும்பாலை அதிகளவு தர வேண்டாம். பதின்ம வயதினருக்கு எதிர்மறையான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன்கள் புரோட்டீன் ஷேக்குகளில் உள்ளன. அதனால் ஜிம்முக்கு உடற்பயிற்சி செய்ய செல்பவர்கள், மருத்துவர்களை கலந்தாலோசித்துவிட்டு புரோட்டீன் ஷேக்குகளை சாப்பிடுங்கள்.