
ரசம் ஒரு தவிர்க்க முடியாத உணவு. பல பொருட்கள் சேர்த்து செய்யப்படும் ரசத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. புளி, மஞ்சள், மிளகு, கடுகு, சீரகம் போன்ற மசாலாப் பொருட்கள் ரசத்தை ஊட்டச்சத்து நிறைந்த உணவாக மாற்றுகின்றன.
ரசத்தில் புரதங்கள், வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. நியாசின், வைட்டமின் ஏ, சி, ஃபோலிக் அமிலம், தியாமின் ஆகியவை இதில் அதிகம். மிளகு செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. வீட்டில் எளிதாக செய்யக்கூடிய பத்து ரசங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
குறைந்த நேரத்தில் எளிதாக செய்யக்கூடியது தக்காளி ரசம். இது உடல் எடையைக் குறைக்க ஒரு நல்ல உணவு. தக்காளியில் கலோரிகள் குறைவு. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இது செரிமான பிரச்சனைகளை நீக்கும். இந்த ரசம் செய்வதற்கு புளியை சுடலை நீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இப்போது மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகு, பூண்டு, நன்கு பழுத்த 2 தக்காளி சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். இப்போது இதில் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், புளி கரைசல் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். ரசம் கொதிக்க ஆரம்பிக்கும் போது தீயை குறைத்து 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும். அவ்வளவுதான் தக்காளி ரசம் ரெடி.
மிளகு ரசம் உடல் எடையைக் குறைக்க உதவும் ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவு. மிளகு வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தி, அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதை தினசரி உணவில் சேர்ப்பது நன்மை தரும். இந்த ரசம் செய்வதற்கு மிளகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி ஆகியவற்றை அரைத்து கொள்ளுங்கள். புளி கரைசலையும் ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கடுகு, வெந்தயம் போட்டு தாளித்து, இதில் அரைத்தால் மசாலா, புளி கரைசல், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். இறுதியாக மல்லித்தழையை தூவி இறக்கவும் அவ்வளவுதான். மிளகு ரசம் தயார் இந்த ரசம் தொண்டைக்கு ரொம்பவே நல்லது
இந்த ரசம் செய்வதற்கு கொத்தமல்லி இலை, தக்காளி, மிளகு, புளி, சீரகம், பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ரசம் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அதில் அரைத்து வைத்த ரசம் கலவையை ஊற்றி நுரை வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் கொத்தமல்லி ரசம் ரெடி! சீரகம் மற்றும் கொத்தமல்லி சேர்த்து செய்யப்படும் கொத்தமல்லி ரசம் செரிமான சக்தியை அதிகரிக்கும். இது செரிமானத்தை மேம்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.
இந்த ரசம் செய்வதற்கு பீட்ரூட்டை நறுக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். பிறகு அதை மசித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் மசித்து பீட்ரூட்டுடன் புளிக்கரைசல் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்க விடவும். அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். பின் இதை ரசத்தில் சேர்க்கவும். தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ளுங்கள் கடைசியில் கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும். சூப்பரான பீட்ரூட் ரசம் தயார்.
இந்த ரசம் செய்வதற்கு மிளகு, சீரகம், பூண்டு, வத்தல், கொத்தமல்லி விதை ஆகியவற்றை கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவை நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும் பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் தயாரித்து வைத்த ரசக் கலவையை சேர்த்து கொதிக்க விடவும். இறுதியாக கொத்தமல்லி இலையே தூவி இறக்கவும். ரசத்தை இறக்கிய பிறகு இறுதியாக எலுமிச்சை சாறு பிழிந்து நன்கு கலக்க வேண்டும். இந்த ரசத்தை அதிக நேரம் கொதிக்க வைக்க வேண்டாம். இல்லையெனில் புளிப்பு சுவை முற்றிலும் மாறி விடும்.சூடான சாதத்துடன் எலுமிச்சை ரசம் மிகவும் சுவையாக இருக்கும். எலுமிச்சை சாற்றின் நறுமணம் புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
அன்னாசி ரசம் மிகவும் சுவையான மற்றும் புதுமையானது. அன்னாச்சி பழத்தில் ரசம் செய்வதற்கு அன்னாச்சி பழத்தை சின்ன துண்டுகளாக நறுக்கி அதனுடன் தக்காளி, இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். இந்த ரசத்திற்கு பருப்பு சேர்க்க விரும்பினால் அதை தனியாக வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும். இப்போது மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அன்னாச்சி கலவையுடன் மசித்த பருப்பு, அரைத்த மசாலா விழுது ஆகியவற்றை சேர்க்கவும். இதனுடன் புளி கரைசல், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதை ரசத்தில் ஊற்ற வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். அவ்வளவுதான் டேஸ்டியான அன்னாச்சி ரசம் ரெடி.
முருங்கைக் கீரையில் ரசம் செய்வதற்கு முதலில் பருப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து மசித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் இதில் நறுக்கிய தக்காளி, முருங்கை கீரை சேர்த்துக் கொள்ளவும். அடுத்து புளிக்கரைசல், மசித்த பருப்பு, தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும். இறுதியாக கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும். அவ்வளவுதான் ருசியான முருங்கை கீரை ரசம் ரெடி.
பூண்டு ரசம் செய்வதற்கு சிறிதளவு சூடான நீரில் புளியை 20 நிமிடங்கள் ஊறவைத்து கரைத்து வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ளுங்கள் அடுத்து மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம் , பூண்டு, கொத்தமல்லி சேர்த்து லேசாக அரைக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் நசுக்கிய பூண்டு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். அடுத்து இதில் மஞ்சள் தூள், உப்பு, அரைத்த மசாலா ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதனுடன் புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். ரசம் நுரை மேலே வரும்போது கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும். அவ்வளவுதான் டேஸ்டியான புளி ரசம் தயார்.பூண்டில் உள்ள அல்லிசின் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது, மேலும் உடல் எடையைக் குறைக்கவும் இது நன்மை பயக்கும்.
கீரை தண்ணீர், புளி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து கீரை ரசம் செய்யலாம். கீரையில் அத்தியாவசிய தாதுக்கள், வைட்டமின்கள் உள்ளன. கலோரிகள் குறைவு என்பதால் உடல் எடை குறைக்க உதவும்.