ஐபிஎல் 13வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், விறுவிறுப்பான கட்டத்தில் இப்போது உள்ளது. லீக் சுற்று 3 நாட்களில் முடியவுள்ள நிலையில், இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுள்ளது.
எஞ்சிய 3 இடங்களை பிடிக்கும் வாய்ப்பு, ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ், பஞ்சாப், கேகேஆர், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய ஆறு அணிகளுக்கும் உள்ளது. எனவே இனிவரும் ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியமானது.
12 போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஏழாம் இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், எஞ்சிய 2 போட்டிகளில் இன்று ஆர்சிபியையும் கடைசி போட்டியில் மும்பை இந்தியன்ஸையும் எதிர்கொள்கிறது. இந்த 2 போட்டிகளிலுமே அந்த அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணிக்கு மற்றுமொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் தனது 2வது ஓவரை வீசும்போது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு களத்திலிருந்து வெளியேறிய விஜய் சங்கருக்கு, காயம் சரியாகததால், அவர் இனிவரும் போட்டிகளில் ஆடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி ஆர்சிபிக்கு எதிராக ஆடிய முதல் போட்டியிலேயே ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கணுக்கால் காயம் ஏற்பட்டு சீசனிலிருந்தே விலகினார். அந்த போட்டியில் மார்ஷ் பேட்டிங் ஆட முடியாததால் 10 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியிடம் தோற்றது சன்ரைசர்ஸ். மார்ஷ் சீசனிலிருந்தே விலகினார்.
அவரை தொடர்ந்து புவனேஷ்வர் குமாரும் காயம் காரணமாக சீசனிலிருந்து முழுவதுமாக விலகினார். ஆனாலும் அவர்கள் இல்லாமலேயே சமாளித்து ஆடியது சன்ரைசர்ஸ் அணி.
இந்நிலையில், ஆல்ரவுண்டர் விஜய் சங்கரும் முக்கியமான கட்டத்தில் காயத்தால் சீசனிலிருந்தே விலகியுள்ளார். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், விஜய் சங்கர், மனீஷ் பாண்டேவுடன் இணைந்து அருமையாக ஆடி அரைசதமடித்து, சன்ரைசர்ஸூக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
இந்த சீசனில் 7 போட்டிகளில் ஆடி 97 ரன்கள் அடித்ததுடன், 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார் விஜய் சங்கர்.