உள்நாட்டு போட்டிகள் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மலை மலையாக ஸ்கோர் செய்திருப்பவர் சூர்யகுமார் யாதவ். ஆனாலும் அவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டுவருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலும் சூர்யகுமார் யாதவ் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.
சூர்யகுமார் யாதவின் புறக்கணிப்பு முன்னாள் ஜாம்பவான்கள் பலருக்கும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரூல்ஸா என ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியிருந்தார். சூர்யகுமாரை ஏன் இந்திய அணியில் எடுக்கவில்லை என்று தேர்வாளர்களிடம் பிசிசிஐ தலைவர் கங்குலி கேள்வி எழுப்ப வேண்டும் என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் திலிப் வெங்சர்க்கார் வலியுறுத்தியிருந்தார்.
இந்திய அணியில் மீண்டும் புறக்கணிக்கப்பட்ட அதிருப்தியிலும் ஆதங்கத்திலும் இருந்த சூர்யகுமார் யாதவ், ஆர்சிபிக்கு எதிராக நடந்த போட்டியில், செலக்டார்ஸின் செவிட்டில் அறைந்தாற்போல அதிரடியான மற்றும் அற்புதமான ஒரு இன்னிங்ஸை ஆடினார். 43 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 79 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்து, மும்பை அணிக்கு வெற்றி பெற்றுக்கொடுத்தார்.
அந்த போட்டியில், களத்தில் செட்டில் ஆகி, சூர்யகுமார் யாதவ் மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். அப்போது, 13வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் அடித்த பந்தை கவர் திசையில் ஃபீல்டிங் செய்த கோலி, பந்தை பிடித்துவிட்டு, சூர்யகுமார் அருகில் வந்து அவரை முறைத்தார். அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாத சூர்யகுமார், அங்கிருந்து நகர்ந்து சென்று, தனது காரியத்தில் கண்ணாக இருந்து, கடைசி வரை களத்தில் நின்று போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தார். சூர்யகுமாரை சூடாக்கி அவுட்டாக்க முயன்ற கோலியின் முயற்சி பலனளிக்கவில்லை. கோலி அவரது மட்டமான செயல்பாட்டிற்கு சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள சேவாக், சூர்யகுமார் யாதவ் அபாரமாக ஆடினார். இந்திய அணியில் இடம்பெறாவிட்டாலும் தான் எந்தவிதத்திலும் யாருக்கும் சளைத்தவன் இல்லை என்பதை விராட் கோலிக்கு காட்டினார் சூர்யகுமார் யாதவ். கோலியிடம் சூர்யகுமார் யாதவ் பந்தை அடிக்க, அதன்பின்னர் அவரை பார்த்து கோலி முறைத்தார். ஆனால், தான் யாருக்கும் எதற்கும் பயந்தவனோ சளைத்தவனோ இல்லை என்பதை மீண்டுமொரு முறை நிரூபிக்கும் வகையில் இருந்தது சூர்யகுமார் யாதவின் ரியாக்ஷன் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.