ஐபிஎல் 2020: இனிவரும் போட்டிகளில் தோனி ஆடமாட்டார்..? ரசிகர்களுக்கு தலயோட முக்கியமான மெசேஜ்

நடப்பு ஐபிஎல் சீசனில் இனிவரும் போட்டிகளில் ஆடுவது குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி பேசியுள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் சிஎஸ்கேவிற்கு கொடுங்கனவாக அமைந்துவிட்டது. ஐபிஎல்லில் ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு முன்னேறிய சாதனையை படைத்திருந்த சிஎஸ்கே அணி, இந்த சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடனேயே வெளியேறி, தங்களது பெருமையை இழந்துவிட்டது.
இந்த சீசனின் முதல் 10 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்த சிஎஸ்கே அணி, எஞ்சிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில், வாட்சன், கேதர் ஜாதவ், பியூஷ் சாவ்லா ஆகிய மூவரையும் நீக்கிவிட்டு, இம்ரான் தாஹிர், ருதுராஜ் கெய்க்வாட், ஜெகதீசன் ஆகிய மூவரையும் அணியில் சேர்த்துக்கொண்டு, மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்டது.

ஆனால் முதல் இன்னிங்ஸின் பவர்ப்ளேயிலேயே போட்டியின் முடிவு உறுதியாகிவிட்டது. டிரெண்ட் போல்ட்டும் பும்ராவும் இணைந்து சிஎஸ்கேவின் பேட்டிங் ஆர்டரை சரித்துவிட்டனர். 71 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை சிஎஸ்கே இழந்துவிட்டது. சாம் கரனின் பொறுப்பான அரைசதத்தால் தான் 114 ரன்கள் என்ற ஸ்கோரையே சிஎஸ்கே அடித்தது. 115 ரன்கள் என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸின் தொடக்க வீரர்கள் டி காக் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவருமே அடித்துவிட்டனர்.
சிஎஸ்கே அணி பொதுவாக வெற்றியை அவ்வளவு எளிதில் எதிரணிக்கு தாரைவார்க்கக்கூடிய அணி கிடையாது. கடைசி வரை கடுமையாக போராடக்கூடிய அணி. ஆனால் இந்த சீசனில் சிஎஸ்கே, இத்தனை ஆண்டுகளாக கட்டிக்காத்த மரபு தகர்க்கப்பட்டது. இந்த சீசனில் பெரும்பாலும் போராட்ட குணத்தை வெளிப்படுத்தவே இல்லாமல் படுமோசமாகவே தோற்றது சிஎஸ்கே அணி.
இந்த சீசனில் லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகிவிட்டதால், அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, இளம் ரத்தத்தை பாய்ச்சி வலுவான அணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது சிஎஸ்கே அணி. அதைப்பற்றி, போட்டிக்கு பின்னர் தோனியே பேசினார்.
இதுகுறித்து பேசிய தோனி, அடுத்த ஆண்டுக்கான தயாரிப்பில் மிகத்தெளிவாக இருக்க வேண்டும். எந்த மாதிரியான ஏலம், எந்தெந்த மைதானங்களில் போட்டி ஆகியவற்றையெல்லாம் கருத்தில்கொள்ள வேண்டும். அடுத்த சீசனுக்கான தயாரிப்பின் முன்னோட்டமாக, இனிவரும் 3 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு அவர்களது திறமையை வெளிக்காட்ட போதிய வாய்ப்பளிக்கப்படும். இது அடுத்த சீசனுக்கான சிறந்த தயாரிப்பாக இருக்கும். பேட்ஸ்மேன்களை அடையாளம் காண்பது, டெத் ஓவர்களை யார் வீசுவது, அழுத்தத்தை கையாள்வது ஆகியவற்றிற்கு சிறந்த முன்னோட்டமாக அமையும் என்றார்.
எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்படும் என்று தோனி கூறியதையடுத்து, வர்ணனையாளர் மார்க் நிகோலஸ், எஞ்சிய போட்டிகளில் தோனி ஆடுவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தோனி, கேப்டன் ஓடி ஒளிய முடியாது. எனவே நான் அடுத்த 3 போட்டிகளிலும் ஆடுவேன் என்றார்.

Latest Videos

click me!