இந்த வழக்கு இன்று நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதி வர்மாவின் வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதங்களை முன்வைத்தார். அவர், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய விசாரணை குழு பரிந்துரைத்திருப்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று வாதிட்டார்.
அப்போது, நீதிபதி வர்மாவின் நடத்தை குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். நீதிபதி வர்மாவிடம், அவர் ஏன் உள் விசாரணைக் குழுவின் முன் ஆஜராகி, அவ்வப்போது அதை எதிர்க்கவில்லை எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உள் விசாரணைக் குழுவின் அறிக்கையை எதிர்த்து நீதிபதி வர்மா முன்னதாகவே உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
மேலும், "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒன்றும் தபால் நிலையம் அல்ல. நீதித்துறையின் தலைவர் என்ற முறையில் அவருக்கு நாட்டிற்கான கடமைகள் இருக்கின்றன. தவறான நடத்தை தொடர்பான விவகாரங்கள் வரும்போது அவற்றை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு அனுப்ப வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது" என்று குறிப்பிட்டனர்.