Published : Jul 30, 2025, 10:34 PM ISTUpdated : Jul 30, 2025, 10:41 PM IST
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாஜக அரசு மீட்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் சூளுரைத்தார். பயங்கரவாதிகளை நெற்றியில் சுட்டுக்கொன்றதாகவும், காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலையே முன்னிறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இன்று மாநிலங்களவையில் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த விவாதத்தில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை (POK) பாஜக அரசு நிச்சயமாக மீட்கும் என சூளுரைத்தார். எதிர்க்கட்சிகளின் அமளி மற்றும் வெளிநடப்புக்கு மத்தியிலும் அமித் ஷாவின் பேச்சு கவனத்தைப் பெற்றது.
24
பீகார் வாக்காளர் பட்டியல்
கடந்த 21 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் தொடர்ந்து முடங்கியது. இதன் பின்னர், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. கடந்த இரண்டு நாட்களாக மக்களவையில் இது குறித்து விவாதம் நடைபெற்ற நிலையில், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்டோர் உரையாற்றினர்.
34
ஆபரேஷன் மகாதேவ்
இன்று மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய அமித் ஷா, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள் 'ஆபரேஷன் மகாதேவ்' நடவடிக்கையின் மூலம் நெற்றியில் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார். "மதத்தைக் கேட்டு பெண்கள், குழந்தைகள் கண்முன்னே கொலை செய்யும் கொடூரம் இதுவரை எங்கும் நடைபெறவில்லை. தேசிய பாதுகாப்பிற்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஆனால், அரசியலுக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கிறது," என்று அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
மேலும், "காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலை திருப்திப்படுத்தவே முக்கியத்துவம் கொடுக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்துவிட்டது. ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாஜக அரசு மீட்கும்," என்று அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்தார். முன்னதாக, அமித் ஷா உரையாற்றிக் கொண்டிருந்தபோதே விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை எனக் கூறி மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.