இந்தியாவில் புழக்கத்தில் உள்ள காகித கரன்சி நோட்டுகளை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக பிளாஸ்டிக் (பாலிமர்) கரன்சி நோட்டுகளை அறிமுகப்படுத்தப் போவதாகவும், இது ஜூன் 30, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகப் பல செய்திகள் வைரலாகப் பரவி வருகின்றன. இந்தச் செய்திகள் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், தேவையற்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்தத் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து மத்திய அரசின் செய்திப் பிரிவு (PIB - Press Information Bureau) தற்போது விளக்கம் அளித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இந்தச் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் பொய்யானவை என்று PIB Fact Check தனது எக்ஸ் (X) தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இத்தகைய எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. காகித நோட்டுகளைத் திரும்பப் பெறுவது குறித்தோ அல்லது பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்தோ எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வதந்திகளின் பின்னணி
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அந்த வீடியோவில், 100, 20, 50 மற்றும் 10 ரூபாய் நோட்டுகள் காட்டப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடியின் உரையாடல்கள் இருப்பது போல டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுள்ளது (Digitally Altered). இத்தகைய போலியான வீடியோக்களைக் கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.