No Alcohol Village : இப்போதெல்லாம் ஆண், பெண் பேதமில்லாமல் எல்லோரும் மதுவுக்கு அடிமையாகி வருகிறார்கள். ஆனால், ஆந்திராவில் உள்ள ஒரு கிராமம் கடந்த 26 ஆண்டுகளாக மதுவைத் தொடாமல், மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறது.
ஒரு காலத்தில் மது அருந்துபவர்களை மோசமாகப் பார்த்த சமூகம், இன்று அதுவே ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. ஆனால், இந்த அம்மாபாலம் கிராம மக்கள் மதுவைத் தொடுவதே இல்லை. இந்த முடிவு நேற்று, இன்று எடுத்தது அல்ல. கடந்த 26 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் யாரும் மது அருந்தவில்லை. எங்கே இருக்கிறது இந்த ஊர்? ஏன் இந்த முடிவு? வாருங்கள் பார்க்கலாம்.
23
மது விற்க தடை!
ஆந்திர மாநிலம், ஜங்காரெட்டிகூடம் அருகே உள்ள அம்மாபாலம் கிராமத்தில்தான் கடந்த 26 ஆண்டுகளாக மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்த ஊரில் மது விற்கவும் முடியாது, வெளியாட்களை விற்கவும் விடமாட்டார்கள். கிராம மக்கள் யாரும் மது அருந்த மாட்டார்கள். யாராவது குடிப்பதைப் பார்த்தால் தடுத்து நிறுத்துவார்கள்.
முன்பு, மது பழக்கத்தால் இந்த கிராமத்தில் பல குடும்பங்கள் தங்கள் சொத்துகளை இழந்து வீதிக்கு வந்தன. ஆண்கள் குடித்துவிட்டு வந்து மனைவி, பிள்ளைகளை அடித்துத் துன்புறுத்துவது வாடிக்கையாக இருந்தது. இதனால், ஊர் மக்கள் ஒன்று கூடி மதுவுக்குத் தடை விதித்தனர். வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்குக் கூட குளிர்பானங்கள் மட்டுமே கொடுப்பார்கள். தப்பித்தவறி யாராவது மது அருந்தினால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சில சமயங்களில் கிராம சபை முன்பு மன்னிப்பும் கேட்க வேண்டும். இந்த ஊரைப் பார்த்து, சுற்றியுள்ள கிராம மக்களும் மதுவை விட்டு விலகத் தொடங்கியுள்ளனர்.