
கடந்த மாதம் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து, விமானக் கட்டுப்பாட்டு அறைகளில் (cockpit) வீடியோ கேமராக்களை நிறுவுவது குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. பொதுவாக விமான விபத்துகளை விசாரிக்கும் குழுக்கள் பயன்படுத்தும் காக்பிட் குரல் பதிவுக் கருவி (Cockpit Voice Recorder - CVR) மற்றும் விமானத் தரவுப் பதிவுக் கருவி (Flight Data Recorder - FDR) ஆகியவற்றுடன், விமானிகளின் செயல்களைக் கண்காணிக்க வீடியோ கேமராக்கள் நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மருத்துவ விடுதி வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணத்தை ஆராயும் இந்திய விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கை, சில அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. விமானத்தின் இரு என்ஜின்களுக்கான எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள், புறப்பட்ட சில வினாடிகளிலேயே "RUN" நிலையில் இருந்து "CUTOFF" நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
காக்பிட் குரல் பதிவுக் கருவியில் இருந்து பெறப்பட்ட ஒரு உரையாடலில், ஒரு விமானி மற்றவரிடம் "ஏன் எரிபொருளை நிறுத்தினாய்?" என்று கேட்பதும், அதற்கு மற்றொரு விமானி "நான் செய்யவில்லை" என்று பதிலளிப்பதும் பதிவாகியுள்ளது.
இந்தக் உரையாடல், விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிவதில் உள்ள சிக்கல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இதனால், காக்பிட்டில் ஒரு வீடியோப் பதிவுக் கருவி இருந்திருந்தால், இந்த விபத்து குறித்த பல கேள்விகளுக்குப் பதில் கிடைத்திருக்கும் என்று வாதம் எழுந்துள்ளது.
விமானக் கட்டுப்பாட்டு அறைகளில் வீடியோ கேமராக்களை நிறுவ வேண்டும் என்ற யோசனை புதியது அல்ல. அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) போன்ற அமைப்புகள் 2000ஆம் ஆண்டு முதலே இதைப் பரிந்துரைத்து வருகின்றன. எகிப்திய ஏர்லைன்ஸ் விமானம் விபத்து போன்ற சில சம்பவங்களில், ஒரு விமானி வேண்டுமென்றே விமானத்தை வீழ்த்தியதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. அப்போதும் வீடியோ ஆதாரம் இருந்திருந்தால் விசாரணையை எளிதாக்கியிருக்கும் என்று பலர் வாதிட்டனர்.
சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் (IATA) தலைவரும் முன்னாள் விமானியுமான வில்லி வால்ஷ், சிங்கப்பூரில் நடந்த ஒரு நிகழ்வில், விமானக் கட்டுப்பாட்டு அறைகளில் வீடியோ கேமராக்கள் நிறுவப்பட வேண்உடம் என்ற வாதம் வலுவாகியுள்ளது என்று கூறினார். விமானிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வீடியோ பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியாவில் 2023ஆம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், வீடியோப் பதிவுகள் விசாரணைக் குழுவுக்கு முக்கிய ஆதாரமாக இருந்தன என்று ஆஸ்திரேலிய போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியகம் தெரிவித்தது. இதுபோன்ற சம்பவங்கள், காக்பிட்டில் கேமரா இருக்க வேண்டும் என்ற வாதத்துக்கு வலுவான ஆதாரங்களாக உள்ளன.
ஆனால், இந்த யோசனைக்கு விமானிகள் சங்கங்கள் மற்றும் சில பாதுகாப்பு வல்லுநர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த ஏர் லைன் பைலட்ஸ் அசோசியேஷன் (ALPA) மற்றும் அலைட் பைலட்ஸ் அசோசியேஷன் (APA) போன்ற விமானிகள் சங்கங்கள், காக்பிட் குரல் பதிவுக் கருவிகள் மற்றும் விமானத் தரவுப் பதிவுக் கருவிகள் (Black Box) ஏற்கனவே விபத்துக்கான காரணத்தை நிர்ணயிக்கப் போதுமான தகவல்களை வழங்குகின்றன என்று வாதிடுகின்றன. கேமராக்கள் நிறுவுவது விமானிகளின் தனியுரிமையை (Privacy) அத்துமீறுவதாகும் என்றும் வீடியோ பதிவுகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தனியுரிமை மீறல்: விமானக் கட்டுப்பாட்டு அறை விமானிகளின் பணிபுரியும் இடம் என்றாலும், பல மணிநேரம் அவர்கள் அங்கே பணிபுரிகின்றனர். அவர்களின் ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்வது தனியுரிமையை அத்துமீறுவதாகும்.
தகவல்களின் தவறான பயன்பாடு: விமான நிறுவனங்கள் பதிவுகளை ஒழுங்கு நடவடிக்கைக்காகப் பயன்படுத்தலாம் அல்லது விபத்துக்குப் பிறகு பொதுமக்கள் மத்தியில் அவை கசியலாம் என்ற அச்சம் உள்ளது. ஒரு விமானியின் மரணம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவது அவர்களது குடும்பத்தினருக்கு மிகுந்த வேதனையை அளிக்கும் என்று சிலர் வாதிடுகின்றனர்.
விசாரணையில் மாற்றம் ஏற்படுத்தாது: குரல் மற்றும் தரவுப் பதிவுக் கருவிகள் மூலம் ஏற்கனவே ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன. வீடியோப் பதிவுகள் கூடுதலாக சில தகவல்களை வழங்கினாலும், அவை விசாரணையின் போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தாது என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
பணிச்சூழல் மீதான தாக்கம்: கேமராக்கள் இருப்பது விமானிகளின் சுதந்திரமான செயல்பாட்டைப் பாதிக்கலாம். ஒரு கண்காணிப்பாளர் உற்றுநோக்கிக்கொண்டே இருக்கும் உணர்வால், அவர்கள் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்ய முடியாமல் போகலாம் என்றும் வாதிடுகின்றனர்.
விமானப் பாதுகாப்புக்கும் விமானிகளின் தனியுரிமைக்கும் இடையிலான சமநிலை குறித்த இந்த விவாதம் தொடர்ந்து நடக்கிறது. விமான விபத்துகளின்போது எழும் கேள்விகளுக்கு முழுமையான பதில்களைப் பெறவும், எதிர்கால விபத்துகளைத் தடுக்கவும் கூடுதல் தரவுகள் தேவை என்று சில பாதுகாப்பு வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். மறுபுறம், விமானிகளின் நலன்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விமானிகள் சங்கங்கள் கூறுகின்றன.
அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை எட்டுவது சவாலானது. ஆனால், ஏர் இந்தியா விபத்து, இந்த விவாதத்திற்கு மீண்டும் ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது என்பது உறுதி.