உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில், கங்கை மற்றும் யமுனை நதிகளின் பெருக்கெடுத்த வெள்ளத்தால் பல வீடுகள் மூழ்கியுள்ளன. இந்நிலையில், தன் வீட்டு வாசலில் புகுந்த வெள்ளநீரை ‘கங்கை அன்னை’யாகக் கருதி, ஒரு காவல்துறை துணை ஆய்வாளர் வழிபாடு நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உத்தரப் பிரதேச காவல் துறையின் துணை ஆய்வாளர் சந்திரதீப் நிஷாத், வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தாராகஞ்ச் பகுதியில் உள்ள தனது வீட்டின் முன், வெறுங்காலுடன், கால்சட்டையை மடித்துவிட்டு ஒரு சிறிய வழிபாட்டை நடத்தினார். ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்து, அதனை வெள்ளநீரில் ஊற்றி, பூக்களையும் தூவி கங்கைக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வை வெள்ளப்பெருக்காக அல்லாமல், ஒரு தெய்வீக வருகையாக அவர் கருதினார்.