Published : Aug 04, 2025, 05:09 PM ISTUpdated : Aug 04, 2025, 05:35 PM IST
நாக்பூர் அருகே உள்ள வாடாம்னா கிராமத்தில் நாட்டின் முதல் AI அங்கன்வாடி மையம் தொடங்கப்பட்டுள்ளது. VR ஹெட்செட்டுகள், AI ஸ்மார்ட்போர்டுகள் போன்ற தொழில்நுட்பக் கருவிகள் மூலம் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கப்படுகிறது.
மகாராஷ்டிராவின் நாக்பூர் அருகே உள்ள வாடாம்னா (Waddhamna) என்ற சிறிய கிராமத்தில், நாட்டிலேயே முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த அங்கன்வாடி மையம், நாக்பூர் நகரத்திலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்தில் இருக்கிறது. இங்கு இரண்டு முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகள் படிக்கிறார்கள்.
'மிஷன் பால் பாராரி' திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த அங்கன்வாடி மையம், வழக்கமான ரும்பலகைக்குப் பதிலாக நவீன டிஜிட்டல் போர்டைக் கொண்டுள்ளது. இதனால், கடந்த சில மாதங்களில், இந்த அங்கன்வாடியில் குழந்தைகளின் வருகை இருமடங்காக அதிகரித்துள்ளது. முன்னதாக சுமார் 10 குழந்தைகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினமும் ஆர்வத்துடன் வந்து பயின்று வருகின்றனர்.
24
VR ஹெட்செட்டுகள், AI ஸ்மார்ட்போர்டுகள்
இந்த அங்கன்வாடியில் விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) ஹெட்செட்டுகள், AI ஸ்மார்ட்போர்டுகள், டேப்லெட்டுகள் போன்ற நவீன சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் பாடங்கள் முன்பை விட மிகவும் சுவாரஸ்யமாக மாறியுள்ளன. மாவட்டத்தில் உள்ள 2,200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மையம், வைஃபை இணைப்பு மற்றும் சிசிடிவி கேமராக்கள் போன்ற நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி ஊழியர்களுக்கும் தொழில்நுட்பத்தை எளிதாகப் பயன்படுத்தும் வகையில் பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டது.
34
புதிய கற்றல் முறை
இந்த புதிய டிஜிட்டல் அங்கன்வாடியில், விளையாட்டான செயல்பாடுகள் மூலம் அடிப்படைப் பாடங்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. மெய்நிகர் (Virtual) சுற்றுப்பயணங்கள் அல்லது டிஜிட்டல் போர்டுகள் மூலம் வடிவங்கள், விலங்குகள் மற்றும் பொருட்களை அடையாளம் காண கற்றுத்தரப்படுகிறது. மேலும், ஒவ்வொரு குழந்தையின் கற்றல் வேகத்திற்கு ஏற்ப பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், விரைவாகக் கற்கும் மாணவர்களும், நிதானமாக கற்கும் மாணவர்களும் சமமாகப் பயனடைகின்றனர்.
ஓவியம் வரைதல், பாட்டுப் பாடுதல் மற்றும் கவிதைகள் சொல்வது போன்ற செயல்பாடுகள் இப்போது தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்படுகின்றன. குழந்தைகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க அவர்களது படைப்புகள் டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்கப்படுகின்றன.
இந்த முயற்சி ஏற்படுத்தியுள்ள தாக்கம் உடனடியாகத் தெரியவந்துள்ளது. முன்பு தங்கள் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்பத் தயங்கிய பெற்றோர்கள், இப்போது தங்கள் குழந்தைகள் ஆர்வத்துடன் செல்வதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றனர். அங்கன்வாடிக்கு செல்ல மறுத்த குழந்தைகள் கூட, இப்போது புதிய தொழில்நுட்பக் கருவிகளுடன் மகிழ்ச்சியாகப் பங்கேற்க ஆவலுடன் உள்ளனர்.
வாடாம்னா கிராமத்தில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட இந்த மாதிரி அங்கன்வாடி திட்டம், மாவட்டத்தில் உள்ள மேலும் 40 அங்கன்வாடிகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளும் நவீன முறையில் கல்வியை பெற முடியும் என்பதற்கு இந்த முன்னோடித் திட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.