தடைசெய்யப்பட்ட யுஎல்எஃப்ஏ(ஐ) (ULFA-I) அமைப்பு, மியான்மர் எல்லையில் உள்ள அதன் முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13, 2025) தெரிவித்துள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை இந்தியப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மறுக்கின்றனர்.
பிடிஐ செய்தி நிறுவனத்தின்படி, யுஎல்எஃப்ஏ(ஐ) அமைப்பு, அதிகாலையில் பல நடமாடும் முகாம்கள் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் தடைசெய்யப்பட்ட அமைப்பின் ஒரு மூத்த தலைவர் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது. மேலும், இந்த தாக்குதல்களில் 19 பேர் காயமடைந்ததாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பிடிஐ குவஹாத்தியில் உள்ள பாதுகாப்பு செய்தித் தொடர்பாளரைத் தொடர்பு கொண்டபோது, இதுபோல ஒரு சம்பவம் நடந்ததாக எந்தத் தகவலும் இல்லை என்று தெரிவித்தார். லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத், "இந்திய ராணுவத்திடம் இதுபோன்ற ஒரு நடவடிக்கை குறித்த எந்தத் தகவலும் இல்லை" என்று கூறியுள்ளார்.