துபாய் விமானக் கண்காட்சி 2025-ல் இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம், வான் சாகசத்தின் போது விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானி உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் குறித்து இந்திய விமானப் படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த துபாய் விமானக் கண்காட்சி (Dubai Air Show 2025) நிகழ்ச்சியில், இந்திய விமானப் படையின் (IAF) 'தேஜஸ்' (Tejas) இலகுரகப் போர் விமானம் விபத்துக்குள்ளானதில், விமானி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த துபாய் விமானக் கண்காட்சி (Dubai Air Show 2025) நிகழ்ச்சியில், இந்திய விமானப் படையின் (IAF) 'தேஜஸ்' (Tejas) இலகுரகப் போர் விமானம் விபத்துக்குள்ளானதில், விமானி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
26
விபத்து நடந்தது எப்படி?
துபாயில் உள்ள அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில், விமானக் கண்காட்சியின் கடைசி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2:08 மணியளவில் வானில் சாகசப் பயிற்சி (aerial display) நிகழ்த்தப்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
வானில் வட்டமடித்து மேலே சென்ற தேஜஸ் விமானம், திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து கீழே இறங்கி, தரையில் மோதி வெடித்துச் சிதறியது.
விபத்து நடந்தவுடன், அப்பகுதி முழுவதும் கருப்புப் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. மீட்பு மற்றும் தீயணைப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் 45 நிமிடங்களில் மீட்புப் பணிகள் முடிவடைந்தன.
கண்காட்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பார்வையாளர்கள் அனைவரும் கண்காட்சிப் பகுதிக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகக் கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
36
விமானப் படை உறுதிப்படுத்தல்
இந்த விபத்து குறித்து இந்திய விமானப் படை தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் விபத்தில் விமானி உயிரிழந்ததை உறுதிசெய்துள்ளது. "துபாய் விமானக் கண்காட்சியில் சாகசப் பயிற்சியின்போது இந்திய விமானப் படையின் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி வீர மரணம் அடைந்தார். இந்தச் சோகமான தருணத்தில் உயிரிழந்த விமானியின் குடும்பத்துடன் உறுதுணையாக நிற்கிறோம். இந்த விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணைக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று விமானப்படை தெரிவித்துள்ளது.
விமான நிபுணர்களின் கருத்துப்படி, விமானி 'பேரல் ரோல்' (Barrel Roll) என்ற சாகசத்தை நிகழ்த்த முயன்றிருக்கலாம். இது விமானம் முன்னோக்கிச் செல்லும்போது முழுமையாகச் சுழலும் ஒரு சாகசமாகும்.
இந்தச் சாகசத்தை முடிப்பதற்குத் தேவையான அளவுக்கு வேகத்தில் செல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது தரையிலிருந்து விமானம் மிகவும் குறைந்த உயரத்தில் இருந்ததால், மீண்டும் மேலெழும்ப முடியாமல் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
தேஜஸ் விமானம் இதுவரை கிட்டத்தட்ட குறைபாடுகளே இல்லாத பாதுகாப்பான வரலாற்றைக் கொண்டிருந்த நிலையில், இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
56
தேஜஸ் விமானத்தில் எண்ணெய் கசிவா?
விபத்துக்கு ஒரு நாள் முன்னதாக, துபாய் விமானக் கண்காட்சியில் தேஜஸ் விமானத்தில் 'எண்ணெய் கசிவு' ஏற்பட்டதாகச் சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. அந்த வதந்திகளுக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்தது.
PIB Fact Check வெளியிட்ட அறிக்கையில், விமானத்தில் இருந்து திரவம் கசிந்தது இயந்திரக் கோளாறால் ஏற்பட்டது அல்ல என்றும், விமானத்தில் இருக்கும் ஏசி உள்ளிட்ட சாதனங்களில் இருந்து நீர் வெளியேறுவது வழக்கமான செயல்முறை என்றும் தெளிவுபடுத்தியது.
இந்தத் தவறான தகவல்கள் விமானத்தின் நம்பகத்தன்மையைக் குறைக்கும் நோக்குடன் பரப்பப்படுவதாக அரசு அப்போதே கூறியிருந்தது.
66
தேஜஸ் போர் விமானம் பற்றி
தேஜஸ் என்பது இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ADA) ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்ட, ஒற்றை எஞ்சின் கொண்ட பல்துறை இலகுரகப் போர் விமானம் ஆகும். 'தேஜஸ்' என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு 'ஒளி' என்று பொருள்.