ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநரான சுரேகா யாதவ், இந்திய ரயில்வேயில் 36 ஆண்டுகால புகழ்பெற்ற சேவைக்குப் பிறகு ஓய்வு பெறுகிறார். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த துறையில் வந்தே பாரத் உள்ளிட்ட பல ரயில்களை இயக்கி, ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் மற்றும் இந்திய ரயில்வேயின் முன்னோடியான சுரேகா யாதவ், தனது 36 ஆண்டுகால புகழ்பெற்ற சேவைக்குப் பிறகு வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இந்திய ரயில்வே துறையில் ஆண்களின் ஆதிக்கம் நிறைந்திருந்த காலகட்டத்தில் பாலின தடைகளை உடைத்து, எண்ணற்ற பெண்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் சுரேகா யாதவ்.
25
யார் இந்த சுரேகா யாதவ்?
மகாராஷ்டிராவின் சத்தாரா மாவட்டத்தில் பிறந்த சுரேகா யாதவ், 1989 ஆம் ஆண்டு இந்திய ரயில்வேயில் உதவி ஓட்டுநராக தனது பணியைத் தொடங்கினார். அதன் மூலம், ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார்.
35
சவாலான பணி
மின்னியல் பொறியியலில் பட்டயப் படிப்பு முடித்திருந்த சுரேகா யாதவ், தனது திறமையால் பல்வேறு சவாலான பணிகளை ஏற்றுக்கொண்டார். 1996 இல் சரக்கு ரயிலை இயக்கத் தொடங்கிய அவர், 2000 ஆம் ஆண்டில் உள்ளூர் ரயில் ஓட்டுநராகவும், அதற்குப் பிறகு காட் டிரைவர் (மலைப்பாதைகளில் ரயில் இயக்கும் ஓட்டுநர்) ஆகவும் தகுதி பெற்றார்.
தனது நீண்ட பயணத்தில், பல அஞ்சல் மற்றும் அதிவிரைவு ரயில்களை ஓட்டி, இந்திய ரயில்வேயில் மிகவும் மதிக்கப்படும் பெயர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 2023 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி, சோலாப்பூரில் இருந்து மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் (CSMT) வரையிலான வந்தே பாரத் விரைவு ரயிலின் முதல் பயணத்தை இயக்கி, தனது புகழ்பெற்ற வாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லை எட்டினார்.
55
36 ஆண்டுகளுக்குப்பின் பணி ஓய்வு
தனது சேவையின் அடையாளமாக, செப்டம்பர் 18 ஆம் தேதி, இகாட்புரிக்கும் மும்பைக்கும் இடையே ராஜ்தானி விரைவு ரயிலை இயக்கி தனது கடைசிப் பணியை நிறைவு செய்தார். இது குறித்து மத்திய ரயில்வே தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “சுரேகா யாதவ் 36 ஆண்டுகால சேவைக்குப் பிறகு செப்டம்பர் 30 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். ஒரு உண்மையான முன்னோடியான அவர், தடைகளை உடைத்து, எண்ணற்ற பெண்களுக்கு ஊக்கமளித்து, எந்த கனவும் எட்ட முடியாததல்ல என்பதை நிரூபித்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளது.