Supreme Court Says Stray Dogs Do Not Need To Be Kept In Shelters
இந்தியா முழுவதும் தெரு நாய்களின் தொந்தரவு மிக அதிகமாக உள்ளது. குழந்தைகள், பெண்கள் என சாலைகளில் நடமாடுபவர்கள் அனைவரையும் விரட்டி விரட்டிக் கடிக்கும் தெரு நாய்கள், சாலை விபத்துகளுக்கும் முக்கிய காரணமாகி வருகின்றன. தெரு நாய்கள் அண்மையில் பெங்களூருவை சேர்ந்த 4 வயது சிறுமி பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதற்கிடையே டெல்லியிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், ஒரு குழந்தையை தெரு நாய்கள் கடித்த வீடியோ வைரலானது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் டெல்லி-NCR பகுதிகளில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் உடனடியாகப் பிடித்து, அவற்றைச் சிறப்பு காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டனர். எந்த காரணம் கொண்டும் அவற்றை மீண்டும் சாலைகளில் விடக்கூடாது என்று தெரிவித்து இருந்தனர்.
பொங்கியெழுந்த விலங்குகள் நல ஆர்வலர்கள்
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக விலங்குகள் நல ஆர்வலர்கள் கடுமையாக பொங்கினார்கள். மனிதர்களின் நலனுக்காக வாயில்லா ஜீவன்களை வதைப்பதா? என்று கூறி அவர்கள் தெரு நாய்களுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினார்கள். மேலும் நாய்களை காப்பங்களில் அடைக்க உத்தரவிட்டதை திரும்ப பெற வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன.
35
நாய்களை காப்பங்களில் அடைக்க தேவையில்லை
இந்நிலையில், டெல்லி தெரு நாய்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி-NCR பகுதிகளில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் உடனடியாகப் பிடித்து, அவற்றைச் சிறப்பு காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதாவது 2 அமர்வு நீதிபதிகள் நாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், இன்று 3 அமர்வு கொண்ட நீதிபதிகள் டெல்லி தெரு நாய்களை காப்பங்களில் அடைக்க தேவையில்லை தெரிவித்தனர்.
தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை ஊசி மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி மீண்டும் தெருவிலேயே விடலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். அதேவேளையில் ஆக்ரோஷமான, ரேபிஸ் போன்ற நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நாய்களை மீண்டும் தெருவில் விடாமல் காப்பகத்தில் தனியாக அடைத்து வைக்க வேண்டும்
தெருக்களில் நாய்களுக்கு உணவளிக்க தனி இடத்தை ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களில் உணவளிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
55
நாய்களால் பாதிக்கப்படுபவர்கள் அதிருப்தி
இதேபோல் அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் உள்ள தெரு நாய் விவகார வழக்குகளும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தெரு நாய்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் பொருந்தக் கூடிய ஒட்டுமொத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் எனக்கூறிய உச்சநீதிமன்றம் இது தொடர்பாக அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு நாய் பிரியர்களின் வயிற்றில் பாலைவார்ப்பதாக அமைந்துள்ளது. அதே வேளையில் தெரு நாய்களால் பாதிக்கப்படும் மகக்ள் உச்சநீதிமன்ற தீர்ப்பால் அதிருப்தி அடைந்துள்ளனர்.