Doorless Village: ஒரு கிராமத்தில் பல வீடுகளுக்கு வழக்கமான கதவுகளே இல்லை என்றால் நம்ப முடிகிறதா? அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளையும் பொருட்களையும் பாதுகாக்க பூட்டுகளை பயன்படுத்தாமல் வாழ்ந்து வருகிறார்கள்.
மகாராஷ்டிராவின் அஹல்யாநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஷானி ஷிங்னாபூர், சனி பகவான் கோயிலுக்காகவும் தனித்துவமான வீட்டு அமைப்புக்காகவும் பிரபலமானது. இந்த கிராமத்தில் பாரம்பரியமாக பல வீடுகளுக்கு கதவுகள் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. கடைகள் மற்றும் பிற கட்டிடங்களிலும் வழக்கமான பூட்டுகளை பயன்படுத்தாத பழக்கம் இருந்ததாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக சனி பகவான் தங்களை திருட்டு மற்றும் தீமைகளில் இருந்து காப்பார் என்ற மக்களின் ஆழமான நம்பிக்கை.
25
வெள்ளத்தில் வந்த கருங்கல்
இந்த நம்பிக்கைக்கு சுமார் 300 ஆண்டுகள் பழமையான உள்ளூர் புராணக்கதை ஒன்று காரணம். ஒரு காலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்துக்குப் பிறகு பனஸ்னாலா நதியில் ஒரு பெரிய கருங்கல் மிதந்து வந்ததாகக் கதை செல்கிறது. கிராம மக்கள் அந்தக் கல்லை குச்சியால் தொட்டபோது, அதிலிருந்து ரத்தம் போன்ற திரவம் வெளியேறியதாக நம்பப்படுகிறது. பின்னர் அந்த இரவில் கிராமத் தலைவரின் கனவில் சனி பகவான் தோன்றி, அந்தக் கல் தனது சுயரூபம் என்று தெரிவித்ததாக உள்ளூர் மரபுக் கதை கூறுகிறது.
அந்தக் கல்லை எந்தக் கூரையின் கீழும் வைக்காமல், திறந்த வானத்தின் கீழ் நிற்க வேண்டும் என்றும் சனி பகவான் அறிவுறுத்தியதாக உள்ளூர் நம்பிக்கை கூறுகிறது. இதன் அடிப்படையில்தான் சனி பகவானின் கல் வடிவம் திறந்த வெளியில் வழிபடுவதாக கூறப்படுகிறது. காலப்போக்கில், சனி பகவான் கிராமத்தை பாதுகாப்பார் என்ற நம்பிக்கை வலுவடைந்து, வீடுகளுக்கு கதவு மற்றும் பூட்டு தேவையில்லை என்ற பாரம்பரியத்துடன் இது இணைந்தது. இங்கு திருடுபவர்களுக்கு சனி பகவானின் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
இந்த கிராமத்தில் திருத்தே நடக்காது என்பது மிகவும் பிரபலமானது என்றாலும், வரலாற்றில் நடந்த திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 2010-ல் ஒரு வாகனத்தில் இருந்து சுமார் ரூ.35,000 மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டதாகவும், 2011-ல் ரூ.70,000 மதிப்புள்ள தங்க நகைகள் தொடர்பான திருட்டு வழக்கு பதிவானதாகவும் கூறப்படுகிறது. இதனால், தெய்வீக பாதுகாப்பு குறித்த நம்பிக்கைக்கும் நடைமுறை பாதுகாப்பு தேவைக்கும் இடையே வேறுபாடு தெளிவாக உள்ளது.
55
வங்கி, காவல் நிலையத்துக்கும் கதையுண்டு
இந்த பாரம்பரியம் தனியார் வீடுகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இங்குள்ள வங்கி மற்றும் காவல் நிலையம் தொடர்பாக கதவுகள் இல்லாத அமைப்பு குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக 2011-ல் UCO வங்கியின் கிளை “பூட்டு இல்லாத வங்கி” என்ற செய்தியால் கவனம் பெற்றது. ஆனால் பாதுகாப்பு முற்றிலும் இல்லாததாக அர்த்தமில்லை. கண்ணாடிக் கதவு மற்றும் மின்காந்த பூட்டுதல் அமைப்பு போன்ற பாதுகாப்பு வசதிகள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, ஷனி ஷிங்னாபூரை வெறும் "கதவு இல்லாத கிராமம்" என்று பார்ப்பதைவிட, நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் நவீன பாதுகாப்பு ஆகியவை ஒன்றாகக் காணப்படும் இடமாகப் புரிந்துகொள்வது பொருத்தமானது.