Published : Feb 05, 2026, 03:29 PM ISTUpdated : Feb 05, 2026, 03:54 PM IST
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்ததாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். தமிழக பெண் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா மீது குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பகீர் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தீர்மானத்தின் மீதான பதிலுரையை பிரதமர் மோடி நேற்று (பிப்ரவரி 4) வழங்க இருந்தார். இது தொடர்பாக மக்களவையில் அவர் பேசவிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் பிரதமர் உரையாற்றவில்லை எனக்கூறி மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
24
ஜோதிமணி, சுதா மீது சபாநாயகர் பகீர் குற்றச்சாட்டு
இந்த நிலையில் தான் ''நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டனர். அதனால் அவரை நான் தான் நாடாளுமன்றத்துக்கு வர வேண்டாம் என்று கூறியிருந்தேன்'' என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா ஆகியோர் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சம்பவத்தை பிரதமருக்கு எதிராக திட்டமிட்டு இருந்ததாகவும் ஓம்பிர்லா குற்றம்சாட்டியிருக்கிறார்.
34
ஓம் பிர்லா பேசியது என்ன?
இது தொடர்பாக பேசிய ஓம் பிர்லா ''நேற்று அவையில் என்ன நடந்தது என்பதை நாடு பார்த்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் பிரதமர் இருக்கையை நோக்கி எப்படிச் சென்றார்கள் என்பதையும் அனைவரும் பார்த்தனர்.
ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்கக்கூடும் என்ற தகவல் எனக்குக் கிடைத்தது. இதுபோன்ற ஒரு சூழ்நிலை மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, பிரதமர் மோடியை இன்று அவைக்கு வர வேண்டாம் என்று நான் தெரிவித்தேன்'' என்று கூறினார்.
நாடாளுமன்றத்தில் கடந்த ஒரு வாரமாக குடியரசுத் தலைவர் உரையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி சீனா இந்தியா நிலப்பகுதியை ஆக்கிரமித்து விட்டதாக குற்றசாட்டினார்.
இதற்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் காந்தியை பேச விடாமல் தடுப்பதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா ஆகியோர் பிரதமர் மோடி இருக்கையை சூழ்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
அப்போது பிரதமர் இல்லை. பிரதமர் மோடி நேற்று மாலை 5 மணிக்கு உரையாற்றுவதாக இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் சதியை முன்கூட்டியே அறிந்து பிரதமரை வர வேண்டாம் என சபாநாயகர் மற்றும் பாஜக எம்.பி.க்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.