கடந்த சில ஆண்டுகளாக, தென்னிந்திய மாநிலங்களில் நாய்களைப் பெருமளவில் கொல்வது குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இந்த விவகாரம் விலங்கு ஆர்வலர்களின் கடுமையான எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக, தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் உள்ள அனைத்து தெருநாய்களையும் பிடித்து காப்பகங்களில் வைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு வலுவான ஆட்சேபனைகள் எழுந்தன.
சமீபத்தில், பெங்களூருவில் இரண்டு கல்லூரி மாணவர்கள் தெருநாய்களால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் கர்நாடக சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. பெங்களூருவின் அம்பேத்கர் பொருளாதாரப் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி படிக்கும் அந்த மாணவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த மாதம், கர்நாடகாவின் கோடிகெஹள்ளி பகுதியில், தனது வீட்டின் வெளியே நின்ற 70 வயது முதியவர், தெருநாய்கள் கூட்டத்தால் கடித்துக் குதறப்பட்டு உயிரிழந்தார். முன்னதாக, பழைய ஹுப்பள்ளியில் உள்ள ஷிம்லா நகரில், மூன்று வயது சிறுமி ஒரு குழுவாக வந்த தெருநாய்களால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலின் சிசிடிவி காட்சிகள், நாய்கள் சிறுமியின் தோள்பட்டை, முதுகு, கால்கள் மற்றும் கைகளைக் கடித்து அவரைத் தரையில் இழுத்துச் செல்வதைக் காட்டின. அச்சிறுமி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.