கேரளா நிலச்சரிவு
கேரளாவில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது வரை மீட்புப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை அரசு உறுதி வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆடி அமாவாசை
ஆடி மாதத்தில் வரும் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வானது ஆற்றங்கரையோரங்களில் அதிக அளவில் நடைபெறும் நிகழ்வானது அடுத்தடுத்த நாட்களில் கேரளாவில் நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பக்தர்கள் நதிக்கரை ஓரங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய இருக்கிறார்கள். அதேபோல அந்த நேரங்களில் முக்கிய கோவில்களுக்கும் பக்தர்கள் படை எடுப்பர்.
சபரிமலை கோவில்
இந்த சூழலில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு முக்கியமான வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வரும் ஆகஸ்ட் 4 மற்றும் 5ம் தேதிகளில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் அதிகமாக வர இருப்பதால் அங்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை கேரளா அரசு மட்டுமல்லாது மாவட்ட நிர்வாகம், உள்ளூர் நிர்வாகமும் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கேரளா உயர்நீதிமன்றம்
வரக்கூடிய பக்தர்களுக்கு பாதுகாப்பான முறையில் வழிபாடு நடத்துவதற்கும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என கேரள காவல்துறைக்கும், தேவசம்போர்டு அதிகாரிகளுக்கும் உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. சபரிமலை மட்டுமல்லாது வயநாடு, கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் உள்ள நதிக்கரைகளிலும் தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.