இஸ்ரோவின் முக்கிய மையமான நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டரின் (என்ஆர்எஸ்சி) செயற்கைக்கோள் படங்கள், கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் ஏற்பட்ட விரிவான சேதத்தை காட்டுகின்றன.
இஸ்ரோவின் முக்கிய மையமான நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டரின் (என்ஆர்எஸ்சி) செயற்கைக்கோள் படங்கள், கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் ஏற்பட்ட விரிவான சேதத்தை காட்டுகின்றன. இதுவரை 150 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். குறைந்தது 200 பேர் காயமடைந்துள்ளனர். தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
மேகங்களை ஊடுரும் ரேடாரைக் கொண்ட செயற்கைக்கோளான ரிசாட் மற்றும் மேம்பட்ட ஆப்டிகல் செயற்கைக்கோளான கார்டோசாட் -3 ஆகியவை கேரள நிலச்சரிவு நடைபெற்ற இடத்தைப் படம்பிடித்துள்ளன. நிலச்சரிவுக்கு முன்பும் பின்பும் எடுக்கப்பட்ட படங்களை ஒப்பிடும்போது, ஏறக்குறைய 86,000 சதுர மீட்டர் நிலம் சரிந்திருப்பதைக் காணமுடிகிறது. நிலச்சரிவால் உருவான இடிபாடுகள் இருவாய்ப்புழா ஆற்றில் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டு பாதையில் உள்ள குடியிருப்புகளை நாசமாக்கியுள்ளன.
ஹைதராபாத்தில் உள்ள NRSC நிறுவனம் நிலச்சரிவு சூரல்மலை நகருக்கு அருகே கடல் மட்டத்திலிருந்து 1,550 மீட்டர் உயரத்தில் நிலச்சரிவு உருவானது என்று தெரிவிக்கிறது. இஸ்ரோவின் அறிக்கை அதே இடத்தில் முன்பு நிலச்சரிவு ஏற்பட்டதற்கான ஆதாரங்களைக் காட்டுகிறது.
பிப்ரவரி 2023 இல், இஸ்ரோ இந்தியாவின் நிலச்சரிவு அட்லஸை வெளியிட்டது. 1998-2022 வரை இமயமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள 17 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் ஏற்பட்ட சுமார் 80,000 நிலச்சரிவுகளை இஸ்ரோவின் நிலச்சரிவு அட்லஸ் ஆவணப்படுத்தியுள்ளது. உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் மற்றும் வான்வழிப் படங்களைப் பயன்படுத்தி, பருவகால, நிகழ்வு அடிப்படையிலான மற்றும் பாதை வாரியான தரவுகள் மூலம் இந்த அட்ஸ் தயாரிக்கப்பட்டது.
55
கடந்தகாலத்தில் ஏற்பட்ட முக்கிய பேரிடர்களை உள்ளடக்கிய இந்த அட்லஸ், நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சமூக-பொருளாதார காரணிகளின் அடிப்படையில் 147 மாவட்டங்களை வரிசைப்படுத்தியுள்ளது. அந்தப் வரிசையில் வயநாடும் உள்ளது குறிப்பிடத்தக்கது.