திருப்பதி லட்டுகளில் டாய்லெட் கிளீனிங் கெமிக்கல்.! மீண்டும் புயலை கிளப்பிய முதல்வர் சந்திரபாபு நாயுடு!

Published : Feb 07, 2026, 10:16 AM IST

திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் கழிவறை சுத்தம் செய்யும் ரசாயனங்கள் கலக்கப்பட்டதாக முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.

PREV
16
திருப்பதி லட்டு

முன்னாள் முதல்வர் ஜெகன்மோகனில் ஆட்சி காலத்தில் உலக புகழ்பெற்ற திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் போன்றவை கலந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கழிவறை சுத்தம் செய்யும் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

26
கழிவறை சுத்தம் செய்யும் ரசாயனங்கள்

கர்னூல் மாவட்டத்தின் கலுகோட்லா கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசுகையில்: முந்தைய ஜெகன் மோகன் ஆட்சி காலத்தில் லட்டுகளில் கழிவறை சுத்தம் செய்யும் ரசாயனங்களால் தயாரிக்கப்பட்ட நெய்யைப் பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம், புனிதமான திருமலை கோவிலின் பிரசாதத்தின் புனிதத்தையும், ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் பெருமையையும் கெடுத்துள்ளனர். திருப்பதி மட்டுமல்ல, புகழ்பெற்ற ஸ்ரீசைலம் கோவிலுக்கும் இதே போன்ற கலப்பட நெய் வழங்கப்பட்டது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

36
5 ஆண்டுகளாக மோசடி

'சுமார் ஐந்து ஆண்டுகளாக, முந்தைய அரசாங்கத்தின் ஆட்சியில் ரசாயனம் கலந்த நெய்யே லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது. நெய்யில் இரண்டு வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று தாவர அடிப்படையிலானது, அது விலை உயர்ந்தது. ஆனால் விலங்குகளின் கொழுப்பு (Animal Fat) மலிவாகக் கிடைக்கிறது. பணத்தை மிச்சப்படுத்தும் பேராசையில், கடவுளின் பிரசாதத்தைக் கூட விட்டுவைக்காமல் அநியாயம் செய்துள்ளனர். இதற்கு தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் (NDDB) அறிக்கையே சாட்சி. இந்த அறிக்கையின்படி, நெய்யில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

46
சிபிஐ க்ளீன் சிட் குறித்து விளக்கம்

ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர்கள், சிபிஐ தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு (SIT) இந்த வழக்கில் க்ளீன் சிட் வழங்கியுள்ளதாகக் கூறி வருகின்றனர். இதற்குப் பதிலடி கொடுத்த நாயுடு, 'ஜெகனின் சித்தப்பாவும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான ஒய்.வி. சுப்பா ரெட்டியே முன்பு கலப்படம் நடந்ததை ஒப்புக்கொண்டிருந்தார். இப்போது எஸ்.ஐ.டி அறிக்கையைக் காரணம் காட்டி தப்பிக்கப் பார்க்கிறார்கள். ஆனால், எனது அரசு இந்த தவறுகளைச் சரிசெய்ய முயன்று வருகிறது. இப்போது தயாரிக்கப்படும் லட்டுகளுக்கும், முந்தைய அரசின் ஆட்சியில் தயாரிக்கப்பட்ட லட்டுகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்று கூறினார்.

56
குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை

இதற்கு முன்பு வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு: நெய் கலப்படம் என்பது கடவுளுக்கு எதிராகச் செய்யப்பட்ட மகா பாவம். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாரையும் நான் சும்மா விடமாட்டேன். எஸ்.ஐ.டி அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க ஒரு நபர் குழு அமைக்கப்படும்' என்று அறிவித்தார். 2022-லேயே மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CFTRI) வழங்கிய அறிக்கையில் கலப்படம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், முந்தைய அரசு அதைத் தொடர்ந்தது என்று அவர் குற்றம் சாட்டினார்.

66
முதல்வர் குற்றச்சாட்டுக்கு மறுப்பு

சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள ஒய்.எஸ்.ஆர்.சி.பி மாநிலங்களவை எம்.பி. ஒய்.வி. சுப்பா ரெட்டி, '2022 சி.எஃப்.டி.ஆர்.ஐ அறிக்கையில் கலப்படம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக எங்கும் கூறப்படவில்லை. நானே கடிதம் எழுதிப் பரிசோதனைக்கு அனுப்பினேன். அப்படியிருக்க, நான் அறிக்கையை மறைத்தேன் என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை. எஸ்.ஐ.டி அறிக்கை க்ளீன் சிட் கொடுத்த பிறகும், தெலுங்கு தேசம் கட்சி அரசு பொய்ச் செய்திகளைப் பரப்புகிறது என்றார்.

மொத்தத்தில், திருப்பதி லட்டுவின் புனிதத்தன்மை குறித்த விவகாரம் இப்போது அரசியல் களமாக மாறியுள்ளது. பக்தர்களின் நம்பிக்கை விஷயத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories